கேரளாவில் மேலும் 15 பேருக்கு ஜிகா வைரஸ்… அடுத்தடுத்த வைரஸ் தாக்குதலால் பீதியில் கடவுளின் தேசம்..!!

9 July 2021, 4:40 pm
zika virus - updatenews360
Quick Share

கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்றுக்கு 15 பேர் பாதிக்கப்பட்டிருப்பது அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளது. அதிகளவில் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் தொற்றின் தாக்கம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், அண்டை மாநிலமான கேரளாவில் நாள்தோறும் சராசரி பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தை எட்டியே வருகிறது. இதனால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் அம்மாநில அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

கேரளாவில் முதல்முறையாக ஜிகா வைரஸ் பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது. பாறசாலை என்னும் பகுதியில் 24 வயது பெண்ணுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதித்த நிலையில் பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதேவேளையில், அந்தப் பெண்ணின் தாயார் உள்ளிட்ட 13 பேரின் மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. இந்த நிலையில், கர்ப்பிணி பெண் உள்பட 15 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

டெங்கு, சிக்கன்குனியா ஆகிய நோய்களை பரப்பக்கூடிய கொசுக்களின் மூலமாகவே ஜிகா வைரஸும் பரவுகிறது. பொதுவாக, மழைக்காலங்களில் இந்த நோய் பரவக்கூடியதாகும். எனவே, தண்ணீர் தேங்குவதை தவிர்த்தால் இந்த நோயில் இருந்து தப்பிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், கர்ப்பிணிகளுக்கு இந்த ஜிகா வைரஸ் பாதித்தால், அவர்களின் சிசுக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும், ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நபருடன் உடல்ரீதியான உறவு வைத்துக்கொண்டாலும் இந்த வைரஸ் பரவும் ஆபத்து உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றை போலவே இதுவரை ஜிகா வைரசுக்கு எந்தத் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை’ என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 111

0

0