உடைகிறதா திமுக கூட்டணி…? வைகோவைத் தொடர்ந்து ஸ்டாலினின் முடிவுக்கு போர்க்கொடி தூக்கிய ஈஸ்வரன்..!!

By: Babu
16 October 2020, 1:41 pm
Quick Share

சென்னை : வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து போட்டியிடும் கட்சிகள், ஸ்டாலினின் முடிவுக்கு எதிராக அடுத்தடுத்து அறிக்கை விட்டு வருவது திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக எதிர்கட்சியாகவே இருந்து வரும் திமுக, தற்போது கருணாநிதி இல்லாமல், முதல்முறையாக ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளது. எனவே, பெரும் தொகைக்கு அரசியல் ஆலோசகரை நியமித்து தேர்தல் நடவடிக்கைகளை அவர் முடுக்கி வருகிறார்.

அந்த வகையில், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்றும், கூட்டணி கட்சிகளையும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடச் செய்ய வேண்டும் என்பதே ஸ்டாலினின் முடிவாக இருந்து வருகிறது. ஆனால், இதனை வெளிப்படையாக சொல்ல முடியாத அவரோ, மறைமுகமாக, கூட்டணி கட்சிகளுக்கு எச்சரிக்கை மணியை அடித்து வருகிறார். இதனால், திமுக கட்சியில் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எப்போது வேண்டுமானாலும் வெளியறலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

அதேவேளையில், திமுக கூட்டணியில் இருந்தவாறு போட்டியிட்டாலும், தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர். அதில், தற்போது திருமாவளவன் மட்டும் மீண்டும் திமுகவின் முடிவை ஏற்றுக் கொள்ளுவதற்கு இசைவு கொடுத்துள்ளார். இதுவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், வைகோவோ தனது முடிவில் கண்டிப்பாக இருந்து வருகிறார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சியின் தலைமை ஈடுபட்டு வருகிறது.

திமுகவின் முடிவுக்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்தால், ஏனைய கூட்டணி கட்சிகளும் அதனையே செய்வார்கள், பிறகு கூட்டணியில் விரிசல் ஏற்படும் என திமுகவினர் புலம்பி வருகின்றனர்.

இந்த நிலையில், எதிர்பார்த்ததைப் போலவே, திமுகவின் மற்றொரு கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரனும் ஸ்டாலினின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டதால்தான், தனக்கு பதிலாக சின்ராஜுக்கு வாய்ப்பு கொடுத்து எம்பியாக்கினார். ஆனால், தற்போது எம்எல்ஏ கனவில் மிதந்து வரும் ஈஸ்வரன், தனிச்சின்னத்தில் போட்டியிட்டு தான் எம்எல்ஏவாக தேர்வாக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். இது குறித்து திமுக தலைமையை தொடர்பு கொண்டு ஈஸ்வரன் பேசியதாகவும், அப்போது, தனிச்சின்னத்தில் போட்டியிடக் கூடாது என்பது பற்றியெல்லாம் எதுவும் முடிவு செய்யவில்லை எனக் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒருவேளை திமுகவின் முடிவுக்கு கூட்டணி கட்சிகள் உடன்படாமல் இருந்தால், அந்தக் கட்சிகளை கழற்றி விட முக ஸ்டாலின் தயாராக இருப்பதாகவும், அதேவேளையில், சின்னம் விவகாரத்தில் அழுத்தம் கொடுத்தால், கூட்டணியை முறித்துக் கொள்ளவும் கூட்டணிக் கட்சிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிகிறது.

Views: - 53

0

0