கார் பள்ளத்தில் கவிழ்ந்து குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி : தீபாவளியைக் கொண்டாடி விட்டு திரும்பிய போது நிகழ்ந்த சோகம்

Author: Babu Lakshmanan
6 November 2021, 10:07 am
Quick Share

தீபாவளியைக் கொண்டாடுவதற்காக சுற்றுலாச் சென்று விட்டு திரும்பிய போது, பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மதுரை – தேனூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல். இவர் தீபாவளியைக் கொண்டாடுவதற்காக, தனது குமனைவி நந்தினி, குழந்தை மற்றும் மாமியார் அழகுராணி மற்றும் நண்பர் கார்த்திக்குடன் காரில் கொடைக்கானல் சென்றுள்ளார். அங்கு சுற்றுலாவை முடித்துக் கொண்ட அவர்கள், நேற்றிரவு கொடைக்கானலில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினர்.

அடுக்கம் வழியாக பெரியகுளம் சாலையில் வந்து கொண்டிருக்கும் போது, வளைவில் திரும்புகையில் கட்டுப்பாட்டை இழந்த கார் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார், பள்ளத்தில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில், கோகுலின் மனைவி நந்தினி, குழந்தை தன்யா மற்றும் மாமியார் அழகு ராணி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த கோகுல் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக, கனமழை மற்றும் இரவு நேர மேகமூட்டத்தால் சாலை சரியாக தெரியாததால் கார் விபத்துக்குள்ளாகியது தெரிய வந்தது.

தீபாவளிக்கு கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 496

0

0