இதுக்கு ஒரு முடிவே இல்லயா..? 6வது கட்சிக்கு தாவிய கோவை செல்வராஜ்… அவர் சொன்ன காரணம் தான்..? கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்…!!

Author: Babu Lakshmanan
7 December 2022, 5:13 pm
Quick Share

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த கோவை செல்வராஜ், திடீரென திமுகவில் இணைந்தது கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்த பேச்சு எழத் தொடங்கிய பிறகு, இபிஎஸ் – ஓபிஎஸ் என இரு அணிகள் உருவாகின. இரு அணிகள் உருவாகினாலும் எடப்பாடி பழனிசாமிக்கே பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவு இருந்து வருகிறது. இருப்பினும், 12 மாவட்ட செயலாளர்களின் ஆதரவை மட்டுமே கொண்ட ஓபிஎஸ், தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று கூறி, தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அதேவேளையில், அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கியது மற்றும் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சட்டப்போராட்டத்தையும் ஓபிஎஸ் தரப்பினர் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தனது ஆதரவாளர்களில் ஒருவரான கோவை செல்வராஜ் திடீரென விலகியது ஓபிஎஸ்-க்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் தரப்பில் இருந்து விலகிய அவர், இன்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்திற்கு நேரடியாக சென்று, திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது ;- ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று நானும் எனது ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்தோம். 1971இல் என்னுடைய 14 வயதில் உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டு அரசியலில் நுழைந்தேன்.

தற்போது இவ்வளவு காலம் கழித்து மீண்டும் தாய் கழகத்துடன் இணைந்து செயல்பட வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி கூறுகிறேன். இந்த நான்கரை ஆண்டுகாலத்தில் சுனாமி வந்து அழிவை ஏற்படுத்தியது போல இபிஎஸ் தலைமையில் நாடும், மக்களை அழிவை சந்தித்தனர். அவருடைய செயல்பாட்டின் மூலம் சீரழிந்த மாநிலத்தை ஸ்டாலின் இன்று சீர்படுத்தி மக்களின் மனநிலையை புரிந்து ஆட்சி செய்து வருகிறார்.

அதிமுகவில் இருந்ததற்கு மக்களிடம் இன்றைய தினம் பாவ மன்னிப்பு வாங்கிக் கொள்கிறேன். இலவச மின்சாரம் மூலம் விவசாயிகள் வாழ்வில் முதல்வர் ஒளியேற்றி வைத்துள்ளார். சமூக நீதி பாதுகாவலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செயல்பட வந்துள்ளேன், என்று கூறினார்.

அவர் அளித்த இந்தப் பேட்டியில் திமுக தனது தாய் கழகம் என குறிப்பிட்டது தற்போது கடும் விமர்சனங்களுக்கு ஆளாக்கியுள்ளது. அதாவது, கோவை செல்வராஜ் இதுவரை 6 கட்சிகளில் தாவி இருந்தாலும், திமுகவுக்கு அவர் செல்வது இதுவே முதல் முறை என்கின்றனர் நெட்டிசன்கள். முதலில் காங்கிரஸ் கட்சியில் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய இவர், ஜெயா காங்கிரஸ், அதிமுக, இபிஎஸ் தரப்பு அதிமுக, ஓபிஎஸ் தரப்பு அதிமுக என 5 கட்சிகளில் இருந்ததாக கணக்கு போடும் நெட்டிசன்கள், திமுகவுக்கு தற்போது தான் வந்திருக்கும் நிலையில், எப்படி தாய் கழகம் என்று சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், இதுக்கு ஒரு முடிவே இல்லையா..? இதுதான் கடைசியா..? இல்லை இன்னும் இருக்கிறதா.. என்று எல்லாம் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Views: - 408

0

0