பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரியை சுக்குநூறாக்கிய கொரோனா : சிவப்பு மண்டலமாக மாறும் அபாயம்..!

10 May 2020, 9:15 am
Corona_UpdateNews360
Quick Share

தமிழகத்தில் ஒரே பசுமை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் அதிரடியாக ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறிய நிலையில், தற்போது அது சிவப்பு மண்டலத்திற்கு தாவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் கொரோனா சுற்றிச்சுழன்று அடித்து வந்த நிலையில், கொரோனா புயல் உள்ளே நுழைந்து விடாமல் கட்டிக்காக்கும் இரும்புக் கோட்டையாக இருந்து வந்தது கிருஷ்ணகிரி மாவட்டம்.

கடந்த வாரம் புட்டபர்த்தி கோயிலுக்கு சென்று திரும்பிய கிருஷ்ணகிரி மாவட்ட முதியவருக்கு சமீபத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஆனால், அவர் சேலம் சோதனைச்சாவடியில் தடுக்கப்பட்டு சேலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டதால் அது கிருஷ்ணகிரி மாவட்ட கணக்கில் சேர்க்கப்படவில்லை.

இந்த நிலையில், சூளகிரி காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த 60 வயது மற்றும் 67 வயதுள்ள இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இவர்கள் இருவரும் பெங்களூர் சென்று திரும்பிய நிலையில், அவர்களுக்கு அறிகுறியே இல்லாமல் வைரஸ் தொற்று உறுதியானது. இந்த 2 பெண்களும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதால் பச்சை மண்டலம் என்ற அந்தஸ்தை இழந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு தள்ளப்பட்டது கிருஷ்ணகிரி.

மேலும் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்று திரும்பிய இருவருக்கு, ஒசூர் அடுத்த மத்திகிரி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற போது இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக இருந்த நிலையில், சூளகிரி பகுதியில் பாதிக்கப்பட்ட 67 வயது மூதாட்டியின் 12 வயது பேத்தி, 20 வயது பேரன் உள்பட அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் 6 பேருக்கு நேற்று முன் தினம் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில், நேற்று முன் தினம் மூதாட்டி பாதித்த சூளகிரி காமராஜ் நகர் பகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்டோரின் சளி, மற்றும் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் ஆம்புலன்ஸ் டிரைவர் உள்பட 11 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

இருப்பினும் 21 பேருக்கும் எந்த வித அறிகுறியோ, பாதிப்போ தென்படவில்லை. சூளகிரி மற்றும் மத்திகிரி பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. சூளகிரியில் பாதிக்கப்பட்டவர்கள் வீடு மார்க்கெட் அருகிலேயே உள்ளதால், கோயம்பேடு மார்க்கெட் சென்று வந்த விவசாயிகள் மூலம் தான் பரவி உள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவத்துறை வட்டாரத்தில் பேசப்பட்டுகிறது.