கேடி ராகவன் மீதான குற்றச்சாட்டு பொய் என்பதை சட்டப்படி நிரூபிப்பார் : பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை
Author: Babu Lakshmanan24 August 2021, 2:10 pm
பாஜக பிரமுகர் கேடி ராகவன் மீதான குற்றச்சாட்டை அவர் சட்டப்படி பொய் என நிரூபிப்பார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இன்று காலை சமூக ஊடகத்தில் வெளியான கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கேடி ராகவன் அவர்கள் சம்பந்தப்பட்ட வீடியோ குறித்த செய்திகளை அறிந்தேன். இந்த வீடியோவை வெளியிட்ட யூ டியூபர் மதன் ரவிச்சந்திரன் அவர்கள் என்னை சந்தித்துப் பேசியது உண்மை. முதல் முறையாக என்னை கட்சி அலுவலகத்தில் அவர் சந்தித்துப்
பேசியபோது கட் சியின் பொறுப்பில் இருப்பவர்கள் பற்றிய வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் உடனடியாக அவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றங்களால் மட்டும் அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டு விடக்கூடாது. அதன் உண்மை தன்மையை ஆராய வேண்டும். குற்றச்சாட்டில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தேன். ஆகவே அந்த வீடியோ பதிவுகளை எங்களிடம் காட்சிப்படுத்தினால் அதன் உண்மைத் தன்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினேன். ஆனால் அவர் பதிவுகளை என்னிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டார்.
அடுத்த நாள் மறுபடி என்னை அலுவலகத்தில் சந்தித்த மதன் ரவிச்சந்திரன் அவர்கள் வலுவான வீடியோ பதிவுகள் உள்ளன. அவர்கள் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தக் கூறினார்.
ஒரு சர்ச்சைக்குரிய வீடியோ பதிவை நம்பி மட்டும் அதன் உண்மைத்தன்மையை அறியாமல் சம்பந்தப்பட்டவர்களிடம் அதன் மேல் விசாரணை செய்யாமல் குற்றம் சாட்டும் நபரின் வாய் வார்த்தையை மட்டும் நம்பி எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? ஆகவே மதன் ரவிச்சந்திரன் இரண்டாம் முறை வலியுறுத்திய போதும் ஆதாரமாக அவர் சுட்டும் பதிவுகளை சமர்ப்பிக்க கூறினேன். அதன்பின் மூன்றாவது முறையாக அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி, நான் ஏற்கனவே கேட்டுக் கொண்டபடி எனக்கு உடனடியாக நியாயம் கிடைக்குமா? நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்டு இருந்தார். கட்சி ரீதியான நடவடிக்கை என்ற முடிவையும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக
எடுக்க வேண்டும் என்று வலியுறுத்து இருந்தார்.
உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தான் வீடியோ பதிவுகளை வெளியிடப் போவதாக குறுஞ்செய்தியில் கூறியிருந்தார். முன்னர் இரண்டு முறை நேரில் சந்தித்தபோது நான் கூறியபடி குற்றச்சாட்டு என்ன என்பதை அறியாமல், நடவடிக்கை எடுக்க முடியாது என்ற என் முடிவில் நான் உறுதியாக இருந்தேன். ஆகவே என் பதிலில் “செய்து கொள்ளுங்கள்” என்று சுருக்கமாக முடித்து விட்டேன்.
இன்று காலை திரு ராகவன் அவர்களிடம் பேசினேன். 30 ஆண்டு காலத்திற்கு மேலாக உண்மையாகவும் நேர்மையாகவும் கட் பணியாற்றிய தன் மீது களங்கம் கற்பிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், கட்சியின்
நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் எண்ணத்துடன், உயர் தொழில்நுட்பத்தில் தனக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு என்றும், இதை தான் சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் கே டி ராகவன் தெரிவித்தார்.
மேலும் கட்சியின் மாண்பையும், செம்மையையும் காக்க தான் கட்சியின் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.
நானும் அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டேன். கே டி ராகவன் அவர்கள் இந்த பிரச்சனையை முறைப்படி சட்டரீதியாக எதிர்கொண்டு நிரூபிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கறது, என தெரிவித்துள்ளார்.
0
0