கோவில் கோபுரம், அய்யனார் சிலை.. அதிமுக ஆட்சியில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி பங்கேற்றது எப்படி தெரியுமா.?

Author: Babu Lakshmanan
17 January 2022, 8:33 pm
Quick Share

ஆண்டுதோறும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின விழாவின் போது, மாநிலங்களின் சிறப்பை பறைசாற்றும் விதமாக, வடிவமைக்கப்பட்ட வாகன ஊர்திகள் நடத்தப்படுவது வழக்கம். இதில், இந்திய பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் இந்த அணிவகுப்பில் விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள். சில நேரங்களில் உலக நாட்டு தலைவர்களும் பங்கேற்பதுண்டு.

ஒவ்வொரு ஆண்டு குடியரசு தின நிகழ்ச்சியின் போதும் எல்லா மாநிலங்களின் அலங்கார அணி வகுப்பு வாகனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை. சில குறிப்பிட்ட மாநிலங்களின் அணிவகுப்பு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இந்த அணிவகுப்பு வாகனங்களின் தேர்வை மேற்கொள்வது மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிபுணர் குழு ஆகும்.

அந்த வகையில், இந்த ஆண்டு குடியரசு தினம் அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான மையக்கருவாக சுதந்திர போராட்ட வீரர்கள் என தேர்வு செய்யப்பட்டு, அதற்கேற்ற வகையில் வாகன ஊர்திகள் தயார் செய்யப்பட இருக்கின்றன. அதாவது, பல சுற்றுகளின் முடிவில் எந்தெந்த மாநிலங்கள் தேர்வாகியுள்ளது என்பது குறித்து இறுதி செய்யப்படும்.

இந்த முறை 4 சுற்றுகள் வரை சென்ற தமிழகத்தின் ஊர்திக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார் ஆகியோரை மையமாக வைத்து வாகனம் உருவாக்கப்பட இருந்தது. மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகவும், இவர்களைப் பற்றி சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனவும் கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் கேரளாவில் ஜாதி ஒழிப்பு போராளி நாராயண குருவின் சிலையை நீக்க வேண்டும், அதற்கு பதிலாக ஆதி சங்கரர் சிலையை வைக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கூறியது. இதற்கு கேரளா மறுத்ததால் அவர்களின் ஊர்தியும் அணிவகுப்பில் சேர்க்கப்படவில்லை. ஏற்கனவே, மேற்குவங்காளத்தில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ரவிந்திரநாத் தாகூர் போன்ற விடுதலை போராட்ட வீரர்களை சித்தரிக்கும் வகையிலான அலங்கார ஊர்திக்கு முன்மொழிவு கொடுக்கப்பட்டதாகவும், அந்த அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்படாதது வருத்தமளிப்பதாக மேற்குவங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பாக, தமிழக ஊர்தி 2014, 2016, 2017, 2019, 2020, 2021 என கடந்த 8 ஆண்டுகளில் 6 முறை இடம்பெற்றது. அதில், கடந்த 3 ஆண்டுகள் அதிமுக ஆட்சியின் போது, தமிழக அரசின் கோவில் தொடர்புடைய வாகன ஊர்திகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. 2019ல் காந்தி சிலை மற்றும் இந்து கோவில் கோபுரமும், 2020ம் வரும் நாட்டார் தெய்வங்களை பறைசாற்றும் வகையில் அய்யனார் சிலையும், 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்த போது மகாபலிபுரம் கோவில் கோபுரம் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில்தான் வரிசையாக 3 வருடங்கள் கோவில், கோவில் தொடர்பான தீம்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் புதிதாக சுதந்திர போராட்ட தியாகிகள் தீம் அனுப்பப்பட்டது. ஆனால் இதை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது.

Views: - 381

0

1