திமுக கூட்டணியில் அதிருப்தி…? நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ‘டிஷ்யூம்’… ஸ்டாலின் போடும் கணக்கு!!

Author: Babu Lakshmanan
22 November 2021, 6:27 pm
Local body - dmk - updatenews360
Quick Share

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை டிசம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க மாநிலத் தேர்தல் ஆணையம் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. இதையடுத்தே 11 நகராட்சிகளின் ஆணையர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 12 அதிகாரிகள் இரண்டாம் நிலை நகராட்சி ஆணையர்களாக நியமிக்கப்பட்டும் உள்ளனர்.

இருகட்ட தேர்தல்

2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் தேர்தலை நடத்துவதற்கான கால அவகாசம் இருந்தாலும் கூட அதற்கு முன்னதாகவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

டிசம்பர் 15-ம் தேதிக்குப் பிறகு, ஆங்கில புத்தாண்டு பிறப்புவரை பள்ளி, கல்லூரிகளுக்கு, விடுமுறை காலம் என்பதால் இந்த இடைப்பட்ட நாட்களில் தேர்தலை இரு கட்டமாக நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.

2019-ம் ஆண்டு 27 மாவட்ட ஊரக உள்ளாட்சிதேர்தலுக்கு, இதே காலகட்டம்தான் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

தற்போது முதல் கட்டமாக 150 நகராட்சிகளுக்கும் 509 பேரூராட்சிகளுக்கும், சென்னை கோவை மதுரை திருச்சி சேலம் ஈரோடு நெல்லை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளுக்கு இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அனைத்திற்கும், வார்டு உறுப்பினர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்களும் அவர்களின் துணைத் தலைவர்களும், மறைமுகதேர்தல் மூலமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

அழைப்பில்லை

இந்த நிலையில்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்களை, திமுகவினர் வழங்கலாம் என்று திமுக மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு வெளியிட்டு, அதன்படி தமிழகம் முழுவதும் அத்தனை மாவட்டங்களிலும் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர்.

அதேநேரம் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கான இடங்கள் குறித்து அந்தந்த மாவட்ட திமுக செயலாளர்களுக்கே முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

dmk_alliance - updatenews360

இப்படியொரு பக்கம் விருப்ப மனுக்களை பெறுவதில் திமுக சுறுசுறுப்பு காட்டி வரும் நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மதிமுக உள்ளிட்ட கட்சிகளை திமுக தலைமை இதுவரை தொடர்புகொண்டு கூட்டணிக்கு ஒதுக்கப்படும் இடங்கள் குறித்தான பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதில் ஒரு வியப்பான விஷயம் என்னவென்றால், திமுக கூட்டணி கட்சி தலைவர்களில் ஒருசிலர் அறிவாலயத்திற்கு சென்று திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினை நேரடியாக சந்தித்து பேசிய பிறகும் கூட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் தொடர்பாக திமுகவின் முன்னணித் தலைவர்களான துரைமுருகன், கே.என்.நேரு, சேகர் பாபு போன்றோர் தங்களிடம் எதுவும் வெளிப்படையாக கூறவில்லையே என்கிற ஆதங்கமும் வருத்தமும் அவர்களிடம் உள்ளது.

அதேநேரம், திமுகவின் மாவட்ட செயலாளர்களை சந்தித்து தங்களுக்குரிய இடங்களை ஒதுக்குமாறு, கேட்பது அவர்களிடம் மிகவும் கீழே இறங்கிச் செல்வதுபோன்ற நிலையை ஏற்படுத்திவிடும் என்றும் அந்த தலைவர்கள் கருதுகின்றனர்.

இதனால் திமுக கூட்டணியில் தங்களுக்கு, எத்தனை வார்டுகள் ஒதுக்கப்படும் என்பது தெரியாமல் அந்தக் கட்சிகள் பெரும் குழப்பமடைந்துள்ளன.

போக்கில் மாற்றம்

இதுகுறித்து திமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் சிலர் கூறும்போது, “2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர், மக்கள் நலக் கூட்டணியில் இருந்த மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் விசிக மதிமுக ஆகியவை கடந்த நான்கரை ஆண்டுகளாக திமுக கூட்டணியில்தான் உள்ளன.

காங்கிரசும், முஸ்லிம் லீக்கும் அதற்கும் முன்பிருந்தே திமுக கூட்டணியில் உள்ளன. 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக, திமுக எதிர்க்கட்சியாக இருந்தவரை அரசியல் ரீதியாக எந்த ஒரு போராட்டம் என்றாலும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை அழைத்து பேசுவதை திமுக தலைமை வழக்கமாகக் கொண்டிருந்தது.

AnnaArivalayam

2019 நாடாளுமன்ற தேர்தல், 27 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டப் பேரவை தேர்தல் என 3 தேர்தல்களிலும் கூட்டணி கட்சிகளை ஆலோசிக்காமல் திமுக எந்த முடிவும் எடுத்ததில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த போக்கு மாறிவிட்டது. கடந்த அக்டோபர் மாதம் நடந்த
7 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் எங்களை திமுக அழைத்துப் பேசவில்லை.

அப்போது மாவட்ட திமுக செயலாளர்களை எங்களது மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசி, போட்டியிடும் இடங்கள் குறித்து முடிவெடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. இதனால் நாங்கள் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கவில்லை. எங்களுக்கு செல்வாக்கு உள்ள பகுதிகளிலும் போட்டியிட முடியாமல் போய்விட்டது.

7 மாவட்டங்கள் என்பதால் அது குறுகியதொரு வட்டமாக இருந்தது. அதனால் அது பற்றி நாங்கள் அதிகம் கவலை கொள்ளவில்லை. ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும் மாநிலம் முழுவதும் பரவலாக நடக்கக் கூடியது. பெரும்பாலான மாவட்டங்களில் திமுகவினர் விருப்ப மனுக்களை பெற்று விட்டனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கு அவர்கள் போட்டியிட விரும்பும் வார்டுகள் கிடைக்குமா? என்ற கேள்வி எழுகிறது.

கூட்டணி பலம் இருப்பதால் குறைந்தபட்சம் 90 சதவீத வெற்றியை உறுதி செய்து விட இயலும் என்றாலும் கூட அந்தந்த கட்சிகளுக்கு செல்வாக்குள்ள வார்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றால்தான் கூட்டணிக் கட்சிகளுக்கு மக்களிடம் நல்ல மரியாதை கிடைக்கும். வார்டுகளின் வளர்ச்சிப் பணியில் கூடுதல் அக்கறை காட்டவும் முடியும்.

மேலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு நேரடித்தேர்தல் நடந்தால் தனிப்பட்ட முறையில் திமுக தலைமையிடம் பேசி செல்வாக்குள்ள பகுதிகளை எங்களால் கேட்டுபெற்று விட முடியும். ஆனால் நடக்க இருப்பதோ மறைமுக தேர்தல் என்பதால் ஒரு குறிப்பிட்ட மாநகராட்சியையோ நகராட்சியையோ கைப்பற்ற அதிக வார்டுகளில் போட்டியிடக்கூடிய கட்டாயம் உள்ளது. அது கூட்டணி கட்சிகளுக்கு, திமுக மாவட்ட செயலாளர்களிடம் வார்டுகளை வாதாடி பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தும். கூட்டணிக் கட்சிகளை முதலமைச்சர் அழைத்து பேசினால் பிரச்சனைக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டு விடும்” என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

முதலில் வாக்குறுதி

ஆனால் தேர்தல் எப்போது நடக்கும் என்பது பற்றி அரசியல் பார்வையாளர்கள் மாறுபட்ட கருத்தை தெரிவிக்கின்றனர்.

அவர்கள் கூறும்போது, “மாநிலம் முழுவதுமே மழை, வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதால் டிசம்பர் மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறுமா என்பது சந்தேகம்தான். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும், பயிர்களை இழந்த விவசாயிகளுக்கும் நிவாரணமும் இழப்பீடும் முழுமையாக கொடுத்த பிறகே தேர்தலை சந்திக்க திமுக விரும்பும்.

தவிர தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் மாதாந்திர உரிமைத் தொகை வழங்கும் திட்டம் பொங்கல் பண்டிகையின்போது, தொடங்கி வைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. ஏனென்றால் இதுபற்றி அவ்வப்போது அமைச்சர்கள் பேசி வருவதால், இத்திட்டம் நிச்சயம் நடைமுறைக்கு வரும் என்பது தெரிகிறது. எனவே பொங்கல் பண்டிகைக்குப் பிறகே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படும் என்ற பரவலான பேச்சும் உள்ளது.

Cm stalin - updatenews360

நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, நேரடித் தேர்தல் நடத்தப்பட்டால் கூட்டணிக் கட்சிகள் கணிசமான இடங்களை கேட்கலாம். இந்த நெருக்கடியை தவிர்க்கவே திமுக மறைமுகத் தேர்தல் நடத்த விரும்புகிறது. இதனால்தான் கூட்டணி கட்சிகள் தற்போது பரிதவிக்கின்றன.

இந்தத்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
அதற்காக மாநில தேர்தல் ஆணையமும் தயாராக வேண்டியுள்ளது. எனவே டிசம்பர் மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு ஜனவரி 20க்குப் பிறகு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படவே வாய்ப்பு உள்ளது” என்று அவர்கள் தெரிவித்தனர்.

Views: - 237

0

0