உள்ளாட்சி தேர்தலில் மல்லுக்கட்டு… கூட்டணிக்கு ஏங்கும் ம.நீ.ம…. தனித்து துணியும் நா.த.க…!

Author: Babu Lakshmanan
28 August 2021, 6:45 pm
kamal - seeman - updatenews360
Quick Share

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே கட்ட தேர்தல்

2019 டிசம்பர் மாத இறுதியில் 27 மாவட்டங்களுக்கு இரு கட்டங்களாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் தற்போது மாவட்டங்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்பதால் இந்த முறை ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். செப்டம்பர் 20-ம் தேதிக்குப் பிறகு ஏதாவது ஒரு நாளில் தேர்தல் நடத்தப்படலாம்.

அப்போது சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் இந்தத் தேர்தலிலும் தொடர்ந்து நீடிக்குமா? என்ற கேள்விக்கான விடையும் கிடைத்துவிடும்.

கூட்டணிக்கு தயார்

2019 நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சுமார் 15 லட்சம் ஓட்டுகளை வாங்கியது. இது 3.77 சதவீத வாக்குகள் ஆகும். ஆனால் அதே ஆண்டு இறுதியில் நடத்தப்பட்ட 27 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. கமல்ஹாசன் செய்த மிகப்பெரிய அரசியல் தவறு, அதுதான்.
அந்தத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்டிருந்தால் வெற்றியோ, தோல்வியோ கிராமங்களில் அக்கட்சிக்கு வலுவான அடித்தளம் அமைந்திருக்கும். தற்போது கிராமங்கள்தோறும் மக்கள் நீதி மய்யத்தின் கொடி பறக்கவேண்டும் என்று விரும்பும் கமலின் எண்ணமும் அப்போதே எளிதாக நிறைவேறி இருக்கும்.

ஆனால் நேரடியாக சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சியின் பலத்தை காட்டி விடலாம் என்று கமல் அதீத நம்பிக்கையுடன் 2019-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்து விட்டார். அதற்காக கொடுக்கப்பட்ட விலை என்ன என்பதை நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கமல் உணர்ந்து கொண்டு விட்டார், போலிருக்கிறது. அதனால்தான் எஞ்சிய 9 மாவட்டங்களில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது என்ற துணிச்சலான முடிவை அவர் எடுத்து இருக்கிறார்.

KAMAL_HAASAN_UpdateNews360

அண்மையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுடன் சென்னையில் கமல் தீவிர ஆலோசனை நடத்தினார். இதில், தமிழக, புதுச்சேரி நிர்வாகிகள், மாநிலச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் ஆகியோருடன் கட்சியின் வளர்ச்சிப் பணிகள், உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடினர்.

இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேசிய கமல், விரைவில் நடைபெற இருக்கும் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்பது உறுதி. கூட்டணிக்கு வருபவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆனால், இருபெரும் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. எந்த வேகத்தில் வீழ்ந்தோமோ, அந்த வேகத்தில் எழுந்து நிற்போம் ’’ என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதாவது அதிமுக, திமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை கமல் சூசகமாக குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழகத்தின் பிரதான கட்சிகளான இவையிரண்டும், மக்கள் நீதி மய்யத்தை தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளுமா? என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.

பிறகு எதற்காக கமல் இதை வெளிப்படையாக கூறுகிறார்? சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலினை, கமல் சந்தித்தபோது, உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி குறித்து பேசியதாக தகவல்கள் வெளியானது. இதை உறுதியாக மறுக்கும் விதமாகவே, முக்கிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று தற்போது அவர் அறிவித்திருக்கிறார், என்பது வெளிப்படை.

சட்டப்பேரவைத் தேர்தலின்போது அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் எழுந்த சர்ச்சையில் கடுப்பான கமல் அதன் பிறகு டிடிவி தினகரனை எந்த ஒருசூழலிலும் நெருங்கிச் செல்லவில்லை. மேலும் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக அமமுகவின் நிலை ஆகிப் போனதால் அக்கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் எதுவும் நடந்துவிடப் போவதில்லை.

நாம் தமிழர் கட்சியின் சீமானோ எல்லோருக்கும் முந்திக்கொண்டு நாங்கள்
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்தே களம் காண்போம் என்று துணிச்சலுடன் அறிவித்து விட்டார்.

கேப்டனுடன் கைகோர்ப்பா..?

அப்படியென்றால் கமலின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப எஞ்சியுள்ள ஒரே ஒரு கட்சி விஜயகாந்தின் தேமுதிகதான். இந்த இரு கட்சியின் தலைவர்களும் கிராம மக்களுக்கு பரிச்சயமானவர்கள் என்பதால் உள்ளாட்சித்தேர்தலில் மக்கள் நீதி மய்யமும், தேமுதிகவும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாய் உள்ளன. இதை உணர்த்தும் விதமாகத்தான் கடந்த 25-ம் தேதி விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி நடிகர் கமல் ஒரு ட்வீட் போட்டு இருந்தார்.

அதில், “எளியோருக்கு பாதிப்பு என்றால் தன் வரம்பில் இயன்றதை அதிரடியாகவும் உடனடியாகவும் செய்து துயர்துடைக்கும் மனம் வாய்ந்த நண்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று புகழாரம் சூட்டி இருந்தார்.

Vijayakanth - updatenews360

இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க நேர்ந்தால் மக்கள் நீதி மய்யம் 60% இடங்களிலும் தேமுதிக 40% ஊராட்சிகளிலும் போட்டியிட வாய்ப்பு உள்ளது. விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் முன்பாக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது. மேலும் அதிமுக, திமுக கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேற்றப்படும் ஒரு சில கட்சிகள் தனது தலைமையிலான அணிக்கு வந்து சேரும் என்ற நம்பிக்கையும் கமலிடம் உள்ளது. அதனால் மீனுக்காக காத்திருக்கும் கொக்கு போல கமல் பொறுமை காத்து அரசியல் நகர்வுகளை கூர்ந்து கவனித்து வருகிறார்.

நம்பிக்கையில் சீமான்

2019 இறுதியில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி என்பது குதிரைக் கொம்பாகத்தான் இருந்தது. அதிமுக, திமுக கூட்டணிக்கு இடையே சிக்கி சின்னா பின்னமாகிப் போன அவருடைய கட்சிக்கு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிற்கே ஊராட்சி கவுன்சிலர்கள் கிடைத்தனர். இத்தனைக்கும் அதற்கு 7 மாதங்களுக்கு முன்பு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவருடைய கட்சிக்கு 16 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் கிடைத்திருந்தது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சுமார் 30 லட்சம் வாக்குகளைப்
பெற்றது. இதனால் சீமான் மிகத் தெம்பாக இருக்கிறார்.

Seeman -Updatenews360

குறிப்பாக, கிராமப்பகுதிகளில்தான் அவருடைய கட்சிக்கு அதிக ஓட்டுகள் கிடைத்தது என்பதால் குறைந்தபட்சம் 10 சதவீத ஊராட்சிகளை கைப்பற்றி விட முடியும் என்பது அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கை. கட்சியின் வாக்கு சதவீதத்தை இன்னும் அதிகரிக்கும் விதமாகவே அவர் தனித்துப் போட்டியிட முடிவு செய்திருக்கிறார்.

இந்த தேர்தலில் தனது கட்சியின் பலத்தை நிரூபித்து விட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட நேர்ந்ததால் அது தொகுதி பேரம் பேசுவதற்கு உதவும் என்று நம்புவதால் சீமான் கிராம சுற்றுப்பயணத்தை இப்போதே தொடங்கிவிட்டார்.

இதில், டிடிவி தினகரனின் அமமுகவின் பாடுதான் படு திண்டாட்டமாக உள்ளது.
கட்சியில் இருந்த 99% முக்கிய நிர்வாகிகள் அதிமுக, திமுகவில் இணைந்து விட்டனர். இதனால் மாவட்ட ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கு போட்டியிட ஆளைத் தேடிப் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சியின் நிலை உள்ளது. இதையும் தாண்டி அதிமுகவையும், திமுகவையும் எதிர்க்கிற அளவுக்கு அக்கட்சிக்கு வலு இல்லாமல் போய் விட்டது என்பதும் உண்மை!

Views: - 241

0

0