சின்னம் கிடைச்சிருச்சு, வெற்றி… ?கலக்கத்தில் சீமான், கமல், தினகரன்..! உள்ளாட்சியில் வேடிக்கை பார்க்கும் தேமுதிக…!!

Author: Babu Lakshmanan
22 September 2021, 7:11 pm
LBE - updatenews360
Quick Share

வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பலத்தை நிரூபிக்கும் ஒன்றாகவும் அமைந்துள்ளது.

ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய தலைவர், மாவட்ட கவுன்சிலர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் என 9 மாவட்டங்களில் மொத்தம்
27 ஆயிரம் பதவிகள். இவற்றில் 24 ஆயிரம் பதவிகள் ஊராட்சி மன்ற கவுன்சிலர் பதவிகள் ஆகும்.

27 மாவட்டங்களில் கடும் போட்டி

2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் நடந்த 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் மெகா கூட்டணி 45 சதவீத இடங்களையும், அதிமுக கூட்டணி 43 சதவீத இடங்களையும் கைப்பற்றின. எஞ்சிய 12 சதவீத இடங்களில்தான் சுயேச்சைகள், நாம் தமிழர் கட்சி, அமமுக மற்றும் சிறு சிறு கட்சிகள் வெற்றி பெற்றன். அப்போது தமிழகத்தில் ஆளும் கட்சியாக அதிமுக இருந்தது. தற்போது ஆட்சி அதிகாரத்துக்கு திமுக வந்துள்ளது.

திமுக ஆட்சியமைத்து 4 மாதங்களுக்கு மேலாகிவிட்டதால் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்கட்சியை மக்கள் எடை போடும் ஒரு தேர்தலாகவும் அமையும் என்பது அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

திமுக கூட்டணியை பொறுத்தவரை சட்டப்பேரவை தேர்தலின்போது இடம்பெற்றிருந்த 12 கட்சிகளும் தொடர்ந்து நீடிக்கின்றன. ஆனால் அதிமுக கூட்டணியில் 2019 ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் இடம்பெற்றிருந்த கட்சிகளில் பாஜகவும், த.மா.காவும் மட்டுமே உள்ளன.

தனித்து களமிறங்கும் கட்சிகள்!!

சட்டப்பேரவை தேர்தலின்போது அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய தேமுதிக,
டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு படுதோல்வியும் கண்டது.
தற்போது 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்களில் தேமுதிக தனித்துப் போட்டியிடும்
என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்து இருக்கிறார்.

அதிமுக கூட்டணியிலிருந்து அண்மையில் வெளியேறிய டாக்டர் ராமதாஸின் பாமகவும் தனித்து களமிறங்குகிறது. அதேநேரம் பெரும்பாலான இடங்களில், அதிமுகவுடன் ரகசிய கூட்டணியும் போட்டிருக்கிறது.

இதேபோல் சீமானின் நாம் தமிழர் கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அமமுக ஆகியவையும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

பிக் பாஸில் பிஸி..

“9 மாவட்டங்களிலும் பரப்புரை பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். களத்தில் சந்திப்போம். வெற்றி நமதே” என்று சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் ட்வீட் போட்டு இருந்தார்.
அதன் பிறகு, “உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்கி மக்கள் பங்கேற்பை உறுதி செய்ய முனைப்புடன் செயல்படும் மக்கள் நீதி மய்யத்திற்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் சின்னமாக டார்ச்லைட் வழங்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்” என்று இன்னொரு ட்வீட்டும் போட்டார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் படுபிஸியாகிவிட்டார்.

இதனால் உள்ளாட்சித் தேர்தலில் கமல் பிரச்சாரம் செய்வாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Kamal- Updatenews360

பிரச்சாரத்தில் ஈடுபடப் போய் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக நேர்ந்தால் பிக்பாசை நடத்த முடியாத நெருக்கடி ஏற்படும் என்பதால் தேர்தல் பிரச்சாரம் குறித்து உலக நாயகன் தடுமாற்றத்துடனும், குழப்பத்துடனும் காணப்படுகிறார். அவருடைய கட்சி நிர்வாகிகள் ஊராட்சி மன்ற கவுன்சிலர் பதவிகள் தவிர எஞ்சிய 3,000 பதவிகளில் சுமார் 50 சதவீத இடங்களில் போட்டியிடுவோம் என்று தெரிவித்தும் இருந்தனர். ஆனால் இதுவரை மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் எத்தனை பேர் நிறுத்தப்பட்டு உள்ளனர் என்பது தெரிவிக்கப்படவில்லை. செல்வாக்குள்ள ஊராட்சிகளில் தலைவர் பதவிக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் போட்டியிடலாம் என்று மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்களுக்கு பஞ்சம்

இன்னொரு பக்கம் தேமுதிகவும், அமமுகவும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக தங்களது கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை வலைவீசி தேடின. யாரும் சிக்கவில்லை.
சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்பு அமமுகவில் இருந்த பெரும்பாலான நிர்வாகிகள் அதிமுகவிலும், திமுகவிலும் சங்கமமாகிவிட்டதுதான் இதற்கு முக்கிய காரணம்.

இந்த 2 கட்சிகளிலுமே போட்டியிடுவதற்கு வேட்பாளர்களுக்கு பஞ்சம். செல்வாக்குடன் இருந்த ஓரிரு நிர்வாகிகளும் கூட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. இவர்களில் பெரும்பாலானோர் ஒரு அரசியல் கட்சியால் விலை பேசப்பட்டு விட்டனர் என்ற செய்தியும் கட்சி மேலிடத்திற்கு சென்றுள்ளது.

Dinakaran_UpdateNews360

இதனால் வேறு கட்சியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போனவர்களை பிடித்துவந்து அமமுக நிறுத்தியுள்ளதாகவும் தகவல் தகவல் வெளியாகி இருக்கிறது.

தேமுதிகவுக்காக விஜயகாந்த்,பிரேமலதா, சுதீஷ், பிரபாகரன் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தனது உடல் நலத்தை கருத்தில் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்த் ஈடுபடமாட்டார் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அதனால் அக்கட்சியின் தொண்டர்கள் இப்போது மௌனமாகி விட்டனர். இன்னும் சிலர் போட்டியிட்டாலும் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டனர். இதனால் புத்திசாலித்தனமாக ஒதுங்கிக் கொண்டவர்களும் உண்டு.

விவசாயி சின்னம்

நாம் தமிழர் கட்சிக்கு இந்தத் தேர்தலில் விவசாயி சின்னம் கிடைத்துள்ளது. இதையே
தனக்கு தேர்தலில் மாபெரும் வெற்றி கிடைத்ததுபோல் சீமான் பெருமிதப்பட்டு சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆண்களுக்கு 50 சதவீத இடங்கள், பெண்களுக்கு 50 சதவீத இடங்கள் என்று சட்டப்பேரவைத் தேர்தல்போல் பெண்களுக்கு சம உரிமை அளிப்பேன் என்று சீமான் கூறுகிறார். அவர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தீவிர பிரச்சாரம் செய்வார் என்பது உறுதியாகத் தெரிகிறது.

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “ஆளும் கட்சி, எதிர்க் கட்சிகளுக்கு இணையாக
கமல்,சீமான், விஜயகாந்த், தினகரன் போன்றவர்களும் தங்களது கட்சியை ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் வளர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. கமலைப் பொறுத்தவரை 2019-ல்
27 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் அவருடைய கட்சி போட்டியிடவில்லை. எனவேதான் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சிக்கு எதிர்பார்த்த அளவில் ஓட்டுகளும் விழவில்லை, வெற்றியும் கிடைக்கவில்லை என்று அவர் கருதுகிறார். அதனால் இம்முறை அந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதற்காக அவருடைய கட்சி களமிறங்குகிறது. ஆனால் கமல் நேரடியாக பிரச்சாரத்தில் ஈடுபடாத நிலையில் அவரது கட்சிக்கு எந்த பலனும் கிடைக்காமல் போவதில்லை.

SEEMAN - Updatenews360

அதேநேரம் இந்த ஆண்டு இறுதிக்குள் எப்படியும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்று விடும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என்ற பெரும் வட்டத்தில் மாநிலம் முழுவதும் தேர்தல்கள் நடைபெறும் என்பதால் அதில் கவனம் செலுத்த கமல் விரும்புகிறார். அதனால் ஊரக உள்ளாட்சி தேர்தலில் கமல் பிரச்சாரம் செய்ய வருவாரா? என்பது சந்தேகம்தான்.

சீமானைப் பொறுத்தவரை கட்சியின் கட்டமைப்பை கிராமங்கள் வரை நிர்மானித்து இருப்பதால் அவர் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்வார் என்பது நிச்சயம்.

ஆனால் செல்வாக்கு இழந்துள்ள தேமுதிகவுக்கும், அமமுகவுக்கும் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் பயனளிக்குமா? என்பது மில்லியன் டாலர் கேள்விதான். கிராமங்களில் தங்கள் கட்சிக்கு எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வதற்கு வேண்டுமானால் இது உதவலாம். அதனால்தான் இவர்கள் தங்களது தேர்தல் சின்னத்தை தக்க வைத்துக் கொண்டதையே பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள் போலிருக்கிறது” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 257

0

0