கிளீன் போல்டான கட்சிகள்…! 9 மாவட்ட தேர்தலில் யாருக்கு நஷ்டம்…? தேர்தல் முடிவுகள் சொல்லும் பாடம் என்ன?…

Author: Babu Lakshmanan
13 October 2021, 2:22 pm
Quick Share

ஒருவழியாக 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது. ஏற்கனவே 2019-ம் ஆண்டு 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து இருப்பதால் தமிழகத்திலுள்ள 37 மாவட்டங்களில் 36க்கு தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. எஞ்சியிருப்பது சென்னை மாவட்ட மட்டும்தான். அங்கு மாநிலம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கும்போது மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டு விடும்.

மிகப்பெரிய வெற்றி

கடந்த 4 ஆண்டுகளாக வலுவாக திகழும் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை ஈட்டியிருக்கிறது. மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தேர்தலில் 99 சதவீதமும் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் 75 சதவீதமும் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

dmk_alliance - updatenews360

பெரும்பாலான மாவட்டங்களில் தனித்துப் போட்டியிட்ட அதிமுகவுக்கு 200க்கும் மேற்பட்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர். வெற்றி சதவீதம் 16%தான். அதேநேரம் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் இருவர் மட்டுமே தேர்வாகி இருக்கின்றனர். சில மாவட்டங்களில் அதிமுக ஆதரவுடன் போட்டியிட்ட பாஜக சார்பில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் 7 பேர் தேர்வாகி இருக்கின்றனர்.

திமுக கூட்டணியில் 138 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களும், 1010க்கும் அதிகமான ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களும் தேர்வாகியுள்ளனர்.

உடைந்த அதிமுக கூட்டணி

இந்த கூட்டணியின் வெற்றியுடன் ஒப்பிட்டால் அதிமுகவின் வெற்றி மிக மிகக்குறைவு என்றே சொல்ல வேண்டும். திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தென்காசி மாவட்டங்களில் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியை அதிமுக பதிவு செய்துள்ளது. அதேநேரம் தனித்துப் போட்டியிட்ட பாமகவுக்கு 43 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர்.

2019-ம் ஆண்டின் இறுதியில் நடந்த 27 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்களுடன் தற்போது நடந்து முடிந்த தேர்தலை ஒப்பிட்டுப் பார்த்தால் சில உண்மைகள் புரியும். அந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி சிதையாமல் இருந்தது. அதாவது 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, பாஜக, தேமுதிக, தமாக ஆகியவை அப்படியே நீடித்தன. ஆனால் 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதிமுக அணியில் இருந்து தேமுதிக வெளியேறிவிட்டது.

அதேபோல் இந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து, அதன்படி வேட்பாளர்களையும் நிறுத்தியது.

கடந்த ஆண்டில்

2019-ம் ஆண்டு 514 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கும், 5090 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பதவிக்கும் தேர்தல் நடந்தது. அப்போது அதிமுக கூட்டணியில் அதிமுகவில் 214 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களும், பாமகவில் 16, பாஜகவில் 7, தேமுதிகவில் 3 பேரும் வெற்றி
பெற்றிருந்தனர்.

அதேபோல் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் பதவிக்கு அதிமுகவில் 1792 பேரும், பாமகவில் 224, பாஜகவில் 88, தேமுதிகவில் 99 பேரும் தேர்வாகி இருந்தனர்.

அப்போது திமுகவை பொறுத்தவரை மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 244, காங்கிரசில்15, இந்திய கம்யூனிஸ்ட்டில் 7, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டில் 2, மதிமுகவில் 2 பேரும் தேர்வாகி இருந்தனர். ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு திமுகவில் 2095, காங்கிரசில் 133, இந்திய கம்யூனிஸ்ட்டில் 64, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டில் 33 மதிமுகவில் 20 பேரும் வெற்றி கண்டிருந்தனர்.

அப்போது தனித்துப் போட்டியிட்ட தினகரனின் அமமுக 94 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்து விட்டது. நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை ஊராட்சி மன்ற வார்டுகளில் மட்டுமே சிலர் வெற்றி பெற்றிருந்தனர்.

உடைந்து போன கூட்டணி

இப்படி 2 கட்டங்களாக இரண்டு வருட இடைவெளியில் நடந்த இரு தேர்தல்களையும் ஒப்பிட்டு பார்க்கும்போது வலுவான திமுக கூட்டணி இந்த இரண்டிலுமே கணிசமான வெற்றியை பதிவு செய்திருப்பது தெரியும்.

அதிமுக ஆட்சியில் இருந்தபோதே திமுக கூட்டணி ஊரக உள்ளாட்சி தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளது. இப்போது திமுக ஆளுங்கட்சியாக இருக்கிறது. தவிர கூட்டணியும் பிளவுபடாமல் அப்படியே உள்ளது. இதனால் பலமடங்கு வெற்றியை அது குவித்திருக்கிறது. அதிமுக கிட்டத்தட்ட தேர்தலை தனித்தே சந்தித்தது. அதனால் அக்கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை.

eps ops - updatenews360

அதேநேரம் சட்டப்பேரவைத் தேர்தலில் இழந்ததை 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மீட்டெடுப்போம் எங்கள் செல்வாக்கை நிரூபிப்போம் என்று சபதம் எடுத்து கிளம்பிய தேமுதிக, அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய மூன்று கட்சிகளின் நிலையும் ‘கிளீன் போல்ட்’ ஆகி விட்டது.

இந்த கட்சிகளில் இருந்து ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு ஒரு சிலர் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டாலும் கூட கட்சி சின்னத்தின் அடிப்படையில் போட்டியிடும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகள்தான் அரசியலில் அதிக அங்கீகாரம் தரக்கூடியவை.

இந்த மூன்று கட்சிகளும் கூண்டோடு காலியாகி இருப்பது, அவற்றின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

நடிகர் விஜயின் மக்கள் மன்ற இயக்கத்தினர் 46 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள். இது எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.

அதிக இடங்களில் போட்டி

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை பொறுத்தவரை ஆளும் கட்சிக்கு வாக்களித்தால் தங்கள் பகுதியில் உள்ள பொதுப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உதவும் என்கிற அடிப்படையில் மக்கள் வாக்களிப்பது உண்டு. அதன் காரணமாக ஆளுங்கட்சிக்கு எப்போதும் கூடுதலாக 5 சதவீத வாக்குகள் கிடைக்கும். மேலும் ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில்தான் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது பலத்தை நிரூபிக்க பணத்தை வாரி இறைப்பார்கள். சுயேச்சைகளும் சரி மல்லுக்கு நிற்பார்கள்.

2019 டிசம்பர் மாதம் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு இதுபோல் ஏன் 5 சதவீத வாக்குகள் கூடுதலாக கிடைக்கவில்லை என்ற கேள்வி எழலாம். அப்போது அதிமுக ஆட்சி முடிவடைய ஒன்றரை ஆண்டுகளே இருந்ததால் அந்த தாக்கம் ஏற்படவில்லை. ஆனால் இப்போது திமுகவுக்கோ இன்னும் நான்கரை ஆண்டு ஆட்சிகாலம் இருக்கிறது. அதனால் ஆளுங்கட்சிக்கு ஆதரவான வாக்குகள் அதிக அளவில் பதிவாகும் என்பது எதார்த்த நிலை. அடுத்து நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் இது எதிரொலிக்கலாம்.

திமுகவின் அதிக வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணம் அது இந்த தேர்தலில் 92 சதவீத இடங்களுக்கும் மேல் போட்டியிட்டதுதான்.

தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை ஒரு அரசு நிறைவேற்றியதா? இல்லையா?… என்பதெல்லாம் உள்ளாட்சித் தேர்தல்களில், அதுவும் சட்டப்பேரவை தேர்தல் முடிந்து சில மாதங்களில் நடக்கும் தேர்தல்களில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. அதனால் ஆளுங்கட்சிக்கு இதில் சாதகமோ, பாதகமோ ஏற்படாது.

பாமகவை பொறுத்தவரை, இந்த தேர்தலில் அக்கட்சி தனித்துப் போட்டியிட்டதற்கு முக்கிய காரணம் வன்னியர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு செய்யப்பட்ட விஷயம்தான். இந்த சட்டத்தை கொண்டு வந்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு. அதை செயல்படுத்தியது திமுக அரசு. இதனால்தான் இந்த இரண்டு கட்சிகளிடம் இருந்து பாமக விலகியே நின்றது.

ஆனால் வடமாவட்டங்களில் மிகவும் வலுவாக உள்ளதாக கூறப்படும் பாமகவால் கூட இந்த தேர்தலில் சோபிக்கவில்லை.

கூட்டணி முக்கியம்

அதேநேரம், அதிமுக ஒன்றும் மோசமான தோல்வியை தழுவி விடவில்லை. 2019 ஊரக உள்ளாட்சி தேர்தல் போல அதிமுகவுக்கு கூட்டணி அமைந்து இருந்தால் கட்சிக்கு குறைந்த பட்சம் 40 முதல் 42 சதவீத இடங்கள் கிடைத்திருக்கும். திமுக கூட்டணி 50 முதல் 52 சதவீத இடங்களில் வெற்றி கண்டு இருக்கும்.

pmk-aiadmk-alliance- updatenews360

எனவே தேர்தல் வெற்றியை பொறுத்தவரை கூட்டணி அமைவதும் மிக முக்கியமானது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போதாவது அதிமுக தனது கூட்டணியை இன்னும் வலுவாக்க வேண்டும்.

யாருக்கு நஷ்டம்?

இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டதால் யாருக்கு நஷ்டம்? என்பதை பாமக, பாஜக, தேமுதிக ஆகிய மூன்று கட்சிகளுமே ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

ஏனென்றால் 2019 ஊரக உள்ளாட்சி தேர்தல்களுடன் ஒப்பிட்டால் இந்த மூன்று கட்சிகளுமே நடந்து முடிந்த தேர்தல்களில் 75 முதல் 90 சதவீத தோல்வியை சந்தித்து இருக்கின்றன. நம்மால் அதிமுக ஆதாயம் அடைவதா?என்று நினைத்தால் அவர்களது கட்சிகளின் எதிர்காலம்தான் முதலில் கேள்விக்குறியாகும்.

அதேநேரம் அதிமுகவுக்கு இரட்டை தலைமை என்பது ஒரு தடையாகவே இருக்க வாய்ப்பு உள்ளது.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி இயங்கினால் அதிமுக வலுவடையும். ஏனென்றால், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் வகுத்த தேர்தல் உத்திகளும் அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது, என்பதை மறந்து விடக்கூடாது.

EPS-ops-updatenews360

எடப்பாடி பழனிசாமிக்கு முதலிடம் கொடுப்பதன் மூலம் கட்சிக்கு அவ்வப்போது குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் சசிகலாவையும் நிரந்தரமாக உள்ளே வரவிடாமல் தடுக்கலாம். ஏனென்றால் ஓ.பன்னீர் செல்வத்தை பொறுத்தவரை இந்த விஷயத்தில் அவர் இரட்டை மன நிலையுடன் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. சசிகலா எந்தவிதத்திலும் அதிமுகவுக்கு பயன் படமாட்டார். அவருக்கு வேண்டுமானால் அதிமுக பயன்படலாம். இது எளிதில் நடக்காது என்பதால்தான் சசிகலா, அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார். அந்த சூழ்ச்சிப் பொறியில் ஓ.பன்னீர்செல்வம் சிக்கி விடக்கூடாது. எம்ஜிஆர் உருவாக்கிய மாபெரும் இயக்கத்தை, ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கத்தை காப்பதற்கு கட்சிக்கு யார் தலைமை என்ற கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வதுதான் அதிமுகவின் எதிர்காலத்துக்கும் நல்லது.

ஏனென்றால் இன்னும் பல தேர்தல்களுக்கு அதிமுக-திமுக இடையேதான் ஆட்சிக்கு போட்டி என்ற நிலை இருக்கும். அதைத்தான் நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும் காட்டுகின்றன” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 289

0

0