உள்ளாட்சியில் உள்குத்து… திருப்பத்தூரில் திமுகவுக்கு ‘திடுக்’… துரைமுருகன் ‘வார்னிங்’ அவுட்!!!

Author: Babu Lakshmanan
14 October 2021, 7:12 pm
Quick Share

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளால் திமுக தலைமை மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் தேர்தலில் 99 சதவீத வெற்றியை பதிவு செய்திருப்பதும் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் 75 சதவீத இடங்களை கைப்பற்றி உள்ளதும்தான் அந்த மகிழ்ச்சிக்கு காரணம்.

திருப்தியில்லாத திருப்பத்தூர்

ஆனால் இந்த தேர்தல் முடிவுகளில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் முகத்தில் மட்டும் மலர்ச்சி முழுமையாக இல்லை என்று திமுக நிர்வாகிகள் வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு உள்ளது.

துரைமுருகன் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கட்சியின் முழுக் கட்டுப்பாடும் அவரிடம்தான் உள்ளது என்று கூறும் அளவிற்கு அதிகாரம் மிக்கவர். அதாவது வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அவர் சொல்படிதான் திமுகவினர் நடந்துகொள்வார்கள்.

duraimurugan_updatenews360

55 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் இருப்பதாலும், கட்சியின் பொதுச்செயலாளர் என்பதாலும்
அவர் சொல்லை இந்த மாவட்ட நிர்வாகிகள் மீறுவது கிடையாது. தட்டாமல் நிறைவேற்றுவார்கள். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தபின்பு நடத்தப்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் திருப்பத்தூர் மாவட்ட திமுகவுக்கு முழு திருப்தி தருவதாக அமையவில்லை.

திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் திமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் 100 சதவீத வெற்றியை உறுதி செய்யும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். 100 சதவீத வெற்றி என்பது சாத்தியமில்லை என்றாலும்கூட, 90 சதவீதமாவது வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்தில் கட்சிக்காரர்களிடம் அவர் அப்படி கூறியிருக்கலாம். அவர் நினைத்தது போலவே மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளை திமுக கைப்பற்றி விட்டது. ஆனால் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் தேர்தலில் அப்படி நடக்கவில்லை.

பாஜக வெற்றி எப்படி..?

தேர்தல் நடந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி என 9 மாவட்டங்களில் திமுகவுக்கு மிகக் குறைவான வெற்றி சதவீதத்தை கொடுத்திருப்பது, திருப்பத்தூர் மாவட்டம்தான்.

இந்த மாவட்டத்தில் மொத்தம் 125 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகள் உள்ளன. இதில் திமுகவுக்கு 77, அதிமுகவுக்கு 33, பாமகவுக்கு 3, பாஜகவுக்கு 1, தேமுதிகவுக்கு 1, சுயேச்சைகளுக்கு 8 இடங்களும் கிடைத்துள்ளன. ஒரு இடத்துக்கு தேர்தல் நடக்கவில்லை. இன்னொரு இடத்திற்கு முடிவு அறிவிக்கப்படவில்லை.

annamalai bjp - updatenews360

அதாவது இந்தப் பதவிகளில் திமுகவுக்கு கிடைத்த வெற்றி சதவீதம் 60.3தான். அதிமுகவுக்கு 28 சதவீதம். அதுமட்டுமின்றி மற்ற மாவட்டங்களில் பரவலாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவிகளில் வெற்றி பெற்றுள்ளன. இங்கு அப்படி இல்லை. திமுகவின் கூட்டணி கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி ஒரே பெறாத மாவட்டம் இதுதான். தவிர, முன்பு அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, பாஜக, தேமுதிக கட்சிகளும் தங்களது வெற்றியை இந்த மாவட்டத்தில் பதிவு செய்துள்ளன, என்பதும் குறிப்பிடத்தக்க அம்சம்.

வட மாவட்டங்களில் பாமக வலுவான கட்சி. அதனால் அக்கட்சி திருப்பத்தூரில் வெற்றி பெற்றிருப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால் பாஜகவும், தேமுதிகவும் எப்படி வெற்றியை பெற்றன என்பதுதான் மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு ஆச்சரியம் தரும் கேள்வியாக உள்ளது.

அதிமுகவை பொறுத்தவரை விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 48 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் தேர்வாகியுள்ளனர். எனினும் இங்குள்ள மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 293.
இதற்கு அடுத்தாற்போல் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்கள் 37 பேர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களாக வெற்றி பெற்றுள்ளனர். இங்கு மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 154.

மற்ற 6 மாவட்டங்களில் இதைவிட குறைவான எண்ணிக்கையில்தான் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள்தான் அதிமுகவில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

விமர்சனம்

இத்தனைக்கும் உள்ளாட்சி தேர்தல் நடப்பதற்கு முன்பாக திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகரில் நடந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசும்போது,
“ஒரு பதவியை 20 பேர் கேட்கிறார்கள். அதுல ஒருவருக்குத்தான் கொடுக்க முடியும். மற்றவர்களுக்கு கொஞ்சம் வருத்தம் இருக்கும். பொதுச்செயலாளர், சட்டமன்றத் தலைவர் என்ற முறையில் அவர்களுக்கெல்லாம் நான் ஓர் உறுதிமொழியைத் தருகிறேன்.

இந்த தேர்தல் முடிந்தவுடன் முதல் வேலையாக எல்லா சொசைட்டிகளையும் கலைத்துவிடுவோம். அதற்கான கையெழுத்தும் போடப்பட்டுவிட்டது. தேர்தல் காலத்தில் அறிவிக்கக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. எனவே, தேர்தல் ரிசல்ட் வந்த மூன்றாவது நாள் சொசைட்டிகள் கலைக்கப்படும். சர்க்கரை மில், பால்வளம் உட்பட எல்லாற்றையும் கலைப்பேன்.

Duraimurugan - Updatenews360

எனவே, உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கெல்லாம் சீட் விட்டுப்போனதோ அவர்களுக்கெல்லாம் உரிய பதவிகள் தரப்படும். யாரும் அவசரப்படாதீங்க. கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை நானே கட்டம் கட்டிவிடுவேன். சீட் கிடைக்காத ஆத்திரத்தில் எங்களை அடித்தால்கூட வாங்கிக்கொள்வோம். உங்களுக்கு உரிமையுண்டு. ஆனால், கட்சிக்குத் துரோகம் செய்கிறவன் எவ்வளவுப் பெரிய ஆளாக இருந்தாலும், இந்த துரைமுருகன் நினைத்தால் 24 மணி நேரத்தில் கட்டம் கட்டிவிடுவான். எத்தனை காலத்துக்குத் துரோகிகளையே பார்த்துக்கொண்டிருப்பது. அண்ணா காலத்தில் சம்பத்தைப் பார்த்தோம். அதன்பின் எம்.ஜி.ஆரைப் பார்த்தோம். அப்புறம் கோபால்சாமியைப் பார்த்துள்ளோம். இனிமேல் அப்படி பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். கட்டுப்பாடுடன் இருங்கள்” என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

உள்ளடி வேலை

துரைமுருகன் எதற்காக இப்படிச் சொன்னார் என்பது வெளிப்படையான விஷயம். அதாவது யாரும் கட்சிக்குள் உள்ளடி வேலை செய்து கெட்ட பெயரை வாங்கிக் கொள்ளாதீர்கள். மீறினால் கட்சியில் இருக்க மாட்டீர்கள், நீக்கி விடுவோம் என்பதற்காக அப்படி தனக்கே உரிய பாணியில் மிரட்டியிருக்கிறார். இதில் தேவையில்லாமல் எம்ஜிஆர் பெயரை இழுத்து அதிமுகவிடம் துரைமுருகன் வாங்கி கட்டிக்கொண்டது தனிக்கதை.

ஆனால் அவர் இப்படி சொன்ன பிறகுதான் திமுகவின் உள்ளடி வேலைகள், அதிகம் நடந்துள்ளதாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அவர்கள் கூறும்போது, “அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை செய்துவிட்டு சென்ற பிறகு திமுக நிர்வாகிகள் சற்று சோர்ந்து போய் விட்டனர். நம்மை நம்பமாட்டேன் என்கிறாரே என்றும் அவர்களுக்கு உள்ளூர வருத்தம். சொசைட்டியில் பதவி கிடைக்கும் என்பதெல்லாம் எளிதான காரியம் அல்ல என்பதும் அவர்களுக்கு தெரியும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் தனித்தொகுதி இல்லாமல் போனது ஏன்? | nakkheeran

இதனால் திமுகவின் இடை நிலை நிர்வாகிகள் உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்பதே உண்மை. தவிர பல இடங்களில் உள்குத்து வேலையும் நடந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, ஆலங்காயம், நாட்டறம்பள்ளி, மாதனூர் என்னும் 6 ஒன்றியங்கள் உள்ளன. இதில்கந்திலி, நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியங்களில் இதுபோல் உள்ளடி வேலைகள் அதிகம் நடந்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்த இரண்டு ஒன்றியங்களிலும் திமுகவுக்கு, அதிமுக செமயாக ஃபைட் கொடுத்தது. திமுக 17 இடங்களும், அதிமுக 13 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதனால் திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளர் தேவராஜின் பதவி பறிக்கப்படலாம்.

துரைமுருகனிடம் எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு. கட்சியினர் மீது நடவடிக்கை எடுப்பதில் சொன்ன சொல் மீற மாட்டார். அவர் சொன்னது போலவே உள்ளடி வேலைகளில் ஈடுபட்டவர்கள் விரைவில் கட்டம் கட்டப் படலாம்.

ஆனால் திமுக நிர்வாகிகளில் ஒரு சிலர் இந்த இரு ஒன்றியங்களிலும் உண்மையிலேயே அதிமுகவுக்கு செல்வாக்கு உண்டு. அதனால்தான் அங்கு அவர்கள் அதிக வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதில் உள்ளடி வேலை எல்லாம் எதுவும் நடக்கவில்லை என்கின்றனர்” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 196

1

0

Leave a Reply