உள்ளாட்சி தேர்தலில் வெற்றிகளை குவித்த விஜய் மக்கள் இயக்கம் : அரசியல் என்ட்ரிக்கு பிள்ளையார் சுழியா..? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!
Author: Babu Lakshmanan12 October 2021, 7:49 pm
ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலர் வெற்றி பெற்றிருப்பது விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும், கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி உள்பட புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இருகட்டங்களாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள், கிராம ஊராட்சி தலைவர் பதவிகள், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் நிரப்பப்படுகின்றன.
9 மாவட்டங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், ஆளும் திமுகவே முன்னிலைப் பெற்றுள்ளது. எதிர்கட்சியான அதிமுக ஒரு சில இடங்களையே கைப்பற்றியுள்ளது. அதிலும், பாமக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் முன்னிலை பெற முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன.
இந்த சூழலில், உள்ளாட்சி தேர்தலில் முதல்முறையாக களமிறங்கிய விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பலர் வெற்றிகளை குவித்திருப்பது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டனர். அவர்களில் இதுவரை 52 பேர் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடப்பாடி 4வது ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்குவிஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிட்ட ரீனா புருஷோத்தமன், மாமண்டூர் 2வது ஊராட்சியில் 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட லோகநாதன், காஞ்சிபுரம் கருப்படித்தட்டை, காந்தி நகர் 1வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட விஜய் ரசிகர் மன்ற நகர செயலாளர் எம்.பிரபு ஒரு வாக்கு வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றார்.
அரசியல் கட்சி தொடங்குவதில் தந்தை எஸ்ஏ சந்திரசேகருக்கும், தளபதி விஜய்க்கும் மோதல் ஏற்பட்ட நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தினரின் இந்த வெற்றி பெரும் அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த வெற்றியை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஒருவேளை, விஜய் அரசியலில் குதிப்பதற்கான முன்னோட்டமாக இந்தத் தேர்தல் இருக்கலாம் என்ற பேச்சும் ஒருபுறம் அடிபட்டு வருகிறது. பொறுத்திருந்திருந்து பார்ப்போம்… விஜயின் சர்க்கார் எப்போது என்று…!!
1
0