வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடக்கும்… தேர்தல் ஆணையம் மீது சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை…!
Author: Babu Lakshmanan12 October 2021, 12:49 pm
ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையை மாநில தேர்தல் ஆணையம் நடத்தும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் இருகட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதனிடையே, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருப்பதால், வாக்கு எண்ணிக்கையை வீடியோவாக பதிவு செய்ய உத்தரவிடக் கோரி திரிசூலம் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கும், வார்டு உறுப்பினர் பதவிக்கும், பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் பதவிக்கும் போட்டியிட்ட சரஸ்வதி, சத்தியநாராயணன், முத்துக்கனி ஆகியோர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, வாக்கு எண்ணிக்கை இன்று காலையே தொடங்கி விட்டதாகக் கூறிய நீதிபதிகள், வாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்த சட்டப்படி உரிய நடவடிக்கைகளை மாநிலத் தேர்தல் ஆணையம் எடுக்கும் என நம்புவதாக தெரிவித்தனர். மேலும், இந்த மனு தொடர்பாக இரு வாரங்களில் பதிலளிக்க மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.
0
0