கூடுதல் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் : உள்ளாட்சித் தேர்தலில் தீவிரம் காட்டும் அதிமுக!!

Author: Babu Lakshmanan
13 September 2021, 7:13 pm
Quick Share

வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலையொட்டி, கூடுதல் தேர்தல் பொறுப்பாளர்களை அதிமுக நியமனம் செய்துள்ளது.

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்.,6 மற்றும் 9ம் தேதிகள் என இருகட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு அக்.,6ம் தேதியும், தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு அக்.,9ம் தேதியும் தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

மேலும், வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய செப்டம்பர் 22ம் தேதி கடைசி நாளாகும். செப்.,23ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. செப்.,25ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். பதிவாகும் வாக்குகள் அக்.,12ம் தேதி எண்ணப்படுகிறது.

தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்ததும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிக்குழுவை நியமனம் செய்து, தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வந்தது. அந்த வகையில், அதிமுக சார்பிலும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமனம் செய்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி, செங்கல்பட்டுவிற்கு நத்தம் விஸ்வநாதனும், வேலூருக்கு சேவூர் ராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணியனும், நெல்லைக்கு ராஜலெட்சுமி, கோபாலகிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 229

0

0