சொகுசு கார் விவகாரம்… நடிகர் விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கும் கண்டனம் : நடிகர்களுக்கு தனிச்சட்டம் கிடையாது..? நீதிபதி விளாசல்..!!

Author: Babu
5 August 2021, 11:17 am
Dhanush-Rolls-Royce-Car - updatenews360
Quick Share

இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி வழக்கு தொடர்ந்த நடிகர் தனுஷுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

2012ம் ஆண்டு இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தனிநீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இதனிடையே, தனிநீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், அத்தீர்ப்பிற்கு இடைக்கால தடையும் விதிக்கப்பட்டது.

இதேபோலவே, கடந்த 2015ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து நடிகர் தனுஷ் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது, 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற வணிக வரித்துறையின் உத்தரவை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உத்தரவிட்டது. பின்னர், நடிகர் விஜயின் வழக்கை விசாரித்த தனி நீதிபதி சுப்பிரமணியம் முன்பு விசாரணை வந்தது. அப்போது, தனுஷ் தரப்பில் யாரும் ஆஜராகாததால், இந்த வழக்கின் விசாரணை இன்றை தினத்திற்கு வந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கோருவது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் தனுஷுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

சோப்பு, பெட்ரோல் வாங்கும் சாமானிய மனிதர்கள் வரி செலுத்துகின்றனர், கார் வாங்கும் நீங்கள் ஏன் வரி செலுத்த மறுக்கிறீர்கள் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்தியாவில் சாமானிய மனிதர்களுக்கு ஒரு சட்டம், நடிகர் தனுஷுக்கு ஒரு சட்டம் என்று இல்லை என்று காட்டமாக கூறிய நீதிபதி சுப்பிரமணியம், நடிகர் என்பதை தெரிவிக்காமல் நுழைவு வரி விலக்கு கேட்டது ஏன்..? எனவும், இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தனுஷுக்கு உத்தரவை பிறப்பித்தார்.

இதைத் தொடர்ந்து, நடிகர் தனுஷ் செலுத்த வேண்டிய நுழைவு வரி விபரங்களை இன்று பிற்பகல் தாக்கல் செய்யுமாறு வணிகவரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் வழக்கை விசாரித்த நீதிபதியே நடிகர் தனுஷின் வழக்கை விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 308

1

0