மதுரையை உலுக்கிய ஐடி ரெய்டு… கணக்கில் வராத ரூ.175 கோடி… வசமாக சிக்கிய அமமுக பிரமுகர்..!!

4 March 2021, 6:46 pm
madurai it raid 1 - - updatenews360
Quick Share

மதுரை : மதுரை அருகே உள்ள அமமுக நிர்வாகியின் வீட்டில் 2வது நாளாக ஐடி ரெய்டில் ரூ.175 கோடி கணக்கில் வராத வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க கட்டுக்கட்டாக பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக வருமானவரித்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மதுரையை சேர்ந்த தொழிலதிபர் வெற்றிக்கு சொந்தமான 15க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஐரவாதநல்லுரில் உள்ள கட்டுமான நிறுவனம், வில்லாபுரத்தில் உள்ள திரையரங்கு, கூடல்நகரில் உள்ள அலுவலகம் மற்றும் பாண்டிகோவிலில் உள்ள வீடு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று முதல் வருமான வரித்துறையை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குழுவினர் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சோதனை 2வது நாளாக இன்றும் நீடித்தது. இந்த சோதனையில், கணக்கில் வராத வருவாய் ரூ.175 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.3 கோடி கணக்கில் வராத ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு வரவு, செலவு கணக்குகளில் பல்வேறு குளறுபடிகள் செய்திருப்பதாக கூறும் வருமான வரித்துறையில், 20 சதவீத வருவாயை 2 சதவீதமாக குறைத்து காட்டியதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொழிலதிபர் வெற்றி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பு செயலாளரும், உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மகேந்திரனின் உடன் பிறந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 275

1

0