‘வாழ்க நீ எம்மான்’ – காந்தி என்றொரு காவியத் தலைவர்!! காந்தியை ‘மகாத்மா’ ஆக்கிய தமிழகம்..!

By: Babu
2 October 2020, 1:08 pm
GANDHI 7-updatenews360
Quick Share

மகாத்மா –
அகிம்சை அண்ணல் –
தேசத் தந்தை –
என்றெல்லாம் பலவாறாக நம் நாட்டு மக்களால் அன்போடு அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களின் பிறந்த நாள் இன்றுதான்.

இந்த பூமியில் உதித்த பல தலைவர்கள் முகவரி இல்லாமல் முடிந்து போயிருக்கும் போது, இவர் மட்டும் எப்படி இன்னும் கொண்டாடப்படுகிறார்? அதுவும் இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் எப்படி விழா நாயகராக இருக்கிறார்?

“இப்படியொரு மாமனிதன் ரத்தமும், சதையும் எலும்புமாக நம் கண்ணெதிரே வாழ்ந்தார் என்பதை சத்தியம் செய்து சொன்னாலும், வருங்காலத் தலைமுறை நம்பவே நம்பாது” என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.

“நான் இறைவனிடம் ஒரேயொரு வரத்தைத்தான் கேட்பேன், இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியோடு ஒரேயொரு நாள் தங்கி உணவருந்த வேண்டும் என்ற வரத்தை மட்டுமே கேட்பேன்” என்று சொன்னவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா. இத்தனைக்கும் இவர் காந்தி இறந்தபிறகு பிறந்தவர்.

“என்னுடைய போராட்ட குணத்திற்கு ஒரேயொரு ரோல்மாடல் மகாத்மா காந்தி” என்றார் நெல்சன் மண்டேலா.

உலகம் முழுவதும் தனது உதடுகளைத் திறந்து உவகையோடு, அந்த மனிதரின் பெயரை உச்சரிக்கக் காரணம், காந்தியின் வாழ்வு முறை.

காந்தியை வெறும் அரசியல் தலைவர் அல்லர், காந்தி என்றாலே ஏதோ வெள்ளையர் ஆட்சியை அகற்றி விடுதலை பெற்றுத் தந்தவர் எனும் படியாக அவர் சித்தரிக்கப் பட்டுவிட்டார். அது தவறு.

காந்தி என்பவர் இந்திய சமுதாயத்தின் ஆன்மா.

ஒரு தனிமனிதன் எப்படி இருக்க வேண்டும்? ஒரு தலைவன் எவ்வாறு இருக்க வேண்டும்?
ஒரு போதகன் எங்ஙனம் இருக்க வேண்டும்?
ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

என்ற கேள்விகளுக்குத் தன் வாழ்க்கையாலேயே விடை பகர்ந்தவர்தான் காந்தி.

தென்னாப்பிரிக்காவில் இருக்கும் போது அங்குள்ள கருப்பர் உரிமைக்காகப் பாடுபட்டார். அங்கே உள்ள கருப்பின மக்களின் ஓட்டு உரிமைக்காகவும், தரமான வாழ்வு பெறுவதற்காகவும் போராடிச் சாதித்தவர் காந்தி.. அங்கேதான் தன் அகிம்சை போர்முறையை அறிமுகப் படுத்தி வெற்றி கண்டார் காந்தி.

இன்று தென்னாப்பிரிக்காவின் பல்வேறு இடங்களில் காந்தியின் சிலைகள் அலங்கரிக்கின்றன. அந்த மக்கள் நன்றியுள்ளவர்கள்.

இந்தியாவிற்கு வந்த காந்தி, இந்தியா முழுவதையும் சுற்றி நம் மக்களின் நிலையை அறிந்து கொள்கிறார்.

தமிழகத்திற்கு வரும் போதுதான், தானும் மக்களில் ஒருவனாக மாறி, தனது ஆடம்பர உடைகளை அகற்றி விட்டு, அரையாடை மனிதனாகத் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டார்.

ஒருவகையில் காந்தியைத் தமிழகம்தான் “மகாத்மா காந்தி” ஆக்கி இருக்கிறது. உடை மாற்றத்தோடு உள்ளத்தையும் எளிமைப்படுத்திக் கொண்டார்.

பீகாரில் நடந்த சம்பாரண் போராட்டம்தான் இந்தியாவில் காந்தீயத்திற்குக் கிடைத்த முதல் வெற்றி. ஒத்துழையாமை இயக்கம், உண்ணாவிரதங்கள், உப்பு சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் …. என்று பல அரசியல் போராட்டங்களை நடத்திக் காட்டியவர்தான காந்தி. ஆனால், அந்த விடுதலைப் போராட்டங்களோடு மட்டுமே காந்தி நின்றுவிட வில்லை.

தீண்டாமை ஒழிப்பு, இந்து முஸ்லிம் ஒற்றுமை, சுதேசிப் பொருள் பயன்பாடு, தரமான கல்வி, எளிமை வாழ்வு, தனி வாழ்விலும் பொது வாழ்விலும் தூய்மை, சமூக நல்லிணக்கம், அகிம்சை முறை, புலன்களின் தேவைகளைக் கூட புறக்கணித்த வாழ்க்கை முறை, கிராம மேம்பாடு, சமூகம் சார்ந்த பொருளாதாரத் திட்டங்கள்………….

என்று எத்தனை வகையான போதனைகள்!
இதில் வியப்பு என்னவென்றால் அத்தனையையும் அவர் தம் வாழ்நெறியாக்கி வாழ்ந்து நிரூபித்தார் என்பதுதான்.

உலக நாடுகளிலேயே நம் நாடு மிகவும் வித்யாசமான நாடு. இந்தியாவை ஒருங்கிணைப்பதைப் போல கஷ்டமான காரியம் உலகில் வேறு எதுவும் கிடையாது.
பல்வேறு மொழிகள், பல்வேறு இனங்கள், பல்வேறு ஜாதிகள், பல்வேறு மதங்கள், பல்வேறு கலாச்சாரங்கள். இந்த நிலையில் இந்தியாவை ஒருங்கிணைத்து இயக்குவது எவ்வளவு கடினம்?
இன்றைக்கே இதுதான் நிலைமை.

யோசித்துப் பாருங்கள், இன்றைக்காவது தொலைக்காட்சி, பேப்பர், சினிமா, ரேடியோ போன்ற மீடியாக்கள், தொலைபேசி வசதிகள், எஸ்எம்எஸ், வாட்சப், ஃபேஸ் புக் …. என்றெல்லாம் ஒட்டுமொத்த மக்களையும் சென்றடைய இவ்வளவு வசதிகள் இருக்கும் இந்தக் காலத்திலேயே இந்திய ஒருங்கிணைப்பு மாபெரும் கஷ்டம் என்றால், மேற்குறிப்பிட்ட எந்த வசதியும் இல்லாத அந்தக் காலத்தில் அனைத்து இந்திய தேச மக்களையும் ஒருங்கிணைத்தது எவ்வளவு பெரிய சாதனை?

சாதித்தாரே காந்தி! எந்தத் தொழில்நுட்ப விஞ்ஞான வசதியும் அற்ற அந்தக் காலத்திலேயே ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒருங்கிணைத்துக் காட்டினாரே!
அதனால்தானே எதிரி கூட அவரை மதித்தான்!

காந்தியைப் பரம எதிரியாக நினைத்த பிரிட்டன் நாடே காந்தி நினைவுத் தபால் தலை வெளியிட்டதே!

சுதந்திரம் பெறுவதற்கு முன் ஓர் அயல்நாட்டு நிருபர் காந்தியைப் பேட்டி கண்டார். அவர் ஒரு கேள்வியை காந்தியிடம் எழுப்பினார்
“பாபுஜி கடவுள் மூன்று வரங்களை உங்களுக்கு தருவதாக வைத்துக் கொண்டால் எந்தெந்த வரங்களை நீங்கள் கேட்பீர்கள்”

காந்தி புன்னகையுடன் பதிலளித்தார் –
“முதல் வரம் தீண்டாமை ஒழிப்பு,
இரண்டாம் வரம் இந்து முஸ்லிம் ஒற்றுமை,
மூன்றாம் வரம் சுதேசிப் பொருள் பயன்பாடு
இவை மூன்றைத்தான் கேட்பேன்”

Mahatma_Gandhi_ - updatenews360

நிருபர் வியந்து போய் “நீங்கள் இந்திய சுதந்திரத்தை அல்லவா, முதல் வரமாகக் கேட்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்” என்று கூற, அதற்கு மகாத்மா சொன்ன பதில் என்ன தெரியுமா, ” இந்த மூன்றும் கிடைத்து விட்டால் சுதந்திரம் தானே வந்துவிடும். அப்படியே இந்த மூன்றையும் பெற்றுத் தராத சுதந்திரத்தால் எந்தப் பயனும் கிடையாது”

அதுதான் காந்தி. சுதந்திரம் என்பது வெறும் ஆட்சி மாற்றமாகவோ அரசியல் மாற்றமாகவோ இல்லாமல் சமூக வாழ்வியல் மாற்றமாகப் பார்த்த தெளிவான தலைவர் காந்தி.

இவையெல்லாம் காந்தி எனும் கற்பக விருட்சத்தின் பொதுவாழ்வின் போற்றுதலுக்குரிய குணங்கள்.

ஓகே! அவரது தனிவாழ்வில் என்ன சிறப்பு?

ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் இருவேறு மொழிகளில் எழுதும் ஆற்றல் படைத்தவர் காந்தி.
நடப்பதற்கு அஞ்சாதவர் நடை மன்னர். அவர் 25 வருடங்களில் நடந்த தூரத்தை 79,000 கி.மீ. என்று கணிக்கிறார்கள். இது நம் முழு உலகையும் இரண்டு முறை சுற்றி வருவதற்கு சமம்.

21 நாட்கள் வரை நீர் கூடப் பருகாத உண்ணாவிரதம் இருந்து பிரிட்டிஷாரை பதற வைத்தவர் காந்தி.

உலகில் எல்லா நாட்டுத் தலைவர்களும், யார் புரட்சியை முன்னின்று நடத்துகிறார்களோ அந்தத் தலைவர்கள்தான் அந்த தேசத்தின் அதிபர் ஆவார்கள். அமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டன், ரஷ்யாவில் லெனின், சீனாவில் மாசேதுங்…….. இப்படியாகப் பட்டியல் நீளும்.

ஆனால் காந்தி மட்டுமே இதில் வித்தியாசமானவர். தனக்கோ, தன் குடும்பத்தினருக்கோ, ஒரு வார்டு கவுன்சிலர் பதவியைக் கூடக் கோராதவர். அவர் அன்று நினைத்திருந்தால் இந்தியாவின் பிரதமராகவே ஆகியிருக்கலாம். ஆனால், அவர் ஆசைப் படவேயில்லை. அதிலிருந்து ஒதுங்கி இருந்தார். சுதந்திரத்திற்காக முழுமையாக பாடுபட்டு அந்த சுதந்திரம் கிடைத்தவுடன் அந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்காமல் வெற்று மனிதனாக முற்றாக அந்த மனித தெய்வம் ஒதுங்கிப் போனது.

அதனால்தான் சாதாரண ஒரு மனிதர் மகாத்மாவாக இன்றும் போற்றப் படுகிறார்..
வாழ்க மகாத்மாவின் புகழ்.

Views: - 74

0

0