கலகலத்த மக்கள் நீதி மய்யம் : கமலுக்கு ‘டாட்டா’ காட்டும் நிர்வாகிகள்!!

7 May 2021, 4:25 pm
kamal party - updatenews360
Quick Share

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்தவரும், கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளருமான டாக்டர் மகேந்திரன் அக்கட்சியின் அத்தனை பொறுப்புகளில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு இருக்கிறார். சென்னையில் நடந்த கமல் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தனது ராஜினாமா கடிதத்தையும், 10 பக்க விளக்க கடிதம் ஒன்றையும் கொடுத்து விட்டுவெளியேறிய மகேந்திரன், கமல் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.

நடிகர் கமல் மீது இப்படி தடாலடியாக குற்றச்சாட்டுகளை கூறியிருக்கும் டாக்டர் மகேந்திரன், மக்கள் நீதி மய்யத்தின் கொங்கு மண்டல தூணாக இருந்தவர் என்று சொல்லலாம்.

kamal - and mahendran - updatenews360

2019 நாடாளுமன்ற தேர்தலில் கமல் கட்சி சார்பில் கோவை தொகுதியில் போட்டியிட்ட அவர் ஒரு லட்சத்து 45 ஆயிரம் வாக்குகள் பெற்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். அதுமட்டுமல்ல, கமல் கட்சி போட்டியிட்ட 37 தொகுதிகளில் கோவை நாடாளுமன்ற தொகுதியில்தான் அதிக ஓட்டுகளை பெற்றிருந்தது.

இதன் காரணமாகத்தான் இந்த 2021 தேர்தலில் நடிகர் கமல், தான் பிறந்த ஊர் தொகுதியான பரமக்குடியிலோ அல்லது 60 ஆண்டு காலமாக வசித்து வரும் சென்னையின் ஏதோ ஒரு தொகுதியிலோ போட்டியிடாமல் கோவை தெற்கு தொகுதியில் களம் இறங்கினார்.

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறிய மகேந்திரன், கமல் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளில்
3 மிக முக்கியமானவை. கட்சியில் ஜனநாயகம் இல்லை என்பது அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு இன்னொரு அர்த்தம், கமல் ஒரு சர்வாதிகாரி போல செயல்படுகிறார் என்பதாகும். இந்தக் கூற்றில் உண்மை இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் கமல் என்கிற ஒரு பிரபல நடிகரை மட்டுமே மையமாக வைத்து இன்றளவிலும் அக்கட்சி இயங்கி வருகிறது. எனவே, கட்சித் தலைவரின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புதான் இதுபோன்ற கட்சிகளில் வெளிப்படும் என்பது முற்றிலும் உண்மையான ஒன்று.

மகேந்திரனின் 2-வது குற்றச்சாட்டு, தமிழகத்தை சீரமைப்பதற்கு முன்பாக கட்சியை சீரமைக்க வேண்டும் என்பது. அவர் இப்படி சொல்வதை பார்த்தால், கட்சியில் கமலுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஒரு சிலர் எடுக்கும் முடிவுகளைத்தான் கமல் ஏற்றுக் கொள்கிறார், அவர்கள் சொல்வதைத்தான் கமல் அப்படியே கேட்டு நடக்கிறார் என்பதும் தெளிவாகப் புரிகிறது.

அதாவது, கட்சியின் முக்கிய நிர்வாகிகளை களை எடுங்கள் என்று டாக்டர் மகேந்திரன் கமலுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

kamal-pazha-karuppaiah - updatenews360

இதை உண்மை என்று கூறுவது போல், மக்கள் நீதி மய்யத்தின் முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் 10 பேர் தங்களுடைய ராஜினாமா கடிதங்களை கமலிடம் கொடுத்துள்ளனர்.
அதேநேரம் மகேந்திரன் போல இன்னும் பலர் கட்சியை விட்டே வெளியேறுவார்கள் என்ற நிலை காணப்படுகிறது.

மகேந்திரன் கூறிய இன்னொரு முக்கிய குற்றச்சாட்டுதான் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. வண்டியை சரியாக ஓட்ட தெரியாத டிரைவர் கமல், கால்வாயில் கொண்டுபோய் அதை கவிழ்த்து விட்டார் என்று மகேந்திரன் கூறியிருக்கிறார். இது எளிதாக புரிந்து கொள்வதற்காக கூறப்பட்ட விஷயம் என்றாலும் கூட, இதில் உள்ளர்த்தம் ஒன்றும் பொதிந்து கிடக்கிறது என்று மகேந்திரன் ஆதரவு நிர்வாகிகள் சிலர் கூறுகின்றனர்.

இதுபற்றி அவர்கள் கூறும்போது, “2019 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சென்னை, கோவை உள்ளிட்ட நகர்ப்புறப் தொகுதிகளில்தான் அதிக ஓட்டுகளைப் பெற்றது. இதனால் சில முக்கிய கட்சிகள் எங்களை மட்டுமே இந்த தேர்தலில் குறி வைத்தன.

காலங்காலமாக நகர்ப்புற தொகுதிகளில் கோலோச்சி வரும் தங்களை சட்டப் பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஆட்டம் காண வைத்து விடுமோ என்று அந்தக் கட்சிகள் பயந்தன.

2019 நாடாளுமன்ற தேர்தலில் சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் வாங்கிய ஓட்டுகள் 3 லட்சத்து 35 ஆயிரத் துக்கும் அதிகம். ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் குறைந்தபட்சம் 15 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 20 ஆயிரம் ஓட்டுகள் வரை பெற்றது.

அதாவது சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 11 சதவீத ஓட்டுகள் வரை மக்கள் நீதி மய்யத்துக்கு கிடைத்தது. தற்போது அந்த ஓட்டு சென்னையில் 5 சதவீதத்துக்கும் கீழாக சரிந்து விட்டது. இந்த ஓட்டுகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு சேரும் விதமாக கமல் நடந்து கொண்டதால்தான் வண்டியை சரியாக ஓட்டத் தெரியாமல் கால்வாயில் கொண்டுபோய் கவிழ்த்துவிட்டார், என்று மகேந்திரன் கூறியதற்கு அர்த்தம்.

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் தனது கட்சிக்கு கிடைத்த ஆதரவை கணக்கிட்டுதான் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிட்டார். கோவையை சுற்றியுள்ள தொகுதிகளிலும் அவர் ஆர்வம் காட்டினார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டபோது எங்கள் கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்ததோ, அதே அளவிற்கான ஓட்டுகள் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் கிடைத்துவிட்டது.

ஆனால் சென்னையிலும், அதன் புறநகர் பகுதிகளிலும் உள்ள 26 தொகுதிகளில் அப்படி நடக்கவே இல்லை. அதற்கு முக்கிய காரணம் கமல் தனது சுயநலம் காரணமாக கோவை தெற்கு தொகுதியிலேயே முடங்கி பிரச்சாரம் செய்தது, சென்னை தொகுதிகளில் எந்த ஆர்வமும் காட்டாததும்தான். இந்த ஓட்டுகளை வேறு சில கட்சிகள் அறுவடை செய்ய கமல் காரணமாகி விட்டார் என்பதே எங்களது சந்தேகம்.

உண்மையைச் சொல்லப்போனால் நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்ததை விட நகர்ப்புற தொகுதிகளில் எங்களுடைய வாக்கு 15 சதவீதத்திற்கும் மேலாக இந்த தேர்தலில் அதிகரித்து இருக்கவேண்டும்.

ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சியினர் வெற்றி பெறுவார்களா? மாட்டார்களா? என்பது தெரியாத நிலையிலேயே நகர்ப்புறப் தொகுதிகள் பலவற்றில் 10 சதவீதம் பேர் மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவாக ஓட்டுப் போட்டிருந்தனர்.

இந்த சட்டப் பேரவை தேர்தலில் கமலை முதல்வர் வேட்பாளராக அறிவித்துத்தான் களம் இறங்கினோம். எனவே நகர்ப்புற தொகுதிகளில் 15 சதவீத வாக்குகளையும், கிராமப்புற தொகுதிகளில் 10 சதவீத வாக்குகளையும் எதிர்பார்த்தோம். ஆனால் இரு பகுதிகளிலுமே எங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

எனவேதான் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்கு ஒட்டு மொத்தமாக கிடைத்த
4 சதவீத ஓட்டு இந்த தேர்தலில் இரண்டரை சதவீதத்துக்கும் கீழாக சரிந்து விட்டது.

இதெற்கெல்லாம் கமல் விளக்கம் சொல்ல மாட்டார். ஏனென்றால் அரசியலை விட அவருக்கு சினிமாதான் முக்கியம். அவருக்கு அரசியல் என்பது பகுதி நேரத் தொழில்தான்” என்று தங்களது மனக்குமுறலை அந்த நிர்வாகிகள்
கொட்டித் தீர்த்தனர்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் என்ன கூறுகிறார்?… “கட்சியில், களை எடுக்கப்பட வேண்டியவர்கள் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் டாக்டர் மகேந்திரன்தான். கட்சிக்காக உழைக்கத் தயாராக இருந்த பல நல்லவர்களை தலையெடுக்க விடாமல் செய்தது அவருடைய சாதனை. எப்படியும் தன்னை கட்சியில் இருந்து நீக்கி விடுவார்கள் என்பதை தெரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக முன்கூட்டியே அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இனி நம் கட்சிக்கு ஏறுமுகம்தான்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கட்சியின் நிர்வாகிகள் சிலர் எழுப்பியுள்ள சந்தேகங்களை களைந்து வெளிப்படைத் தன்மையை கமல் கடைப்பிடித்தால் மட்டுமே மக்கள் நீதி மய்யம் என்னும் வண்டி சரியான திசையை நோக்கி பயணிக்கும்.

இல்லையென்றால், ஒவ்வொரு தலைவராக கட்சியிலிருந்து வெளியேறிக் கொண்டேதான் இருப்பார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

Views: - 238

0

0