பிரதமர் வேட்பாளரா…? ஆளை விடுங்க சாமி…! மோடியுடன் மோதத் தயங்கும் மம்தா

Author: Babu
29 July 2021, 8:47 pm
mamata - updatenews360
Quick Share

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகம் பெரும்பாலும்சாந்தமாகவே தென்படும். ஆனால் மத்திய பாஜக அரசையும், மோடியையும் விமர்சிக்க ஆரம்பித்து விட்டால் சிடுசிடுவென்று மாறிவிடும். நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலிலும் அவர் இப்படி ஆவேசமாக இருந்ததை காணமுடிந்தது.

பாஜகவின் வளர்ச்சி

அதற்கு முக்கிய காரணம் மேற்கு வங்க தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுக்கு, பாஜக கடும் சவால் அளித்ததுதான். மாநிலத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்த மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளையும், காங்கிரசையும் ஒருவழியாக மூட்டை கட்டிவிட்டாலும் கூட பாஜகவின் அபார வளர்ச்சி எதிர்கால அரசியலில் தனக்கு கடும் நெருக்கடியை அளிக்கலாம் என்று மம்தா கருதுகிறார்.

modi_mamata_letter_updatenews360

பொதுவாக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று விட்டால், ஒரு மாதத்திற்குள் டெல்லி சென்று பிரதமரையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்து விடுவது மம்தாவின் வழக்கம்.

இந்த முறை திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி விட்டாலும் கூட அவர் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி கண்டதால் அவரால் எளிதாக இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை. மாநிலத்தில் கொரோனா பரவலும் அவருடைய டெல்லி பயணத்தை தள்ளி போட்டுக்கொண்டே வந்தது.

தற்போது கோபமும் தணிந்து, கொரோனாவும் குறைந்து விட்டதால் உடனடியாக
3 நாள் பயணமாக டெல்லிக்கு கிளம்பிவிட்டார். பல்வேறு வியூகங்களுடன் அவருடைய டெல்லி பயணம் இருந்தது. டெல்லிக்கு வரும் முன்பாக பிரதமர் மோடியின் கோபத்தை தணிக்கும் விதமாக சில வாரங்களுக்கு முன்பு கூடை நிறைய மாம்பழங்களையும் அவர் அனுப்பி வைத்திருந்தார்.

ஒருங்கிணைக்க முயற்சி

தனித்தனியாக பிரிந்து கிடக்கும் எதிர்க்கட்சிகளை ஒன்றுசேர்த்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு எதிராக நிறுத்தவேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கம். அதற்காக தனது அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் மூலம், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் பிரியங்கா போன்றோரை சந்தித்து பேசுவதற்கும் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் இது எந்த அளவிற்கு பலன் அளித்தது என்று தெரியவில்லை.

இந்த நிலையில்தான் அவர் டெல்லிக்கு வந்திருந்தார். பயணத்தின் தொடக்கமாக மாநில அலுவல் நிமித்தமாக பிரதமர் மோடியை முதலில் அவர் சந்தித்தார்.

mamata - sonia -updatenews360

பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் பேசினார். அப்போது பெகாசஸ் விவகாரம், 2024 நாடாளுமன்றத் தேர்தல், எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வது ஆகியவை குறித்து இருவரும் விவாதித்தனர்.

பின்னர் மம்தா கூறுகையில், “சோனியா என்னை தேநீர் விருந்துக்கு அழைத்திருந்தார். அங்கு ராகுலும் இருந்தார். இது ஒரு நேர்மறையான சந்திப்பாக இருந்தது. இதன் விளைவு எதிர்காலத்தில் தெரியும். பாஜகவை தோற்கடிக்க அனைவரும் ஒன்றாக இணைய வேண்டியது அவசியம்.

நான் ஒரு பெரிய தலைவர் அல்ல. சாதாரணத் தொண்டர்தான். அதுவும் தெருவில் இருக்கும் ஒரு எளிய பணியாளர். எனவே பாஜகவை தோற்கடிக்க எல்லோரும் இணையவேண்டும்.

பெகாசஸ் விவகாரத்தால் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. மக்கள் பிரச்சினைகள் இங்கு பேசப்பட வேண்டும். டீக்கடைகளில் மக்கள் பிரச்சினைகளைப் பேச முடியாது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பின்னரும் கூட எங்களது பேச்சு தொடரும். பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட ஒரு பொதுவான தளம்வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மம்தா தவிர்ப்பு

முன்னதாக டெல்லியில் பெகாசஸ் உளவு மென்பொருள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ராகுல் தலைமையில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 14 கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த கூட்டத்தை மம்தா தவிர்த்து விட்டார்.

எனினும், அவர் செய்தியாளர் சந்திப்பின்போது,”பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிரான போர் இன்னும் ஓயவில்லை. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த விவகாரத்தில் ஒருங்கிணைந்து செயல் படவேண்டும். எனது பெயர் பெகாசஸ் பட்டியலில் இல்லாவிட்டாலும் கூட நான் தொடர்பு கொள்ளும் அபிஷேக் பானர்ஜி, பிரசாந்த் கிஷோர் தொலைபேசி எண்கள் அந்தப் பட்டியலில் உள்ளன. ஒரு போன் ‘ஹேக்’ செய்யப்பட்டால் அனைத்து போன்களும் ‘ஹேக்’ செய்யப்படுகிறது என்றே அர்த்தம். அதன் காரணமாக என்னால் போனில் அரசியல் பற்றி யாருடனும் பேச முடியவில்லை” என்று ஆதங்கப்பட்டார்.

mamata - pegasus - updatenews360

மம்தா தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசுவதன் மூலம் ஒரு விஷயம் தெளிவாகிறது. பிரதமர் மோடி, பாஜகவுக்கு எதிராக அவர் எதிர்க்கட்சிகள் அனைத்தையும்
ஒரே குடையின் கீழ் கொண்டு வர விரும்புகிறார். அதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன.
அதேநேரம் தற்போது நாடாளுமன்றத்தில் ஒன்றாக இணைந்து செயல்படும் எதிர்க்கட்சிகள் தேர்தல் என்று வரும்போது, அனுசரித்துச் செல்வார்களா? என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

தேசிய அரசியலே வேண்டாம்

இதுபற்றி அரசியல் நோக்கர்கள் கூறும்போது,”மம்தா கூறுவதைப் பார்த்தால், பிரதமர் வேட்பாளருக்கு நான் தயார் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. யாராவது தலைமை தாங்கினால் பரவாயில்லை என்கிறார். தன்னை எதிர்க்கட்சிகள் முன்னிறுத்தி விடக்கூடாது என்பதற்காக முந்திக்கொண்டு கூட்டணிக்கு யாராவது ஒருவர் தலைமை ஏற்றால் அதை ஆதரிப்பேன் என்று சொல்கிறார்.

இதற்கு இன்னொரு முக்கிய காரணம் உண்டு. ஒருவேளை மம்தா பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு தோல்வி கண்டு விட்டால் மாநில அரசியலிலும் அவருடைய செல்வாக்கு சரிந்து போய்விடும். அதனால்தான் தனக்கு தேசிய அரசியலே வேண்டாம் என்று அவர் கூறுகிறார்.

தற்போது தேசிய அளவில் பாஜகவுக்கு அடுத்து பார்க்கக்கூடிய கட்சியாக இருப்பது காங்கிரஸ்தான். ஆனால் அதன் நிலைமை படுமோசமாக உள்ளது. பாஜகவும், காங்கிரசும் நேரடியாக மோதக் கூடிய மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா போன்ற பெரிய மாநிலங்கள் தவிர மற்றவற்றில் காங்கிரஸ் 3-வது அல்லது 4-வது இடத்தில்தான் உள்ளது. குறிப்பாக, மேற்கு வங்காளம், மராட்டியம், தமிழகம், ஆந்திரா, ஒடிசா, பீகார், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் காங்கிரசுக்கு இத்தகைய பரிதாப நிலை உள்ளது. இந்த மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகள் காங்கிரஸ் மீது தாராளம் காட்டி 50% தொகுதிகளை ஒதுக்கினால் மட்டுமே காங்கிரசால் பாஜகவுக்கு எதிராக அகில இந்திய அளவில் கடுமையான போட்டியை உருவாக்க முடியும்.

Mamata_Banerjee_UpdateNews360

அதாவது மேற்கு வங்காளத்தில் 42 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 21 தொகுதிகளை காங்கிரசுக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஒதுக்குமா என்பது சந்தேகம்தான். முதலில் தனது மாநிலத்தில் காங்கிரசை கூட்டணியில் மம்தா சேர்த்துக் கொள்வாரா என்பதே கேள்விக்குறிதான்.

அதேபோல் தமிழகத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக, காங்கிரசுக்கு 20 தொகுதிகளை ஒதுக்க முன்வருமா? என்பதும் சந்தேகம்தான்.
பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் மட்டுமே 400 இடங்களுக்கு குறையாமல் போட்டியிட்டால் மட்டுமே பிரதமர் வேட்பாளராக ராகுலையோ, பிரியங்காவையோ ஒருமனதாக ஏற்கக்கூடிய மனநிலைக்கு மக்கள் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஆனால் தற்போதுள்ள நிலையில் காங்கிரசால் 275 தொகுதிகளில் கூட பாஜகவுக்கு எதிராக நேரடி போட்டியை உருவாக்க முடியாத சூழல் உள்ளது.

ராகுல் அல்லது பிரியங்கா

2019 நாடாளுமன்ற தேர்தலில் 425 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 52 இடங்களில் மட்டுமே ஜெயிக்க முடிந்தது. அதன் கூட்டணி கட்சிகள் 39 தொகுதிகளை வென்றன.

அதேநேரம் பாஜக 437 தொகுதிகளில் போட்டியிட்டு 303-ஐ கைப்பற்றி விட்டது. அதன் கூட்டணி கட்சிகள் 50 இடங்களை ஜெயித்தன். 98 இடங்களில் 3-வது அணிகள் வெற்றி கண்டன.

இந்த கணக்கின்படி பார்த்தால், காங்கிரஸ் கூட்டணியை விட 3-வது அணி வலுவாக இருப்பது தெரியும். அதனால்தான் காங்கிரசின் தலைமையை மூன்றாம் அணி கட்சிகள் ஏற்றுக்கொள்ளுமா? என்ற சந்தேகம் எழுகிறது.

rahul gandhi - updatenews360

பாஜக தனது பிரதமர் வேட்பாளர் யார் என்பதை வெளிப்படையாக அறிவிக்கும்போது, 2019 நாடாளுமன்ற தேர்தலை போலவே எதிர்க்கட்சிகளால் ஒன்றுபட்டு பிரதமர் வேட்பாளரை அறிவிக்க முடியாமல் போகலாம். பல மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. இந்தக் கட்சிகள் பெரிய மனதுடன் காங்கிரசுக்கு, அதிக தொகுதிகளை ஒதுக்குவதுடன் பிரதமர் வேட்பாளராக ராகுலையோ அல்லது பிரியங்காவையோ ஏற்க வேண்டிய கட்டாய நிலைக்கும் தள்ளப்படும்.

அப்படி அமைந்தால் மட்டும்தான் பாஜகவுக்கு கடுமையான சவாலை காங்கிரசால் ஏற்படுத்த முடியும். இல்லையென்றால் என்னதான் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி போராட்டங்களை முன்னெடுத்தாலும் 2024 தேர்தலில் வெற்றி பெறுவது கடினம் என்பதுதான் எதார்த்த நிலை” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

தற்போது ஒன்றாக இணைந்துள்ள 14 எதிர்க்கட்சிகளும் 2024 தேர்தல் வரை ஒற்றுமையாக இருக்குமா? பாஜகவுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்துமா? என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Views: - 188

0

0