மம்தா கொளுத்திப் போட்ட வெடி : சிதறும் எதிர்க்கட்சிகள் கூட்டணி!

Author: Udayachandran RadhaKrishnan
12 June 2022, 4:11 pm
Mamta And Sonia - Updatenews360
Quick Share

அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெற இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவாரா?…அல்லது எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படாமல் தனித்தனியாக வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்களா? என்ற கேள்வி தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மம்தா அனுப்பிய திடீர் கடிதம்

இதற்கு முக்கிய காரணம், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி காங்கிரஸ் தலைவர் சோனியா, முதலமைச்சர்கள் உத்தவ் தாக்கரே, கெஜ்ரிவால், பினராயி விஜயன், நவீன் பட்நாயக், சந்திரசேகர ராவ், ஸ்டாலின், ஹேமந்த் சோரன், பக்வந்த் மான் உள்ளிட்ட 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எழுதியுள்ள திடீர் கடிதம்தான்.

அதில், “ஒரு வலுவான ஜனநாயகத் தன்மை கொண்ட நாட்டிற்கு வலுவான மற்றும் பயனுள்ள எதிர்க்கட்சி தேவை. இந்நாட்டில் உள்ள அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைந்து இன்று நம்மை ஆட்டிப்படைக்கும் பிரிவினை சக்தியை எதிர்க்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர்கள் பல்வேறு மத்திய விசாரணை அமைப்புகளால் வேண்டுமென்றே குறிவைக்கப்படுகிறார்கள். சர்வதேச அளவில் நாட்டின் பெயர் இழிவுபடுத்தப்படுகிறது. கசப்பான கருத்து வேறுபாடுகள் உருவாக்கப்படுகின்றன. நமது எதிர்ப்பை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது. அனைத்து எதிர்க்கட்சிகளும் மீண்டும் கூடி இந்திய அரசியலின் எதிர்காலப் போக்கைப் பற்றி ஆலோசிக்க குடியரசு தலைவர் தேர்தல் சரியான வாய்ப்பாகும். ஜனநாயகத்தின் பாதுகாவலராக உள்ள நாட்டின் தலைவரை தேர்வு செய்வதில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் பங்கேற்க வாய்ப்பு தருவதால், இந்த தேர்தல் மிகவும் முக்கியமானதாகும்.

எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு

நமது ஜனநாயகம் இக்கட்டான காலகட்டங்களில் சென்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில், எதிர்க்கட்சி குரல்கள் பலனளிக்கும் வகையில் ஒன்று சேர்வது காலத்தின் தேவை என்று நான் நம்புகிறேன். எனவே ஜூன் 15-ம் தேதி மதியம் 3 மணிக்கு, டெல்லியில் நடக்கும் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்” என்று மம்தா பானர்ஜி கூறி இருக்கிறார்.

இப்படியொரு அவசரக் கடிதத்தை மம்தா எழுதுவார் என்று எதிர்க்கட்சிகள் நினைத்துப் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. இது அவர் ஏட்டிக்கு போட்டியாக செயல்படுவதாக மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளால் கருதப்படுகிறது.

ஏனென்றால், பொதுவாகவே நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கும் காங்கிரஸ்தான், குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளரை நிறுத்துவதற்கான முயற்சியில் முதலில் இறங்கும் என்று கருதப்பட்டது.

அதற்கான ரகசிய நடவடிக்கைகளில் காங்கிரஸ் மேலிடம் கடந்த சில நாட்களாக ஈடுபட்டும் வந்தது. இதற்காக கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை எதிர்க்கட்சி தலைவர்களுடன் தொடர்பு கொண்டு பேசும்படியும் சோனியா கேட்டுக் கொண்டும் இருந்தார்.

ஒரே தேதியில் காங்.,க்கு செக்

தவிர எதிர்க்கட்சிகளுக்கு மம்தா அழைப்பு விடுத்துள்ள அதே ஜூன் 15-ம் தேதி அன்றுதான் காங்கிரஸ் தலைவர் சோனியா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள்
குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஒன்று கூடிப் பேசுவதற்கு முடிவு செய்திருந்தன.

இந்த விஷயத்தை தெரிந்து கொண்டுதான், மம்தா முந்திக் கொண்டு எதிர்க் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் என்ற பரபரப்பு பேச்சும் டெல்லியில் அடிப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

ஏற்கனவே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அல்லாத ஒரு அணியை உருவாக்கும் முயற்சியை எடுத்த மம்தா, குடியரசுத் தலைவர் தேர்தல் பொது வேட்பாளர் விவகாரத்திலும் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.

மம்தாவின் தன்னிச்சையான இந்த முடிவு, எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்தும் நடவடிக்கைக்கு பாதகமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீதாராம் யெச்சூரி கொந்தளிப்பு

“பொதுவாகவே பிரதான எதிர்க்கட்சிகளிடம் கலந்தாலோசித்த பிறகே ஆலோசனை நடத்தும் கூட்டம் எப்போது நடத்தப்படும் என்று உறுதி செய்யப்படும். இந்த முடிவையும் கூட நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக உள்ள காங்கிரஸ் முன்னெடுப்பதுதான் சரியானதாக இருக்கும். அதன்படிதான் காங்கிரசும் எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் நிறுத்தப்பட இருக்கும் பொது வேட்பாளர் குறித்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருகிறது.

ஆனால் அதைக்கூட புரிந்து கொள்ளாமல், சோனியா எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்த அதேநாளில் 22 கட்சிகளின் தலைவர்களுக்கு மம்தா அழைப்பு விடுத்திருப்பது சரியான செயல் அல்ல” என்றும் சீதாராம் யெச்சூரி, கண்டித்திருக்கிறார்.

மம்தா முடிவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

மம்தாவின் நடவடிக்கையை காங்கிரசும் கடுமையாக எதிர்த்துள்ளது. “நாட்டு மக்களின் நலனுக்காக கட்சி வேறுபாடுகளை எல்லாம் மறந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு சோனியா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதனால் மம்தாவின் செயல் சிக்கலான நிலைமையைத் தான் ஏற்படுத்தும். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது” என்று காங்கிரஸ் தலைமை கூறுகிறது.

“பிஜு ஜனதாதளம், தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி, ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் போன்ற தலைவர்களை ஒருங்கிணைக்க முடியாத பலவீனமான நிலையில் காங்கிரஸ் இருப்பதால்தான் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி வெளிப்படையாக அழைப்பு விடுத்திருக்கிறார்” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
“இது ஆரம்பமே காங்கிரஸ் எடுக்கும் முயற்சிக்கு விழுந்த பலத்த அடியாக கருதப்படுகிறது. காங்கிரஸ் தலைமையில் ஒரு பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவதைக் காட்டிலும், மற்ற எதிர்கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையிலும் தங்களுடைய விருப்பத்தின்படி ஒரு பொது வேட்பாளரை தேர்வு செய்யவேண்டும் என்பதுமே மம்தாவின் நோக்கமாக உள்ளது.

இதில் திமுக, ஆம் ஆத்மி, சிவசேனா, தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிகளின் ஆதரவை எப்படியும் பெற்றுவிடலாம் என்றும் மம்தா கணக்கு போடுகிறார்.

மம்தா போடும் கணக்கு

திமுக, ஆம் ஆத்மியின் ஆதரவை அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மூலம் பெற்றுவிட முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் அவரிடம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் தேசிய அளவில் தங்களை முன்னெடுக்க விரும்பினால் திமுக தலைவர் ஸ்டாலினும், ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலும் திரிணாமுல் காங்கிரஸின் நிலைப்பாட்டை நிச்சயம் ஆதரிப்பார்கள் என்று கூறப்படுவதுதான்.

தவிர ஒவ்வொரு முறையும், காங்கிரசை விட்டால் வேறு கட்சியே கிடையாதா? என்ற நிலை உருவாகி விடக்கூடாது என்பதற்காகவும், மம்தா இப்படி அதிரடி காட்டி இருக்கிறார். சோனியா தலைமையில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் இதைத் தெரிவித்தால், தன் மீது களங்கம் சுமத்தப்படும் என்பதை உணர்ந்துதான் அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

சிதறும் எதிர்க்கட்சிகள் கூட்டணி

அதேநேரம் சோனியா தலைமையில் ஒரு அணியும், மம்தா தலைமையில் இன்னொரு அணியும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தினால் அது ஆளும் பாஜகவுக்கு மிக எளிதான வெற்றியை தந்துவிடும் என்பது வெளிப்படையான ஒன்று.

எது எப்படியோ, குடியரசுத் தலைவர் தேர்தலை காங்கிரஸ் தலைமையில் சந்திக்க, தான் தயாராக இல்லை என்பதையே 22 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மம்தா எழுதிய கடிதம் உணர்த்துகிறது.

மகிழ்ச்சியில் பாஜக

இதனால் அத்தனை எதிர்க்கட்சி தலைவர்களும் இணைந்து, பாஜக தரப்பில் நிறுத்தப்படும் குடியரசுத்தலைவர் வேட்பாளரை எதிர்பார்ப்பார்களா?… என்பதும் சந்தேகம்தான். ஆகையால் மம்தா எழுதிய கடிதம் எதிர்க்கட்சிகளை சிதற வைத்திருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு மனுத்தாக்கல் முடியும் நாள் வரை இன்னும் என்னென்ன கூத்துகளையெல்லாம் எதிர்க்கட்சிகள் நடத்த போகின்றனவோ தெரியவில்லை!

Views: - 411

0

0