மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் : தமிழக அரசு அறிவிப்பு

13 May 2021, 6:50 pm
oxygen_cylinders_updatenews360
Quick Share

தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு 30% மூலதனம் மானியம் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில், கொரோனா நோயாளிகளுக்கு அவசியமான ஆக்சிஜன் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியில் தமிழகம் தற்சார்பு அடைவதற்கான வழிமுறைகள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தினார். ஆக்சிஜன் மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக அரசு சிறப்பு சலுகைகளை அறிவித்து உள்ளது.

  1. ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, ஆக்சிஜன் உருளை மற்றும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தமிழகத்தில் முதலீடு செய்யும் உற்பத்தியாளர்களுக்கு 30 சதவீத மூலதன மானியம், இரண்டு சம ஆண்டு தவணைகளில் வழங்கப்படும். இந்த சலுகையை பெறுவதற்கு தொடர்புடைய நிறுவனங்கள் 2021 ஆக்.15க்குள் உற்பத்தியை துவங்க வேண்டும். 2021 ஜன.,1 முதல் ஆக்.,31 வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு இதற்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.
  2. குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 10 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட பெரிய நீர்ம ஆக்சிஜன், உற்பத்தி தொழிற்சாலைகள் அமைக்க 2021 ஜன.,1 முதல் 2021 நவ.,30 வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு 30 சதவீத மூலதன மானியம் 5 ஆண்டுகளில் வழங்கப்படும். இந்த சலுகையை பெறுவதற்கு நிறுவனங்கள் நவ.,30க்கு முன்னர் உற்பத்தியை துவங்க வேண்டும்
  3. அத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் ஆண்டுக்கு 6 சதவீத வட்டி மானியத்துடன் உடனடியாக கடன் வழங்கப்படும்.
  4. அத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிப்காட்/சிட்கோ நிறுவனங்கள் மூலம் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும்
  5. அத்தகைய முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் மூலம் கட்டணம் ஏதுமின்றி ஒற்றை சாளர முறையில் விரைந்து அனுமதி வழங்கப்படும்.
  6. கொரோனா தொடர்பான மருத்துவ பொருட்களான ஆக்சிஜன் செறிவு, தடுப்பூசிகள், ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் புதிய நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் துணை புரியும். இந்த சிறப்பு தொகுப்பு சலுகைகள் தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் மற்றும் தொடர்புடைய உபகரணஙகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் முதலீடுகளுக்கு பெரும் ஊக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 148

0

0