மதிமுக, தேமுதிகவில் வரிசை கட்டும் வாரிசுகள் : கட்சியில் சலசலப்பு

5 February 2021, 2:30 pm
DMDK - MDMK - cover updatenews360
Quick Share

குடும்ப அரசியல், வாரிசு அரசியல் என்பது இப்போது எல்லா கட்சிகளிலும் நாடு முழுவதும் காணப்படும் சர்வ சாதாரண காட்சிகளில் ஒன்றாகிவிட்டது. ஏதோ சமீப காலத்தில்தான் இது போன்ற அரசியல் நடக்கிறது என்று நினைத்தால் அது தவறு.
சுதந்திர இந்தியா காலத்திலிருந்தே இந்த குடும்ப ராஜ்ஜியம் இருந்து வந்துள்ளது.

காஷ்மீரை எடுத்துக்கொண்டால் ஷேக் அப்துல்லா, அவருடைய மகன் பரூக் அப்துல்லா அதைத் தொடர்ந்து மூன்றாவது தலைமுறையாக உமர் அப்துல்லா என்று வாரிசு அரசியல் தொடர்கிறது. தாத்தா, மகன், பேரன் என இந்த மூவருமே முதல்வர் பதவியை வகித்தவர்கள். காஷ்மீரில் தொடங்கிய இந்த குடும்ப, வாரிசு அரசியல், அதன்பிறகு தேசிய அரசியலுக்கும், பிறமாநில கட்சிகள் அரசியலுக்கும் பரவியது.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகவில் கருணாநிதி அரை நூற்றாண்டு காலம் தலைவர் பதவியை அலங்கரித்தார். அவருடைய மறைவுக்கு பின்பு 50 வருடங்களுக்கும் மேலாக அரசியலில் உள்ள அவருடைய மகன் ஸ்டாலின் தற்போது திமுக தலைவராக பதவி வகிக்கிறார். ஸ்டாலினின் மகனான உதயநிதி திமுகவின் இளைஞரணி செயலாளராக உள்ளார். பாமகவை பொறுத்தவரை அக்கட்சியை நிறுவியவர் டாக்டர் ராமதாஸ். அவருடைய அரசியல் வாரிசாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் பாமகவில் இளைஞரணி செயலாளராக உள்ளார்.

ramadass-and-anbumani - updatenews360

தற்போது இந்த வாரிசு அரசியலில் மேலும் 2 கட்சியின் பிரபலங்கள் விரைவில் இணையப் போகி கிறார்கள். அவர்கள் துரை வையாபுரி, விஜய் பிரபாகர்.

இவர்கள் யார் என்று தமிழக மக்களுக்கு ஓரளவு தெரியும்.
துரை வையாபுரி மதிமுகவின் பொதுச் செயலாளரான வைகோவின் மகன் ஆவார். மற்றொருவர் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன்.

சரி ஏன் இவர்கள் அரசியலுக்குள், அதிலும் குறிப்பாக கட்சிப் பொறுப்புகளுக்கு வருகிறார்கள்? அதற்கான அவசியம் என்ன?… கட்சியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்காக இவர்கள் வருகிறார்கள் என்று மதிமுக, தேமுதிக தரப்பில் கூறப்படுகிறது. உண்மையிலேயே இது மட்டுமே காரணமா என்றால் நிச்சயமாக இல்லை என்று கூறவேண்டும்.

மதிமுகவில் இளைஞரணி செயலாளர் பதவியை வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு தரவேண்டுமென்று அக்கட்சியில் சமீப காலமாகவே பலமாக குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. அண்மையில் சென்னையில் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்த போது இப்படிப்பட்ட உற்சாக குரல்கள் எதிரொலித்தது. தந்தைக்கு உதவியாக துரை வையாபுரி பல தேர்தல்களில் பணியாற்றியவர். அவருடைய சுறுசுறுப்பான பணியை கண்டு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வைகோவிடமே, இதுபற்றி நேரடியாக உங்கள் மகனை அரசியலில் இறக்கி விடலாமே என்று பலமுறை கேட்டும் இருக்கிறார்கள்.

ஆனால் வைகோ அதற்கெல்லாம் ஒருபோதும் பிடி கொடுத்ததே இல்லை, என் மகன் அரசியலுக்கு வரவே மாட்டார் என்று சிரித்த முகத்துடன் மறுத்துவிடுவார்.

ஆனால் இம்முறை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தபோது, அனைத்து நிர்வாகிகளும் சொல்லி வைத்ததுபோல் இனியும் நீங்கள் மகனை அரசியல் களத்தில் இறக்கி விட தயங்கக்கூடாது. அவர் செல்லும் இடமெல்லாம் இளைஞர் பட்டாளம் பெருமளவில் திரள்கிறது. எனவே, இந்த முறை நீங்கள் மறுக்கக்கூடாது. துரை வையாபுரிக்கு நீங்கள் இளைஞரணி செயலாளர் பதவி கொடுத்து ஆகவேண்டும் என்று ஒரே குரலில் வற்புறுத்தி உள்ளனர்.
இதைக் கேட்ட வைகோ, இனி இந்த விஷயத்தில் நான் தலையிட மாட்டேன் என்று கூறி மகனை இளைஞரணி செயலாளராக நியமிப்பதற்கு மறைமுகமாக ஒப்புக்கொண்டு விட்டார், என்கிறார்கள்.

எனவே விரைவில் அடுத்த தலைமுறைக்கு மதிமுகவை வழிநடத்தும் பொறுப்பு துரை வையாபுரிக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கலாம்.

இதுகுறித்து மதிமுக நிர்வாகிகள் கூறும்போது, “தேர்தல் நேரத்தில் எப்படியும் மதிமுகவுக்கு சோதனை வந்துவிடுகிறது. கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சியிடம் மன்றாட வேண்டியுள்ளது.
ஓரிரு தொகுதிக்காக மாதக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இளைஞர்கள் இருந்தால், அதுவும் வாரிசாக இருந்தால் இதுபோன்று சொல்ல மாட்டார்கள். அதனால் தான், கட்சியில் துரை வையாபுரிக்கு முக்கிய பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்கிறோம்” என்றனர்.

Vijayakanth - updatenews360

மதிமுகவின் கதை இப்படி இருக்க, தேமுதிகவின் நிலவரம் முற்றிலும் வேறாக உள்ளது. கட்சியின் தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவாக இருப்பதை பயன்படுத்தி, அவருடைய மனைவி பிரேமலதாவின் சகோதரர் எல்.கே. சுதீஷ், தான் வைத்ததே சட்டம் என்பதுபோல் கட்சி நிர்வாகிகளை நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏதாவது ஒரு கூட்டணியில் சேர்வதற்கு முன்பே தனக்கு நாடாளுமன்ற மாநிலங்களவை எம்பி பதவி தரவேண்டும் என்பதையே அவர் முதல் கோரிக்கையாக வலியுறுத்துகிறாராம். தொகுதிகள் கேட்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான் என்கின்றனர். இதனால்தான் தொகுதி பங்கீடு விஷயத்தில் எந்த அணியுடனும் சுமுகமான முடிவு ஏற்படாமல் இழுத்துக் கொண்டே போகிறது, என்று தேமுதிக நிர்வாகிகள் புலம்புகிறார்கள்.

இது விஜய் பிரபாகரின் காதுக்கு வர, அவர் தனது மாமா சுதீசிடம் அண்மையில் நேரடியாகவே மோதி இருக்கிறார்.

“துணைச் பொது செயலாளர் பொறுப்பில் இருப்பதால் தானே இப்படி நீங்கள் ஆட்டம் போடுகிறீர்கள். நான் இளைஞர் அணிக்கு செயலாளர் ஆகிவிட்டால் உங்களுக்கு சுமை நிறையவே குறைந்து விடும்” என்று ஆவேசமாக கூறினார் என்கிறார்கள்.

ஆக தேமுதிகவில் இளைஞர் அணி செயலாளர் பொறுப்பை விஜய் பிரபாகர் எடுத்துக் கொள்ள முஸ்தீபு காட்டி வருகிறார்.

vijaya prabhakaran updatenews360

இதுபற்றி பெயரை வெளியிட விரும்பாத தேமுதிக மாவட்ட செயலாளர் ஒருவர் கூறுகையில், “நாடாளுமன்றத் தேர்தலின்போதும், இதே கோரிக்கையை சுதீஷ் வைத்ததால்தான் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டே போனது. எங்களுக்கு தொகுதிகளும் குறைந்து போனது. இப்போதும் அவர் இதையே முக்கிய நிபந்தனையாக வைப்பதால், எங்களிடம் பிரதான கட்சிகள் தொகுதிப் பங்கீடு பற்றி பேசுவதற்கே தயங்குகின்றன. அதனால்தான் இந்த முடிவை விஜய் பிரபாகரே எடுத்து இருக்கிறார். தந்தை விஜயகாந்தை விட அவர் வேகமாக பாய்கிறார். அவரைப் போன்ற இளம் ரத்தங்கள்தான் கட்சிக்கு தேவை. அதனால் அண்மையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விஜய் பிரபாகருக்கு நல்ல ஆதரவு இருந்தது” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தாய், தந்தைக்கு இணையாக அவரும் இம்முறை தேர்தல் பிரச்சாரத்தில் சூறாவளியாய் சுழல்வார் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ, நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் எல்லா தொகுதிகளின் மூலை முடுக்குகளிலும் பிரபல அரசியல் கட்சி தலைவர்களின் வாரிசுகள் வலம் வந்து தமிழகத்தை ஒரு உலுக்கு உலுக்கப் போகிறார்கள் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

Views: - 0

0

0