மதிமுகவில் வைகோவின் வாரிசுக்கு உயர் பதவி… காத்திருக்கும் சவால்கள்!!

22 July 2021, 2:11 pm
MDMK - updatenews360
Quick Share

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு, தமிழகத்தின் மற்ற அரசியல் தலைவர்களுக்கு இல்லாத ஒரு பெருமை உண்டு. தமிழகத்தில் அவர் அறியாத ஊர்களே இல்லை என்று சொல்லலாம்.

வைகோவின் பயணம்

77 வயது வைகோ மாநிலத்திலுள்ள குக்கிராமங்கள் உள்பட 50 ஆயிரம் ஊர்களுக்கு சென்று வந்துள்ளார். அதனால் 50 பேர் 100 பேர் வசிக்கும் சின்னச் சின்ன கிராமங்கள்
கூட அவருக்கு மிகவும் அத்துபடி. திமுகவில் 30 ஆண்டுகள், மதிமுகவில் 27 வருடங்கள் என அவருடைய அரசியல் பயணம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

Vaiko Condemned -Updatenews360

1993-ம் ஆண்டு திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட வைகோ மறு வருடமே மதிமுக என்னும் அரசியல் இயக்கத்தை தொடங்கினார். 96 தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணியும் அமைத்து தேர்தலை சந்தித்தார். 177 தொகுதிகளில் போட்டியிட்ட அவருடைய கட்சி அந்தத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

திமுக-தமாக கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்த் திடீரென அப்போது வாய்ஸ் கொடுக்க வலுவான மூன்றாவது அணியாக இருந்த மதிமுக கூட்டணியின் கனவு தகர்ந்து போனது. அந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக ரஜினி வாய்ஸ் கொடுக்காமல் போயிருந்தால் 20 இடங்களுக்கும் குறையாமல் மதிமுக கூட்டணி வென்றிருக்கும் என்பது அப்போது பலருடைய மதிப்பீடாக இருந்தது.

பிற கட்சிகளின் தயவு

அதன் பிறகு அதிமுக, திமுக என மாறி மாறி கூட்டணி வைத்ததால் வைகோ மீது மக்களுக்கு இருந்த நம்பகத் தன்மை கொஞ்சம் கொஞ்சமாக கரைய ஆரம்பித்தது.

நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை 1999-ல் அதிமுக கூட்டணியில் 5 இடங்களில் போட்டியிட்டு நான்கில் வென்றதும், 2004 தேர்தலில் திமுக கூட்டணியில் 4 தொகுதிகளில் நின்று நான்கிலும் வென்றதுதான், மதிமுகவின் உச்சபட்ச சாதனை.

சட்டப்பேரவைத் தேர்தலை பொறுத்தவரை 2006-ல் அதிமுக கூட்டணியில் 35 இடங்கள் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது 6 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றது.மாநிலத் தேர்தலை பொறுத்தவரை மதிமுக அதிகமான தொகுதிகளில் வென்றது, இதுதான். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி, திமுகவின் சின்னமான உதயசூரியனில் நின்றுதான் வெற்றி பெற்றார்.

வைகோ தற்போது,டெல்லி மேல்-சபை எம்பியாக இருந்தாலும்கூட அவரும் திமுகவின் ஆதரவுடன்தான், 2019-ல் தேர்வு செய்யப்பட்டார்.

வைகோ ஏற்கனவே டெல்லி மேல்-சபைக்கு திமுக சார்பில் 1978, 1984, 1990 என தொடர்ந்து மூன்று முறையும் நாடாளுமன்றத்துக்கு 1998 மற்றும் 1999 நடந்த தேர்தல்களில் இரு முறையும் வெற்றி பெற்றுள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.

2019 மற்றும் 2021 தேர்தல் கணக்கின்படி பார்த்தால், மதிமுகவின் பம்பரம் சின்னம் இந்த இரு தேர்தல்களிலும் களத்தில் காணப்படவில்லை என்பதே உண்மை.

தமிழகத்தில் வேறு எந்தவொரு பிரதான அரசியல் கட்சிக்கும் இதுபோன்றதொரு இடியாப்ப சிக்கல் ஏற்பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான்!

துரை வையாபுரி என்ட்ரி

இந்த நிலையில்தான் வயது மூப்பின் காரணமாகவும் கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் விதமாகவும் தனது மகன் துரை வையாபுரிக்கு மதிமுகவில் முக்கிய பொறுப்பு ஒன்றை கொடுக்க வைகோ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கு முக்கிய காரணம் 49 வயது துரை வையாபுரி தனது கட்சியின் வேட்பாளர்கள் இந்த தேர்தலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிடவிட்டாலும் கூட பம்பரமாய் சுழன்று களப்பணி ஆற்றினார் என்பதுதான்.

Durai Vaiko- Updatenews360

1998-ம் ஆண்டுக்குப் பிறகு நாடாளுமன்ற தேர்தலிலும் சரி, சட்டமன்ற தேர்தலிலும் சரி மதிமுக வேட்பாளர்களுக்காக தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு அவர் வந்துள்ளார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே மதிமுகவில் முக்கிய பொறுப்பு துரை வையாபுரிக்கு வழங்கப்படும் என்ற பேச்சுபரபரப்பாக அடிபட்டது. கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களே கூட வைகோ தனது மகனை தீவிர அரசியலில் இறக்கிவிடவேண்டும் என்று அப்போது வற்புறுத்தினர். “உங்கள் மகனை ஒரு தொகுதியில் நிறுத்துங்கள்” என்றும் நிர்வாகிகள் பிடிவாதம் காட்டினர்.

ஆனால் வைகோ தனது மகன் துரை வையாபுரியை நேரடி அரசியலுக்கு கொண்டு வருவதை விரும்பவில்லை. தன்னையும் வாரிசு அரசியல் நடத்துகிறார் என்று விமர்சனம் செய்வார்கள் எனக் கருதி கட்சி நிர்வாகிகளின் வேண்டுகோளை புறக்கணித்து விட்டார்.

ஆனால் தற்போது அவருடைய பிடிவாதம் தளர்ந்துள்ளது. பெரும்பாலான அரசியல் கட்சிகளில் தந்தை-மகன் என இருவருமே முக்கிய பொறுப்புகளில் இருப்பதால் தற்போது வையாபுரியை நேரடி அரசியலுக்கு அழைத்து வர வைகோ ஒப்புக்கொண்டு விட்டார் என்கிறார்கள்.

வையாபுரிக்கு செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கும் மதிமுகவின் முப்பெரும் விழாவின்போது, துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது.

முக்கிய பதவி

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “துரை வையாபுரி தன்னை மக்கள் பணிகளில் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள தொடங்கிவிட்டார். கட்சியினரின் இல்ல சுபநிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொள்கிறார். துக்க நிகழ்ச்சிகளிலும் உடனடியாக சென்று பங்கேற்கிறார்.
அதனால் அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கவேண்டும் என்று மதிமுக நிர்வாகிகள் அனைவரும் மீண்டும் குரல் எழுப்பத் தொடங்கி இருக்கின்றனர்.

இதை வைகோவும் புரிந்து கொண்டுள்ளார். எனவே மதிமுகவின் முப்பெரும் விழாவில்போது துரை வையாபுரிக்கு மகுடம் சூட்டப்படலாம். துணைப் பொதுச் செயலாளர் அல்லது மாநில இளைஞரணி தலைவர் பதவி அவருக்கு கொடுக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

அதேநேரம் அவருக்கு அரசியலில் நிறைய சவால்களும் காத்திருக்கின்றன. வைகோ திமுகவிற்கு எதிராகத்தான் மதிமுகவை தொடங்கினார். அதுவும் ஸ்டாலினை, கருணாநிதி முன்னிலை படுத்துகிறார், என்ற குற்றச்சாட்டுதான், திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

எனினும் காலச் சூழலில் பழைய கசப்பான அனுபவங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு தனது புதிய சபதத்தின்படி ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் ஆவதற்கு இந்த தேர்தலில் தன்னால் முடிந்த அளவிற்கு பிரச்சாரம் செய்து அதில் அவர் வெற்றியும் கண்டுவிட்டார்.

ஆனால் அதற்காக வைகோ கொடுத்த விலைதான் மிக மிக அதிகம். 6 தொகுதிகளிலும் மதிமுக பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட்டு இருக்கவேண்டும். அல்லது 4 தொகுதிகளில் மதிமுக சின்னத்திலும், 2 சீட்களில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டு இருக்கலாம்.

பம்பரமே அடையாளம்

இப்போது நான்கு பேர் வெற்றி பெற்றிருந்தாலும் கூட அவர்கள் மதிமுகவின் அடையாளமாக இல்லை. சட்டப்பேரவையிலும் அவர்களுக்கு முதல் கூட்டத்தொடரில் அதிகமாக பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. திமுக எம்எல்ஏக்களாகவே நான்கு பேரும் கருதப்படுவதால் இந்த நெருக்கடி அடுத்த தேர்தல் வரை தொடரும்.

துரை வையாபுரி கட்சிக்குள் வரும்போது இந்த சிக்கலில் இருந்து மதிமுகவை மீட்பதற்கு பெரும் பிரயத்தனப்பட வேண்டியதிருக்கும். இப்போதைக்கு அது சாத்தியமில்லை என்றாலும் கூட அடுத்த நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கும்போது கட்சியின் சின்னத்தை விட்டுக்கொடுக்கக் கூடாது என உறுதியோடு நிற்கவேண்டும் என்ற கோரிக்கைகள் கட்சிக்குள் வலுக்கும்.

எனினும், மதிமுக பம்பரம் சின்னத்தை இழக்காமல் இருக்க இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் நகராட்சி தேர்தல்கள் நல்ல வாய்ப்பாக அமையும். திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக
2 மாநகராட்சிகள், 10 நகராட்சிகள், 50 பேரூராட்சிகளில் போட்டியிட்டு வெற்றி பெறுவதன் மூலம் இழந்த தனித்தன்மையை மீட்கலாம். இல்லையென்றால் கடைசியில் திமுகவுடன் மதிமுக முற்றிலுமாக ஐக்கியமாகி விடும்” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

வைகோ மகனுக்கு மதிமுகவில் முக்கிய பதவி கிடைக்குமா? என்பது இன்னும் 2 மாதங்களில் தெரிந்துவிடும்!

Views: - 107

0

0

Leave a Reply