2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவது கட்டாயம் : மருத்துவ மாணவர்களின் வழக்கில் நீதிமன்றம் அதிரடி..!

Author: Babu
6 October 2020, 1:28 pm
Chennai High Court - Updatenews360
Quick Share

சென்னை : மருத்துவ மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் கட்டாயம் பணிபுரிய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு பயிலும் மாணவர்கள், தங்களின் படிப்பு காலம் முடிந்த பிறகு 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவது கட்டாயம் என்ற நிபந்தனை இருந்து வருகிறது. 2 ஆண்டுகள் பணி நிறைவிற்கு பிறகே அவர்களின் சான்றிதழ்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.

neet-exam - updatenews360

அரசின் இந்த முடிவை எதிர்த்து 276 மருத்துவ மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அகில இந்திய மருத்து படிப்பு கொள்கையில் இதுபோன்ற எந்த நிபந்தனைகளையும் விதிக்கப்படவில்லை என்றும், தமிழக அரசின் அரசாணை சட்டவிரோதமானது என அவர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் மாணவர்கள் பணி புரிவது கட்டாயமில்லை என்றும், சான்றிதழ்களை தமிழக அரசு திரும்ப வழங்க வேண்டும் என தீர்ப்பளித்திருந்தார். தனிநீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

Chennai HC-updatenews360

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவ மேற்படிப்பு முடித்த மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் கட்டாயம் பணிபுரிய வேண்டும் என்ற உத்தரவு செல்லும் எனவும், அதன்பின்னரே, அவர்களது சான்றிதழ்கள் திரும்ப வழங்கப்படும் என்ற ஒப்பந்தம் சரியானது தான் என தீர்ப்பளித்துள்ளனர்.

மேலும், 2 ஆண்டுகள் பணி வழங்க முடியாத பட்சத்தில் மாணவ, மாணவியரின் சான்றிதழ்களை திரும்ப வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 55

0

0