மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக் கூடாது : அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

12 July 2021, 2:13 pm
all party meet - updatenews360
Quick Share

சென்னை : மேகதாது அணை எந்தவிதமான அனுமதியும் வழங்கக் கூடாது உள்ளிட்ட 3 முக்கிய தீர்மானங்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கு இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. ஆனால், இந்த திட்டத்திற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கிடையே மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு பதில் கடிதம் அனுப்பிய மு.க.ஸ்டாலின், மேகதாது திட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், மேகதாது அணை கட்டும் திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று கர்நாடகா முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியில் சத்தமில்லாமல் கர்நாடகா அரசு தடுப்பணை கட்டியது போன்று, மேகதாது அணை விவகாரத்திலும் நிகழ்ந்துவிடக் கூடாத வண்ணம் தமிழக அரசு கவனமாக இருக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். மேலும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தையும் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், திமுக சார்பில் டி.ஆர் பாலு, ஆர்.எஸ் பாரதி, அ.தி.மு.க. சார்பில் ஜெயக்குமார், மனோஜ் பாண்டியன் காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.அழகிரி, ரவிக்குமார், பா.ஜ.க. நயினார் நாகேந்திரன், துரைசாமி, கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், புரட்சி பாரதம் பூவை ஜெகன்மூர்த்தி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புபடி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின் முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது என்றும், அணை கட்டும் முயற்சிகளை தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது என மூன்று தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Views: - 112

0

0