கலந்தாய்வு நடத்தாததால் மன உளைச்சல்.. ஒரு மாதம்தான் கெடு : டிஎன்பிஎஸ்சிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை!
புள்ளியியல் தேர்வுக்கான கலந்தாய்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக வெளியிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள புள்ளியியல் சார்ந்த பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சார்நிலை புள்ளியியல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 5 மாதங்களாகியும், அதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்னும் கலந்தாய்வு நடத்தி பணி ஆணைகள் வழங்கப்படவில்லை. படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் தேர்வாணையம் காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசின் பல்வேறு நிலைகளில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த சார்நிலை புள்ளியியல் பணிகளை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் நாள் முதல் அக்டோபர் 14-ம் நாள் வரை பெறப்பட்ட நிலையில், அடுத்த இரண்டரை மாதங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டவாறு தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வாணையம் வெளியிட்ட கால அட்டவணைப்படி ஜனவரி மாதம் நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டன. அதன்பின் ஒரு மாதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பும், கலந்தாய்வும் நடத்தி முடிக்கப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 5 மாதங்கள் ஆகியும் அதற்கான ஏற்பாடுகளைக் கூட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்யவில்லை.
புள்ளியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்ட நிலையில், மார்ச் மாதத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இரு மாதங்களில் வெளியிடப்பட்டிருக்க வேண்டிய போட்டித் தேர்வு முடிவுகள் 7 மாதங்கள் ஆகியும் கடந்த ஆகஸ்ட் மாத மத்தியில் வரை வெளியிடப்படவில்லை. தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதன்பிறகு தான் ஆகஸ்ட் இறுதியில் முடிவுகள் வெளியிடப்பட்டன.
அதேபோல், ஆகஸ்ட் மாதத்தில் வெளியான போட்டித்தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதமே கலந்தாய்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை நடத்தப்படாத நிலையில், கலந்தாய்வு எப்போது நடத்தப்படும்? என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை தொடர்பு கொண்டு விசாரித்த தேர்வர்களுக்கு ஆணையத்தின் சார்பில் பொறுப்பான பதில் அளிக்கப்படவில்லை. அதனால் கலந்தாய்வு எப்போது நடக்கும்? தங்களுக்கு எப்போது வேலை கிடைக்கும்? என்பது தெரியாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டித் தேர்வர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
சார்நிலை புள்ளியியல் பணிகளுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி பட்டப்படிப்பு ஆகும். கடந்த ஆண்டே பட்டப்படிப்பை முடித்த பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகள், முதுநிலை பட்டப்படிப்பில் கூட சேராமல், மிகுந்த நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் இந்த போட்டித் தேர்வில் பங்கேற்றனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் தேர்வு நடைமுறைகள் முடிவடைந்து விடும் என்பதால், முடிவுகளைத் தெரிந்து கொண்டு பட்ட மேற்படிப்பில் சேர அவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், இப்போது வரை கலந்தாய்வு நடத்தப்படவில்லை; இனி எப்போது கலந்தாய்வு நடத்தப்படும் என்பது தெரியாது என்பதால், வரும் கல்வியாண்டிலாவது அவர்கள் பட்ட மேற்படிப்பில் சேர முடியுமா? என்பது தெரியவில்லை.
முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு அடுக்குகளைக் கொண்ட தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான போட்டித் தேர்வு நடைமுறைகள் அவை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 10 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும்; ஒரே தேர்வை கொண்ட தொகுதி 4 உள்ளிட்ட பிற போட்டித் தேர்வு நடைமுறைகள் அதிகபட்சமாக 6 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஒருங்கிணைந்த சார்நிலை புள்ளியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு, 16 மாதங்களாகியும் தேர்வு நடைமுறைகள் இன்னும் நிறைவடையவில்லை. இதற்குக் காரணம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அலட்சியம் மட்டுமே.
எப்பாடுபட்டாவது அரசுப் பணியில் சேர்ந்து விட வேண்டும் என்று ஒருங்கிணைந்த சார்நிலை புள்ளியியல் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளை எழுதியவர்கள் இப்போது வரை கலந்தாய்வு நடத்தப்படாததால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் மன உளைச்சலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஒருங்கிணைந்த சார்நிலை புள்ளியியல் தேர்வுக்கான கலந்தாய்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக வெளியிட வேண்டும். அடுத்த ஒரு மாதத்திற்குள் கலந்தாய்வை நடத்தி, வெற்றி பெற்ற அனைவருக்கும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் மூலமாக பணி நியமன ஆணைகளை வழங்க தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.