மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கரை கால்வாய் பாசனத்திற்கு 17ம் தேதி முதல் நீர் திறக்க உத்தரவு!!

14 August 2020, 5:48 pm
Edappadi palanisamy - updatenews360
Quick Share

சேலம் : மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் பாசனத்திற்கு வரும் 17ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;-மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் பாசனப் பகுதியில் உள்ள நிலங்களுக்கு பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு வேண்டுகோள் வந்துள்ளன.

இந்நிலையில் வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மேட்டூர் அணையின் கிழக்குக்கரை கால்வாய் பாசனப் பகுதியில் 27,000 ஏக்கர் நிலங்களும், மேற்குக் கரை கால்வாய் பாசனப் பகுதியில் 18,000 ஏக்கர் நிலங்களும் ஆக மொத்தம் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு மேட்டூர் அணையிலிருந்து 17.8.2020 முதல் 31.12.2020 வரை தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கரும், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 11,327 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன், எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 8

0

0