விடிய,விடிய கொட்டிய மழை…! 5 அடி உயர்ந்த மேட்டூர் அணை நீர்மட்டம்

10 August 2020, 11:00 am
Mettur dam 01 updatenews360
Quick Share

சேலம்: இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக, மேட்டூர் அணையின் நீர் வரத்து 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 2 வாரங்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. கனமழை காரணமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் மிக வேகமாக நிரம்புகின்றன.

ஆகையால் கர்நாடகா மாநில அணைகளிலிருந்து உபரி நீரானது காவிரியில் திறக்கப்படுகிறது. அதன் காரணமாக ஒகேனக்கல்லில் தண்ணீர் ஆர்ப்பரித்து காணப்படுகிறது. காவிரி கரையோரங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடியாக இருந்தது. ஆனால் காலை முதல் அணை நீர் அளவு அதிகரித்து வருகிறது.  அணையின் நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

நீர்மட்டம் முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 81 அடியாக காணப்படுகிறது. நீரின் இருப்பு 43.06 டிஎம்சியாகும். காவிரியில் இருந்து டெல்டா பாசனத்துக்காக 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.