திராவிட சிங்கங்கள் கூடும் கூட்டங்களில் ஆட்டுக்குட்டியை பற்றி பேச வேண்டாம் : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மறைமுக தாக்கு…!!

Author: Babu Lakshmanan
20 May 2022, 2:15 pm
Quick Share

திருச்சி : இனி எங்கு பேசினாலும் திராவிட சிங்கங்கள் கூடுகின்ற கூட்டத்தில் ஆட்டுக் குட்டியை பத்தி பேச வேண்டாம் திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தி.மு.க அரசின் ஓர் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி பாலக்கரை எடத்தெரு அண்ணாசிலை அருகே நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் நா.எழிலன் மற்றும் இனிகோ இருதயராஜ், தமிழன் பிரசன்னா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், “தற்போது நாம் பல்வேறு திட்டப்பணிகளை செய்வோம் என கூறினால், அதிமுகவினர் நம்மை பார்த்து புரூடா விடுகிறார்கள் என்கிறார்கள். திருச்சியில் கட்டப்பட்டுள்ள அரசு கட்டிடங்கள், மேம்பாலங்கள், கல்லூரிகள் எல்லாம் கலைஞர் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. கலைஞரும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். ஸ்டாலினும் அவ்வாறு செயல்பட்டு வருகிறார்.

ஸ்டாலின் ஆட்சியில் தான் மும்மாரி மழை பெய்து வருகிறது. சித்திரை மாதத்திலேயே மேட்டூர் அணை நிரம்பி உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து நீர் வழக்கமாக திறக்கும் ஜூன் 12ம் தேதிக்கு முன்பே தண்ணீர் திறக்கும் நிலை தற்போது உள்ளது. நல்ல தலைவர் ஆட்சி செய்வதால் தான் இவ்வாறெல்லாம் நடக்கிறது.

ஆளுநரை கண்டால் தி.மு.க வினர் அச்சப்படுகிறார்கள் என கூறினார்கள் . ஆனால் உச்சநீதிமன்றமே ஆளுநர் என்பவர் அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர் என கூறி இருக்கிறது. நினைத்ததையெல்லாம் சாதிக்கும் முதலமைச்சராக ஸ்டாலின் இருந்து வருகிறார்.

இறுதியாக பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “அனைத்து தோழர்களுக்கும் என்னுடைய அன்பான வேண்டுகோள். இனி எங்கு பேசினாலும் திராவிட சிங்கங்கள் கூடுகின்ற கூட்டத்தில் ஆட்டுக் குட்டியை பத்தி பேச வேண்டாம். நாம் செல்ல வேண்டிய பயணம் வெகுதொலைவில் இருக்கின்றது.

முதலமைச்சர் பயணம் வேகமாக இருக்கின்றது. இல்லம் தேடி கல்வி, மக்கள் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளை அறிவித்த, பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்த, கலைஞர் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி.

5 லட்சம் கோடி கடனில் இருந்த சூழலில் ஆட்சிக்கு வந்தாலும் கொரோனா காலகட்டத்தில் ரூ.4000 மக்களுக்கு வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி. இந்த அரசாங்கமே பெண்களுக்கானது தான். திராவிட மாடல் என்றால் சுயமரியாதை, சமத்துவம், சமூக நீதி, சுயாட்சி, ஒடுக்கப்பட்டோர் விடுதலை. இந்த அடிப்படையில் தான் முதலமைச்சர் ஆட்சி செய்கிறார்.

ஏப்ரல் மாதம் டெல்லிக்கு சென்றிருந்த போது அங்குள்ள பள்ளி கல்வி துறையின் செயல்பாடுகள் குறித்து டெல்லி முதலமைச்சரும், டெல்லி பள்ளி கல்வி துறை அமைச்சரும் விளக்கினார்கள். அப்போது தமிழ்நாட்டின் கல்வி துறை செயல்பாடுகள் குறித்து நம் முதலமைச்சர் என்னிடம் அவர்களிடம் விளக்கி கூற சொன்னார். நான் சொன்ன போது இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து மிகுந்த ஆச்சர்யமாக பார்த்து பாராட்டினார்கள். இது நம் ஆட்சியின் ஒரு படி சோறுக்கு ஒரு சோறு பதம் போல தான் என பேசினார்.

Views: - 780

0

0