கூடவே இருந்து குழி பறித்த கட்சி நிர்வாகிகள்… கோபத்தின் உச்சத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்!!!

Author: Babu Lakshmanan
28 July 2021, 5:52 pm
duraimurugan - updatenews360
Quick Share

வெற்றிகளில் சாதனை

மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் தொடர்ச்சியாக அதிக முறை வெற்றி பெற்றவர் என்கிற பெருமை கேரள காங்கிரஸ் கட்சியின் மறைந்த தலைவர் கே. மணிக்கு உண்டு. தொடர்ந்து 13 தேர்தல்களில் வெற்றி பெற்று அவர் சாதனை படைத்திருக்கிறார். அதுவும் ஒரே தொகுதியில்!

இது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?…

ஆம், அவர் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பலா என்ற தொகுதியிலிருந்து
1965 முதல் 2016 தேர்தல் வரை தொடர்ச்சியாக இப்படி வெற்றி பெற்றிருக்கிறார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியும் 13 தேர்தல்களில் தோல்வியே காணாமல் வெற்றி பெற்றவர் என்றாலும்கூட அவர் பலமுறை தொகுதிகள் மாறி இருக்கிறார். தவிர 1984 தேர்தலில் கருணாநிதி போட்டியிடவும் இல்லை.

கே.மணிக்கு அடுத்து மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள சங்கோலி என்ற சட்டப்பேரவை தொகுதியில் இருந்து 1962 முதல் 2014 வரை நடந்த 13 தேர்தல்களில் போட்டியிட்டு 11 முறை வெற்றி கண்டவர், கணபதி ராவ் தேஷ்முக். விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சியின் தலைவராக இருந்தவர்.

கருணாநிதியை நெருங்கும் துரைமுருகன்

இவர்களைப் பற்றி இங்கே குறிப்பிடுவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.
அகில இந்திய அளவில் இந்த வெற்றியாளர்கள் வரிசையில் தற்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனும் சற்றே நெருங்கி வருகிறார்.1971 முதல் நடந்து முடிந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தல் வரை அவர், 12 தேர்தல்களை சந்தித்துள்ளார்.

1980 மற்றும் 1984 தேர்தல்களில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார். 1980-ல் அந்த தொகுதியில் வெற்றி பெற்ற அவர் அடுத்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் ரகுபதியிடம் தோல்வி கண்டார்.

Duraimurugan -Updatenews360

1971, 1977, 1989, 1991, 1996, 2001, 2006, 2011, 2016, 2021 என்று பத்து தேர்தல்களில் வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு அதில் 9 முறை வெற்றி பெற்றிருக்கிறார். இதில் 1991-ல் மட்டும் அதிமுக வேட்பாளர் கலைச்செல்வியிடம் அவர் தோற்றுப் போனார். மொத்தமாக அவர் சந்தித்த 12 தேர்தல்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் 10 முறை வெற்றி பெற்றிருக்கிறார். தமிழக அரசியலில் இது இரண்டாவது இடத்தில் உள்ள சாதனை. ஒரே தொகுதியில் அதிக முறை வெற்றி கண்டவர் என்றால் 83 வயது துரைமுருகன்தான் அதில் முதலிடம் பிடிக்கிறார்.

உள்ளடி வேலையால் அவமானம்

ஆனால் அவர் சந்தித்த தேர்தலிலேயே, இந்த ஆண்டு நடந்த தேர்தல்தான் அவருக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது என்று சொல்லவேண்டும். ஏனென்றால் கடைசி சில சுற்று ஓட்டு எண்ணிக்கைகள் பலமுறை நிறுத்தி வைக்கப்பட்டது. மாவட்ட கலெக்டரே ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு விரைந்து சென்று நிலைமையை ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.

கடைசிவரை இழுபறியில் இருந்துதான், அதிமுக வேட்பாளர் ராமுவை அவர் 746 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இத்தனைக்கும் ராமு காட்பாடி தொகுதிக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லாதவர். ஆனாலும்கூட அவரை தட்டுத்தடுமாறித்தான் துரைமுருகனால் ஜெயிக்க முடிந்தது.

duraimurugan_updatenews360

இதை தனக்கு ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய அவமானமாகவே துரைமுருகன் நினைப்பதுபோல் தெரிகிறது. சொந்த கட்சியிலேயே உள்ளடி வேலைகள் நடந்ததால்தான், இழுபறியில் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்திற்கு, தான் தள்ளப்பட்டதாக அவர் கருதுகிறார்.

மேலும் கட்சியின் மூத்த தலைவர்கள் தலைவர்களில் பலர், முப்பதாயிரம் நாற்பதாயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்த நிலையில், தான் மட்டும் மிகக் குறைந்த ஓட்டுகளில் வெற்றி பெற்றதை அவர் கௌரவக் குறைச்சலாக எண்ணுவது போலவும் தெரிகிறது.

அதனால் அவர், காட்பாடி தொகுதியில் கலந்துகொள்ளும் எந்த நிகழ்ச்சியிலும் தன்னை தோற்கடிக்க சதி நடந்ததாகவும் தொகுதியின் திமுக நிர்வாகிகள் அதற்கு உடந்தையாக இருந்து விட்டனர் என்றும் அவர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு
3 மாதங்கள் ஆகப்போகிறது. அமைச்சராக வேறு ஆகிவிட்டார். ஆனாலும், துரைமுருகனின் சினம் இதுவரை தணிந்ததாக தெரியவில்லை. குறைந்த பட்சம் 10 கூட்டங்களிலாவது தன்னை கட்சிக்காரர்கள் காலை வாரி விட்டதை கூறியிருப்பார்.

துரோகம் செய்துவிட்டனர்

மிக அண்மையில் வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்பாடி மேற்கு ஒன்றியத்தின் திமுக நிர்வாகிகள் கூட்டம் திருவலத்தில் நடந்தது. அதிலும் அவருடைய கோபம் இன்னும் கடுமையாக வெளிப்பட்டது.

இக்கூட்டத்தில் துரைமுருகன் பேசும்போது, “நடந்து முடிந்த காட்பாடி சட்டமன்றத் தொகுதி தேர்தலின்போது நாம் ஜெயித்து விடுவோம் என்று சிலர் சரியாக வேலை செய்யாமல் இருந்து விட்டனர். அதோடு மட்டுமல்லாமல் நம் கட்சியில் முதல் முறையாக சிலர் எனக்கு துரோகமும் செய்து விட்டனர். நல்ல வேளையாக தபால் ஓட்டினால் ஜெயித்து விட்டேன். அமைச்சரும் ஆகிவிட்டேன். இந்த சட்டமன்ற தேர்தலின்போது என்னுடன் இருந்த நண்பர்கள் பல பேர் பணத்திற்கு விலை போய் விட்டார்கள். யார் யார்? யார் யாரிடம் பணம் பெற்றார்கள் என்ற தொலைபேசி பதிவுகள் என்னிடம் உள்ளது. மிகுந்த மன வருத்தத்தில் உள்ளேன், என்ன குறை வைத்தேன். நான் இந்தத் தேர்தலுடன் ஓய்வு பெறலாம் என்று நினைத்தேன், ஆனால் இனி ஓய்வு பெற மாட்டேன். இன்னும் என் கட்சிக்காக அயராது பாடுபடுவேன்.

வருகிற உள்ளாட்சித் தேர்தலில் இப்படி இருக்காமல், உள்ளாட்சியின் அனைத்து பதவிகளிலும் நமது கட்சியினர் வெற்றி பெறவேண்டும். அதற்காக கடுமையாக ஒற்றுமையுடன் உழையுங்கள். காட்பாடி தொகுதியில் குறைகளே இல்லாத அளவுக்கு பணிகளை செய்துள்ளேன். ஆனாலும் நீங்கள் எனக்கு சரியாக வேலை செய்யவில்லை. குறிப்பாக திருவலம் பகுதியில் எனக்கு எதிர்பார்த்த அளவிற்கு வாக்குகள் கிடைக்கவில்லை. எனக்கு வாக்களிக்காமல் துரோகம் செய்தவர்களை நான் மன்னிக்கிறேன். பால் குடிக்கும் ஒரு குழந்தை தாயின் மார்பை கடித்துவிட்டால் தன் குழந்தை மேல், தாய் கடிந்து கொள்வதில்லை. அதுபோல் துரோகம் செய்த நமது கட்சிக்காரர்களையும் மன்னித்து அவர்களுக்கும் உதவிகளை செய்வேன். இனியாகிலும் நல்ல முறையில் கட்சிப் பணியாற்றி உள்ளாட்சித் தேர்தலில் நமது கட்சியினரை வெற்றி பெற செய்யுங்கள். உள்ளாட்சி தேர்தலில் நான் சர்வாதிகாரி போல் செயல்படுவேன். யாரை நிற்க வைத்தால் வெற்றி பெறுவார் என்று தீர்மானித்து அவரை மட்டுமே நிற்க வைப்பேன். அவரை நீங்கள் வெற்றிபெற செய்யுங்கள். உள்ளாட்சித் தேர்தலில் தலைவராக ஆனால் உங்களுக்கு நன்மை” என்று அறிவுறுத்தினார்.

மீண்டும் மீண்டும் போட்டியால் அதிருப்தி

சரி, இந்த தேர்தலில் ஏன், துரைமுருகன் தோல்வியின் விளிம்பிற்கு சென்றார்?…

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “2011 தேர்தலில் இருந்தே துரைமுருகன் தான் காட்பாடி தொகுதியில் போட்டியிடுவது இதுவே கடைசி முறை, இனிமேல் நிற்க மாட்டேன் என்று வாக்காளர்களிடம் மட்டுமின்றி கட்சி நிர்வாகிகளிடமும் வெளிப்படையாகப் பேசி ஓட்டு கேட்டு வந்திருக்கிறார். ஆனால் 2016 தேர்தலிலும் போட்டியிட்டார். அதன்பிறகு அவர், 2021 தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று கட்சிக்காரர்கள் உறுதியாக நம்பினர். ஏனென்றால் 2019 நாடாளுமன்ற தேர்தலில், தனது மகன் கதிர் ஆனந்த்தை வேலூர் தொகுதி வேட்பாளராக அவர் போட்டியிடச் செய்தார்.

12 கோடி ரூபாய் பணம் பிடிபட்ட பிடிபட்டதால் அந்த தொகுதி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு 3 மாதங்கள் கழித்து நடந்தது. அதில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார். மகன் எம்பி ஆகிவிட்டதால் 2021 தேர்தலில் போட்டியிடாமல் துரைமுருகன் ஒதுங்கி விடுவார் என்று கட்சி நிர்வாகிகள் பெரிதும் எதிர்பார்த்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு திமுகவின் பொதுச் செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டதால் இனி கட்சிப் பணிகளில்தான் தீவிரம் காட்டுவார். மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் 2016 தேர்தலில் போட்டியிடவில்லை. அதுபோல துரைமுருகனும் 2021 தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றே திமுக நிர்வாகிகள் பலரும் நினைத்தனர்.

மேலும் அடிக்கடி உடல்நலக் குறைவால் துரைமுருகன் பாதிக்கப்பட்டு வந்ததால் இந்த முறை தேர்தலில் போட்டியிட திமுக அனுமதிக்காது என்றும் கட்சி நிர்வாகிகள் கருதினார்கள்.

அது நடக்காததால் கட்சி நிர்வாகிகள் அவருக்கு உற்சாகத்துடன் தேர்தல் பணியாற்றவில்லை என்பதும் உண்மை. ஏனென்றால் பிரச்சாரத்திற்கு சென்றபோது பல இடங்களில் திமுகவில் துரைமுருகனா, மீண்டும் போட்டியிடுகிறார்? என்று வாக்காளர்களே கேள்வி எழுப்பிய நிகழ்வுகளையும் காண முடிந்தது.

இதன் அர்த்தத்தை சொல்ல வேண்டிய அவசியமில்லை. வாக்காளர்களின் இந்த கேள்விக்கு கட்சி நிர்வாகிகள் பதிலளிக்க முடியாமல் திணறியதும் கண்கூடு.

அதேநேரம் கட்சி நிர்வாகிகளை துரைமுருகன் அனுசரித்து செல்வதில்லை. எப்போதுமே அதிகார தோரணையில் கேலியாகத்தான் பேசுவார் என்பார்கள். தன்னை மீறி காட்பாடி தொகுதியிலோ அல்லது வேலூர் மாவட்டத்திலோ கட்சி விஷயங்கள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருப்பார். இவையெல்லாம் கட்சி தொண்டர்கள் உற்சாகமின்றி தேர்தல் பணியாற்றியதற்கு காரணங்களாக இருக்கலாம்.

50 ஆண்டுகளுக்கு முன்பு தொண்டர்களிடம் இருந்த தீவிர அர்ப்பணிப்பு உணர்வு தற்போது எந்த கட்சியிலும் இல்லை என்பது வெளிப்படையான உண்மை. அரசியல் முழுக்க முழுக்க வியாபாரமாகிப் போனதுதான் இதற்கு காரணம். அதனால் கட்சி நிர்வாகிகளை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவதுதான் புத்திசாலித்தனம்” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 196

0

0