‘சனியன் தொலைஞ்சதுனு இதை செய்துட்டு போகாம’… ஆளுநருக்கு வார்னிங் கொடுத்த அமைச்சர் துரைமுருகன் !!

Author: Babu Lakshmanan
10 February 2022, 7:55 pm
Quick Share

நீட் தேர்வு தொடர்பாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அமைச்சர் துரைமுருகன் வார்னிங் கொடுத்துள்ளார்.

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது அவர் பேசியதாவது :- அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தாலும் அதனை மக்களுக்கு நேரடியாக சென்று சேர்க்கும் வகையில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் மிக முக்கியமானதாகும். எனவே உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெறும் நபர்கள் மக்களின் தேவைகளை அறிந்து அதனை அரசிடம் விரைவாக பெற்று அவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

பெண்கள் முன்னேற்றம் காணவேண்டும் என்பதற்காக நகர்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் திமுக பெண்களுக்கு 50 சதவீத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு சமபங்கு வழங்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் வேலூர் மாநகராட்சி கொண்டுவரப்பட்ட ஆயிரம் கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடந்த ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல் நடந்துள்ளது. இதற்கு அதிகாரிகள் உறுதுணையாக இருந்துள்ளனர். இதுபோன்ற பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டு உள்ளனர்.

திமுக ஆட்சி பொறுப்பேற்று 9 மாதங்கள் ஆன நிலையில், கொரானா தொற்று மற்றும் மழை இயற்கை சீற்றங்கள் உள்ளிட்டவற்றால் மக்களின் உயிர் முக்கியம் என்பதால் அவற்றின் மீது கவனம் செலுத்தப்பட்டது. நிர்வாகத்தை முழுமையாக கவனிக்க முடியவில்லை. எனவே இனிவரும் காலங்களில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியாவிலேயே தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருவதாக பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவித்து வருகின்றனர். 234 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நீட் தேர்வு தொடர்பாக சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு அதனை ஜனாதிபதிக்கு அனுப்ப ஆளுநரிடம் அளித்தால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 234 சட்டமன்ற உறுப்பினர்களின் முகத்தில் அடித்தாற்போல், அதை திருப்பி அனுப்பி உள்ளார்.

மீண்டும் அதனை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி சுவற்றில் அடித்த பந்து போல மீண்டும் ஆளுநருக்கு தீர்மானம் அனுப்பியுள்ளோம். அதனை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பினால் சனியன் தொலைந்தது என்று அவர் இருந்து விடலாம். இல்லையென்றால் தினமும் ஆளுநரை திட்டிக் கொண்டே இருப்போம். ஒரு காலத்தில் அடிமையாக இருந்த பெண்கள் இன்றைக்கு பெண்கள் 50 சதவீத இட ஒதிக்கீடு பெற்று ஆணுக்கு நிகராக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றனர், என்று அவர் கூறினார்.

Views: - 832

0

0