‘நயன்தாராவுக்கு வேண்டுமானால் திமுக உறுப்பினர் அட்டை போடலாம்’ : அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்..!

30 September 2020, 5:42 pm
Jayakumar-01-updatenews360
Quick Share

சென்னை : கடந்த சில நாட்களாக விமர்சனத்திற்குள்ளாகி வரும் திமுக உறுப்பினர் சேர்க்கை குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், குடும்ப உறுப்பினரான நயன்தாராவுக்கு உறுப்பினர் அட்டை வழங்கலாம் எனக் கிண்டலாக கூறியுள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலை பகுதியில் ரூ. 57 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- சர்வதேச முதியோர் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. முதியவர்களின் நலன்களை பாதுகாக்கப்பட வேண்டும். இளைஞர்கள் முதியவர்களை மதிக்க வேண்டும். அரசியலில் முதிர்ச்சியடைந்தவர்களை உதயநிதி மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும. ஜனநாயகக் கட்சியில் இருந்து ஜமீன் கட்சியாக திமுக மாறிவிட்டது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கட்சியைச் சேர்ந்தவர்களை சந்தித்து பேசுவதில் எந்த தவறுமில்லை. அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றது. பல சோதனைகளைக் கடந்துதான் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாக நடக்கும்.

கட்சி பிரிய வாய்ப்பு இல்லை. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கட்சியைச் சேர்ந்தவர்களைத்தான் சந்தித்து பேசுகிறார். அதில் எந்தத் தவறும் இல்லை. அந்தக் கட்சி குறித்து ஆலோசனை நடத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் செயற்குழு நடைபெறும்; அதன்பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்படும். பெரிய அளவுக்கு எதுவும் இல்லை. அதிமுக ஜனநாயக கட்சி என்பதில் மாற்றமில்லை. யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை கட்சி மட்டும்தான் முடிவு செய்யும்.

ஒரே நாளில் 72 லட்சம் பேரை உறுப்பினராக எப்படி சேர்க்க முடியும். ஒசாமா பின்லேடன், டிரம்ப் உள்ளிட்டவர்களின் பெயர்களில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. குடும்ப உறுப்பினரான நயன்தாராவுக்கு வேண்டுமானால் உறுப்பினர் அட்டையை வழங்கலாம். இதுவொரு ஏமாற்று வேலை அனைத்து பெருமையும் பிரசாந்த் கிஷோருக்கே சேரும், என்றார்.

Views: - 15

0

0