பாஜகவை வளர்ப்பதற்காகவே தமிழகம் வருகிறார் அமித்ஷா: அமைச்சர் ஜெயக்குமார்….!!
18 November 2020, 8:50 amசென்னை: பாஜகவை வளர்ப்பதற்காகவே அமித்ஷா போன்ற தலைவர்கள் தமிழகம் வருகின்றனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியாக இருப்பதினால் தான் முதலீடுகள் அதிகம் ஈர்க்கப்படுகிறது. சட்டம்-ஒழுங்கு பற்றி பேச தி.மு.க.வுக்கு அருகதை கிடையாது.
சட்டம்- ஒழுங்கை பேணி காப்பதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. அமித்ஷா போன்று யார் வேண்டுமானாலும் தமிழகம் வரட்டும், போகட்டும். அவருடைய கட்சியை வளர்ப்பதற்காக அமித்ஷா தமிழகம் வருகிறார். இதுதான் அ.தி.மு.க.வின் பார்வை.
பா.ஜ.க. மாநில தலைவர் கூறுவதை போன்று அமித்ஷா வருவதால் பயப்படுகிறார்களா? பயப்படவில்லையா? என்று எதிர்க்கட்சியை பார்த்துதான் நீங்கள் கேட்கவேண்டும். அமித்ஷா அரசு நிகழ்வுகளில் பங்கேற்பதாக இதுவரை எந்த நிகழ்ச்சி நிரல்களும் வரவில்லை.
பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் கூறுவதுபோல, அவர் அரசு நிகழ்வுகளில் பங்கேற்கலாம். தேர்தல் நெருங்கும் சூழலில், கட்சியை பலப்படுத்த தமிழ்நாட்டுக்கு அகில இந்திய தலைவர்கள் வருவது இயற்கை. இதற்கும், அ.தி. மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எல்லோரும் கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.