கிராமங்களைப் போன்று நகர்ப்புறத்திலும் அறிமுகமாகும் சிறப்பு திட்டம் : அமைச்சர் கே.என். நேரு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Author: Babu Lakshmanan
8 March 2022, 12:58 pm
Quick Share

திருச்சி : ஜல் ஜீவன் திட்டத்தை நகர்புறங்களுக்கும் விரிவுப்படுத்த ஏற்கனவே மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், விரைவாக அதை நடைமுறைப்படுத்த மீண்டும் வலியுறுத்துவோம் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திருச்சி மாநகராட்சி கோ – அபிசேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட நியூ பாத்திமா நகர் பகுதியில் நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மரம் நட்டு துவக்கி வைத்தார். இந்த திட்டத்தில் பணியாற்ற உள்ளவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :-மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மூலம் கிராமப்புறங்களில் இருப்பவர்கள் தான் பயன் பெற்று வருகின்றனர். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் குறிப்பாக வட மாநிலங்களில் 36 சதவீதம் தான் நகர்புறத்தில் மக்கள் வசிக்கிறார்கள். பெரும்பாலான மக்கள் கிராமப்புறங்களில் வசிப்பதால் பல திட்டங்களை மத்திய அரசு கிராமப்புறத்தை மையமாக வைத்தே செயல்படுத்துகிறது.

ஆனால், தமிழ்நாட்டில் 63 சதவீதம் மக்கள் நகர்புறங்களில் வசிக்கிறார்கள். ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தால் நகர்புறங்களில் இருப்பவர்கள் பயன்பெற முடியவில்லை. எனவே தான் தமிழ்நாடு அரசு சார்பில் நகர்புற வேலை வாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது இந்த திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் மாநகராட்சியில் உள்ள ஒரு மண்டலம், 27 பேரூராட்சிகள், 5 நகராட்சிகளில் மட்டும் முதற்கட்டமாக இது செயல்படுத்தப்பட உள்ளது. நிதி நிலைமைக்கு ஏற்ப இது விரிவுப்படுத்தப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் நகர்புறங்களில் உள்ள சாலை தூய்மைப்படுத்துதல், மரம் நடுதல், பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மக்கள் மேற்கொள்ள முடியும், என்றார்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் கிராமப்புறங்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. அதை நகர்புறங்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என மத்திய அரசிடம் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளோம். அதை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என மீண்டும் மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்துவோம். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அது குறித்தெல்லாம் பேசாமல் பா.ஜ.கவினர் தமிழ்நாட்டை குறித்து மட்டும் 24 மணி நேரமும் பேசுவது எந்த வகையில் நியாயம், என்றார்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 976

0

0