திமுக நிர்வாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை..? திமுக கூட்டத்தில் அமைச்சர் கேஎன் நேரு அளித்த வாக்குறுதி..!!

Author: Babu Lakshmanan
31 May 2023, 8:31 am
Quick Share

வரும் நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி, சேலத்தில் உயிரை கொடுத்தாவது நாம் வெற்றி பெற வேண்டும் என்று திமுக நிர்வாகிகளிடம் அமைச்சர் கேஎன் நேரு வலியுறுத்தியுள்ளார்.

சேலம் ஐந்து ரோடு அருகே ஜெயரத்னா திருமண மண்டபத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது ;- சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகள் உள்ளது. நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் பல்வேறு பணிகளை செய்து தர கேட்கிறார்கள். கவலைப்பட வேண்டாம் பணிகளை தாருங்கள். அந்தப் பணிகள் நிச்சயம் நடக்கும். போலீஸ் நிலையத்தில் பிரச்சனையா..? நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம். நாங்கள் செய்து தருகிறோம்.

திருச்சியில் கிராம உதவியாளர் பணி வேண்டும் என 400 பேர் கேட்டிருந்தனர். ஆனால் 130 பேருக்கு மட்டுமே இடமிருந்தது. இது குறித்து கலெக்டரிடம் தெரிவித்து லிஸ்ட் வழங்கப்பட்டது. ஒவ்வொரு துறையிலும் அதிகாரிகள் சட்டம் போடுகிறார்கள்.
நாம் தகுதி உள்ளவர்களுக்கு கிடைக்க வழிவகை செய்வோம். இது தவிர நிதி நிலை நெருக்கடியும் உள்ளது.

பத்தாயிரம் பொறியாளர்கள் எடுக்க இருக்கிறோம். இது பற்றி முதலமைச்சரிடம் தெரிவித்து நமது நிர்வாகிகள், தொண்டர்கள் தகுதியானவர்களுக்கு அந்த பணி கிடைக்க உதவி செய்து தர இருக்கிறோம். குறைகள் இருந்தால் சொல்லுங்கள். நிச்சயம் செய்து தரப்படும். கழகத் தோழர்களின் குழந்தைகளுக்கு செய்து கொடுக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

பத்தாண்டுகள் நீங்கள் உழைத்திருக்கிறீர்கள். நான்கு முறை மந்திரியாக இருந்து விட்டேன். இனி ஒன்றும் ஆகப்போவதில்லை. தோழர்கள் நலமாக இருக்க வேண்டும். அந்தக் கவலை தமிழக முதல்வருக்கும் இருக்கிறது.

வருகின்ற 11ஆம் தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞரின் சிலை சேலத்தில் திறக்கப்படுகிறது. பின்னர் பழைய பேருந்து நிலையம், புதிய கட்டிடங்கள் திறக்கப்படுகிறது. இளம்பிள்ளை அருகே கூட்டு குடிநீர் திட்டமும் தொடக்கி வைக்கப்பட்ட இருக்கிறது. முதலமைச்சர் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை சேலம் பொறியியல் கல்லூரியில் நடக்கும் விழாவில் வழங்க இருக்கிறார்.

மறுநாள் மேட்டூர் அணைக்கு சென்று குருவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து வைக்க உள்ளார். பின்னர். அத்தி கடவு திட்டத்தையும் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சிகளில் திரளான தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். முன்னாள் முதலமைச்சர் நிறைய தவறு நடக்கிறது என தெரிவித்திருக்கிறார். ஆனால் அவர்களது ஆட்சியில் நடந்தவற்றை திரும்பி பார்க்க வேண்டும்.

அதிமுகவினர் பெரிய அளவில் ஜெயித்து விடலாம் என கருதுகிறார்கள். ஆனால் நாம் நூறு சதவீதம் வெற்றி பெற வேண்டும். திருச்சி, சேலத்தில் முழுமையாக வெற்றி பெற வேண்டும் அதற்கான யுத்திகளை கையாள வேண்டும். உயிரை கொடுத்தாவது நாம் வெற்றி பெற வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Views: - 323

0

0