‘நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்’… CM ஸ்டாலினிடம் இருந்து வந்த திடீர் உத்தரவு ; திருச்சி சிவாவை நேரில் சந்தித்து பேசிய அமைச்சர் நேரு..!!

Author: Babu Lakshmanan
17 March 2023, 8:08 pm
Quick Share

திருச்சி ; திமுக எம்பி திருச்சி சிவா வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அமைச்சர் கேஎன் நேரு அவரை நேரில் சந்தித்து பேசினார்.

திருச்சியில் திமுக எம்பி திருச்சி சிவா மற்றும் அமைச்சர் நேரு ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. அமைச்சரின் ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீட்டில் புகுந்து கார் உள்ளிட்ட வாகனங்களை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவில் இருகோஷ்டிகளாக உருவாகியது திருச்சியில் பெரும்பரப்பை உண்டாக்கியது.

இந்த நிலையில், திமுக எம்பி திருச்சி சிவாவை அமைச்சர் கேஎன் நேரு நேரில் சந்தித்து பேசினார். பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அமைச்சர் கேஎன் நேரு பேசியதாவது:- சென்னையில் இருந்து வந்த பிறகு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்தன. என்ன நிகழ்ச்சி எங்கே என்பது கூட எனக்கு தெரியாது. முழு விவரங்களையும் மாவட்ட ஆட்சியர் தான் வைத்திருந்தார்.

ராஜா காலனி உள் விளையாட்டு அரங்கை திறப்பதற்காக நான் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு சிலர் அண்ணன் பெயர் போடவில்லை என கூறினார்கள். அது எனக்கு தெரியாது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தவர்களை தான் கேட்க வேண்டும் என தெரிவித்தேன்.

கழக குடும்ப வீட்டில் நடக்கக் கூடாத விஷயம் நடந்து விட்டது. என்னுடைய துரிதிஷ்டம் என்னவென்றால் அந்த கருப்பு கொடி காண்பித்தவர்களை அழைத்துச் செல்வதற்காக காவல்துறையினர் பெரிய வேனை சாலையில் நிறுத்தி விட்டார்கள். எனது கார் நீண்ட தூரம் நின்று விட்டது. பிறகு சரி செய்துவிட்டு நான் மற்ற நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக சென்று விட்டேன்.

இந்நிலையில் தான் நடக்க கூடாத சில விஷயங்கள் நடந்து விட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஆட்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் எனக்கு தொலைபேசி மூலமாக தெரிய வந்தது. கம்யூனிகேஷன் பிரச்சனையால் இது போன்ற சம்பவம் நடந்துவிட்டது. இனிமேல் நடக்காது, நடக்கவும் கூடாது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நீங்கள் இருவருமே திருச்சியில் கழகத்தை கட்டி காத்து வருகிறீர்கள். உங்களுக்குள் எந்த விதமான பிரச்சினையும் இருக்கக் கூடாது என தெரிவித்தார். உடனடியாக திருச்சி சிவா அவர்களை நேரில் சந்தித்து சமாதானம் செய்ய வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நேரடியாக இன்று அவர் இல்லத்திற்கு வந்து பல கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். சமாதானமாக பேசிக் கொண்டோம்.

அப்படி சமாதானமாக இருந்தால்தான் கழகத்திற்கும், ஆட்சிக்கும் நல்ல பெயர் வரும் என்று சொன்னார். சிவா அவர்கள் என்னை விட வயதில் இரண்டு, மூன்று வயது சிறியவர்தான். இருந்தாலும் இது போன்ற சம்பவம் நடந்தது எனக்கு தெரியாது. தெரிந்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது.

சிவா ஒரு மூத்த தலைவர். திமுகவில் அவருக்கு ஒரு அவமதிப்பு ஏற்பட்டால் அது கழகத்திற்கு நல்லதல்ல என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்தார். இருவரும் மனது விட்டு முழுமையாக பேசிவிட்டோம். இதுபோன்ற நிகழ்வு இனிமேல் நடக்காது நடக்கவும் கூடாது. திருச்சி சிவா அவர்கள் அருமையாக பேசுவார். நான் தடுமாறி தடுமாறி பேசுவேன். நடந்தது நடந்ததாகவே இருக்க வேண்டும். நடப்பது நல்லதாகவே நடக்க வேண்டும். தலைவரின் குரல் எங்கள் செவியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது, எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, திமுக எம்பி திருச்சி சிவா கூறியதாவது :- நானும் அமைச்சர் நேருவும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். இதில் நடந்து வைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார். அதை நான் ஏற்றுக் கொண்டேன். எங்களைப் பொறுத்தவரை இயக்கத்தின் வளர்ச்சி தான் முக்கியம். அவர் ஆற்றும் தொண்டினை நான் ஆற்றுவது கேள்விக்குறி, அதேபோன்று நான் ஆற்றும் பணியினை அவர்களுக்கு தெரியும். நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். நடப்பவை நல்லதாகவே நடக்கட்டும், என தெரிவித்தார்.

Views: - 429

0

0