முதலமைச்சர் ஸ்டாலின் இதை எப்படி விட்டாருன்னு தெரியல… ஆனால், நான் விடமாட்டேன்… அமைச்சர் கேஎன் நேரு அதிரடி..!!

Author: Babu Lakshmanan
9 April 2022, 1:25 pm
Quick Share

பெருநகர வளர்ச்சி குழுமத்தில் திருச்சி மாவட்டம் கண்டிப்பாக இடம்பெறும் என்று திருச்சியில் அமைச்சர் கே.என் நேரு உறுதியளித்துள்ளார்.

திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் 350 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைய உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர், அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது :- நேற்று முதல்வரிடம் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பது குறித்த விரிவான திட்ட அறிக்கையை காட்டினோம். டெண்டர் விடுவதற்கான பணிகள் விரைவில் துவங்கும். 8 அடி உயரத்திற்கு 37 கோடி செலவில் மனலை நிரப்ப உள்ளோம். இது முதல் கட்டம் 350 கோடி, இரண்டாவது மார்கெட், பின்னர் வணிக வளாகம் இது போன்று நான்கு கட்டங்களாக இந்த பணிகள் நடைபெற உள்ளது.

இந்த இடத்தில் 280 கடைகள் அமைக்க திட்டம். 20 ஆயிரம் பேருக்கு இதன் வாயிலாக வேலை வாய்ப்பு ஏற்படுத்த உள்ளோம். மதுரை,திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும் இணையும் இடமாக இது அமைகிறது. திண்டுக்கல் சாலை முதல் கம்மரசம்பேட்டை இணைப்பிற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் துவங்கும்.

மணப்பாறை சிப்காட்டிற்கு ஒரு கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த முதல்வர் நிதி ஒதுக்கி உள்ளார். பெருநகர வளர்ச்சி குழுமத்தில் திருச்சியை எப்படி முதல்வர் விட்டார் என்று தெரியவில்லை. எப்படியும் கேட்டு வாங்கி விடுவேன். முதல்வரிடம் இது குறித்து கலந்து பேசி கண்டிப்பாக திருச்சிக்கு கேட்டு வாங்கி விடுவோம், என்றார்.

கள்ளிக்குடி மார்க்கெட் விவகாரம் குறித்த கேள்விக்கு, காட்டுக்குள் வைத்தால் யார் வருவார்கள் ? மக்கள் அதிகம் வந்து செல்லும் இடத்தில் மார்கெட் இருந்தால் அனைவருக்கும் வசதியாக இருக்கும், எனக் கூறினார்.

மேலும், சொத்துவரி உயர்வு குறித்தும், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு பற்றிய கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- 1987ல் 100 … 200 … 300
1993ல் 100 … 150 …250 என்கிற அளவில் அதிமுக ஆட்சியில் வரியை உயர்த்தினார்கள். ஆனால் நாம் தற்போது அப்படி எல்லாம் உயர்த்தவில்லை.

இந்தியாவில் உள்ள 14 மாநிலங்களில் வரி உயர்வு ஏற்றிய பின்னர் தான், தமிழகத்தில் நாம் வரியை உயர்த்தினோம். மற்ற மாநிலங்களை விட குறைவான வரி தமிழகத்தில் தான். மற்ற மாநிலம் நமக்கு முன்னர் வரியை ஏற்றி விட்டனர். நாம் அதற்கு பின்னர் தான் ஏற்றினோம். எனவே, வேண்டும் என்றே குறை கூறும் அவர்களிடம் நாம் என்ன சொல்ல முடியும்.

மார்ச் 31 என்பதற்கு பதிலாக பிப்ரவரி 31 என்று தெரியாமல் கூறி விட்டேன் அதை இவ்வளவு பெரிது படுத்துகிறார்கள். எடப்பாடி கம்ப ராமாயணத்தை எழுதியது சேக்கிழார்…. வைகையை தர்மாகோலில் மூடிய செல்லூர் ராஜு போன்றவர்கள் ஹார்டுவேர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருப்பார்கள், எனக் கூறினார்.

Views: - 876

0

0