ஆளே இல்லாத சிறப்பு மருத்துவ முகாம்.. காரை விட்டு இறங்காத அமைச்சர் நாசர் ; அதிகாரிகள், திமுக கவுன்சிலர்களுக்கு விழுந்த டோஸ்!!

Author: Babu Lakshmanan
17 March 2023, 4:29 pm
Quick Share

திருவள்ளூரில் அரசின் சிறப்பு மருத்துவ முகாமிற்கு மக்கள் யாரும் வராததால், அதிருப்தியடைந்த அமைச்சர் நாசர் அதிகாரிகளை கடுமையாக திட்டி தீர்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதேபோல, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே செல்கிறது. தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சளி, காய்ச்சல், இருமலுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனிடையே, அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளை உருவாக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும், சிறப்பு மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயலில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை அமைச்சர் நாசர் துவக்கி வைக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மருத்துவ முகாமை திறந்து வைப்பதற்காக அமைச்சர் நாசர் திருமுல்லைவாயலுக்கு வருகை தந்தார்.

அமைச்சர் வருகையின் போது, இருக்கையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர். மருத்துவ முகாமிற்கு மக்கள் யாரும் வராததால் அமைச்சர் நாசர் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து, காரில் இருந்தபடியே அதிகாரிகள், திமுக கவுன்சிலர்கள், நிர்வாகிகளை அழைத்து மக்கள் எதற்காக மருத்துவ முகாமிற்கு வரவில்லை என கண்டித்தார்.

மேலும் மக்கள் யாரும் வராததால், சிறப்பு மருத்துவ முகாமை ரத்து செய்து அமைச்சர் நாசர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 64

0

0

Leave a Reply