அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Author: Babu Lakshmanan
6 August 2021, 7:24 pm
Quick Share

சென்னை : போக்குவரத்துத் துறையில் வேலைவாங்கித் தருவதாக ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த 2011 – 2015-இல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலை தருவதாக கூறி 81 பேரிடம் 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை நகல் பெறுவதற்காக சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி நேரில் ஆஜர் ஆவதற்கு விலக்கு அளித்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றப்பத்திரிக்கை நகலை பெற்று கொண்டார். குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களும் குற்றபத்திரிக்கை நகலை பெற்றுக் கொண்டனர்.

மேலும், மற்ற இரண்டு வழக்குகளிலும் இன்று ஆஜராகி குற்றப்பத்திரிக்கை நகலை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, இந்த மோசடி வழக்கை ரத்து செய்யக் கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சண்முகம் என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு காணொளி காட்சி மூலம் இன்று விசாரணைக்கு வந்த போது, ஆஜரான புகார்தாரர்கள், பணத்தை திருப்பி பெற்றுக் கொண்டதாக தெரிவித்தனர். இதனை பதிவு செய்த நீதிபதி அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 4 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின் நகலை சமர்ப்பிக்க செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

Views: - 312

0

0