அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதால் நெருக்கடியில் அமைச்சர் செந்தில் பாலாஜி : உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 September 2022, 11:12 am
Minister Senthil Balaji - Updatenews360
Quick Share

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேவியட் மனு தாக்கல் செய்தார்.

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை (அ.தி.மு.க. ஆட்சியில்) போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணமோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்குகள் சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இதற்கிடையே இந்த மோசடியின் மூலமாக சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறையும் கடந்த 2021-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இந்த சம்மனை எதிர்த்து செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை கடந்த 1-ந் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது. இந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தனது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என தெரிவித்து அமைச்சர் செந்தில்பாலாஜி சார்பில் வக்கீல் ராம்சங்கர் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

Views: - 158

0

0