‘கிளம்பு கிளம்பு அந்து போச்சு.. இது காலா கில்லா’… அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை!!

Author: Babu Lakshmanan
8 June 2023, 7:47 pm
Quick Share

கரூரில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனைக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் கடந்த மாதம் 26ம் தேதி முதல் தொடர்ந்து 8 நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. கரூரில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்து வந்த வருமான வரித்துறை சோதனையில் பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இதனை அடிப்படையாக வைத்து அடுத்தகட்ட விசாரணையை தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

அதேவேளையில், சோதனை மற்றும் விசாரணையில் கிடைத்த தகவல் பற்றி டெல்லி தலைமையகத்திற்கு அறிக்கையை வருமான வரித்துறை அனுப்பி வைத்துள்ளனர்.

இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டில் சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை திமுகவினர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், வருமான வரித்துறையினருக்கு எதிராக அமைச்சரின் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வருமான வரித்துறையினரை மிரட்டும் விதமாக ஒட்டப்பட்ட அந்தப் போஸ்டரில், ‘கிளம்பு கிளம்பு அந்து போச்சு… இது காலா கில்லா எனவும், இங்க இருந்து ஒரு புடி மண்ண கூட எடுத்துகிட்டு போக முடியாது’, எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு, காலா படத்தில் வரும் ரஜினிகாந்த் போல, அமைச்சர் செந்தில் பாலாஜியை சித்தரித்தும், அவருக்கு அருகே புலி ஒன்று உருமிக் கொண்டு நிற்பதை போன்றும் போஸ்டரில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. திருமாநிலையூரை சேர்ந்த செல்வேந்திரன் என்பவர் பெயரில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ஏற்கனவே, வருமான வரித்துறையினரை தாக்கிய விவகாரம் டெல்லியில் எதிரொலித்து வரும் நிலையில், இது போன்ற போஸ்டர்கள் வருமான வரித்துறையினர் மேலும் கோபத்திற்கு ஆளாக்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Views: - 334

0

0