அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த அமைச்சர் எஸ்பி வேலுமணி : பின்னணியில் அமித்ஷா..!!
23 November 2020, 6:52 pmமத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகைக்கு பிறகு, உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் வேலுமணி முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகைக்கு முன்னதாக, மத்திய ஊரக வளர்ச்சி, விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன், உணவு பதனிடுதல் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், அனைத்து மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் சார்பில் கலந்து கொண்ட உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி, பிரதமர் வீட்டு வசதித் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.
அப்போது, 2011-20ம் ஆண்டு வரை நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் 17.08 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளதாகவும், 2வது கட்டமாக விடுபட்ட தகுதியான 9.11 லட்சம் பயனாளிகளின் பெயர் மற்றும் விபரங்கள் ஆவாஸ் பிளஸ் இணையளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு ஒப்புதல் வழங்கினால், அவர்களுக்கு வீடுகள் தரப்பட்டு விடும் என அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறினார். அதோடு, 2022ம் ஆண்டுக்குள் தமிழகம் முழுவதும் பிரதமரின் வீட்டு வசதி திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சரிடம் அவர் உறுதியளித்தார்.
இது தொடர்பான தகவல்களை திரட்டிக் கொண்டு 2 நாள் பயணமாக தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைத் தொடர்ந்து, அமைச்சர்களின் வரிசையில் எஸ்பி வேலுமணி வரவேற்றார்.
அப்போது, வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு திட்டத்தை தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் சிறப்பாக கொண்டு சேர்த்ததற்கு அமைச்சர் எஸ்பி வேலுமணியை மத்திய அமைச்சர் அமித்ஷா பாராட்டியுள்ளார். மேலும், அனைவருக்கு வீடு வழங்கும் திட்டத்தை 2022ம் ஆண்டுக்குள் தமிழகம் முழுவதும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததற்கு அவரை அமித்ஷா பாராட்டினார்.
இதைத் தொடர்ந்து, அனைவருக்கும் வீடு, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு ஆகிய திட்டங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்பி வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.
0
0