பொங்கலுக்கு பிறகு தமிழகத்தில் முழு ஊரடங்கா..? சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்..!!
Author: Babu Lakshmanan11 January 2022, 12:01 pm
சென்னை : பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா..? என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. 2வது அலை கட்டுக்குள் வந்த நிலையில், தமிழகத்தில் சராசரி பாதிப்பு 600க்கு கீழ் சரிந்து காணப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் 3வது அலை வீசத் தொடங்கியதால், கடந்த 10 நாட்களாக தொற்று தமிழகத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
குறிப்பாக சென்னையில் மட்டும் 6 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. எனவே, கொரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கு, திரையரங்குகள், உணவகங்கள், பேக்கரிகளில் 50 % வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, சுப மற்றும் துக்க நிகழ்வுகளில் குறிப்பிட்ட அளவிலான நபர்களுக்கே அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, நேற்று மட்டும் தமிழகத்தில் 13,990 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எனவே, கொரோனா பரவலைத் தடுக்க பொங்கல் பண்டிகைக்கு என மேலும் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளில் 75% பயணிகள் மட்டுமே பயணிக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொங்கல் பண்டிகைக்கு பிறகு தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது, என கூறினார்.
0
0