ஆக்சிஜனை ஆந்திராவுக்கு அனுப்பிய விவகாரம் : மத்திய அரசு மீது அமைச்சர் விஜயபாஸ்கர் அதிருப்தி..!!!

21 April 2021, 11:23 am
vijayabaskar - updatenews360
Quick Share

சென்னை : எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ஆந்திராவுக்கு ஆக்சிஜனை மத்திய அரசு அனுப்பியது தமிழக அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாமலும், ஆக்சிஜன் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகி வருகிறது.

எனவே, தொழில்சாலை தேவைகளுக்கு பயன்படும் ஆக்சிஜனை மருத்துவ தேவைகளுக்கு திசைமாற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தியையும் அதிகரிக்க ஆணையிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை ஸ்ரீபெரும்புத்தூரில் உற்பத்தி செய்யப்படும் 45,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழக அரசு தங்களின் அதிருப்தியை தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் தயாரிக்கப்பட்டு வரும் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்புவது தொடர்பாக மத்திய அரசு எந்தவித ஆலோசனையும் மாநில அரசுடன் நடத்தவில்லை. பிற மாநிலங்களுக்கு உதவ தமிழக அரசு எப்போதும் தயாராகத்தான் இருக்கிறது. ஆனால், தமிழகத்திலும் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், ஆக்சிஜன் தேவை அதிகரித்திருப்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் முறையிடப்படும்,” என்றார்.

அதேபோல, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “‘அவசர தேவைகளின் போது இதுபோல அண்டை மாநிலங்களுக்கு உதவுவது வழக்கம் தான். மற்ற மாநிலங்களில் இருந்து ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் நமக்கு திருப்பி விடப்படுகின்றன,” எனக் கூறினார்.

Views: - 81

0

0