நடிகர் சிவாஜியின் 93வது பிறந்த நாள் : துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை..!
1 October 2020, 11:37 amசென்னை : நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93வது பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
நடிப்பின் மூலம் திரையுலகின் நடிகர் திலகம் எனப் பெயர் பெற்ற சிவாஜி கணேசனின் 93வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளை ரசிகர்களும், குடும்பத்தினரும் கொண்டாடி வருகின்றனர். திரையுலகில் பல்வேறு விருதுகளை வென்று, யாரும் எளிதில் எட்டிவிட முடியாத உச்சத்தில் இருக்கும் அவருக்கு, அரசின் சார்பில் சென்னை அடையாறில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிவாஜி கணேசனின் பிறந்த நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் உள்ள உருவ படத்திற்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மரியாதை செய்த பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “செயற்குழுவில் ஆலோசிக்கப்பட்டதை வெளியில் சொல்லக் கூடாது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடக்கக் கூடாது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்பட அனைவருக்கும் கட்டுப்பாடு ஒன்றுதான். அதிமுகவில் எப்போது பிளவு ஏற்படும் என எதிரிகள் எதிர்பார்த்துள்ளனர். அதற்கு இடமளிக்கக் கூடாது,” எனக் கூறினார்.