திமுகவிற்கு போட்டியாக புதிய கட்சி : முக அழகிரி பராக்… பராக்…!!!

21 January 2021, 8:21 pm
alalgiri - cover - updatenews360
Quick Share

மே மாதம் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வர் ஆகிவிடக்கூடாது என்று யார் நினைக்கிறார்களோ, இல்லையோ இது அப்படியே பலிக்கவேண்டும் என விரும்புவோர் ஏராளம். அந்த வரிசை பட்டியலில் முதல் ஆளாக அவருடைய அண்ணன் மு.க. அழகிரிதான் இருப்பார் என்பது நிச்சயம்.

திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க. அழகிரிக்கும், கருணாநிதியின் வலதுகரம் போலிருந்த தம்பி ஸ்டாலினுக்கும் இடையே சகோதர யுத்தம் 10, 15 வருடங்களுக்கும் மேலாக நீடித்து வந்தது. இவர்கள் இருவருக்கும் இடையேயான இந்த சண்டைக்கு காரணம் ஊரறிந்த ரகசியம்.

MK Alagiri- Updatenews360

எதிர்காலத்தில், திமுகவில் அண்ணன் அழகிரியின் கை ஓங்கி விடக்கூடாது என்பதற்காக, மு.க.ஸ்டாலின் திட்டமிட்டே அவரை தந்தை கருணாநிதியை வைத்தே காய் நகர்த்தி, 2014-ல் கட்சியிலிருந்து நீக்கி விட்டதாகவும் கூறுவார்கள்.

அப்போது முதலே அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் ஏழாம் பொருத்தம்தான்.

திமுக தலைவர் கருணாநிதி உயிருடன் இருந்தவரை அவருடைய கோபாலபுரம் இல்லத்துக்கு மகன் என்கிற முறையில் அழகிரி அடிக்கடி வந்து போவது வழக்கம். ஆனால், கருணாநிதி 2018-ல் இறந்த பிறகு தனது தாயார் தயாளு அம்மாளை பார்ப்பதற்காகவே மட்டுமே அவர் வந்து செல்கிறார். அரசியல் விவகாரங்கள் குறித்து அவர் எதுவும் பேசுவதில்லை.

ஆனால், தம்பி ஸ்டாலினை நீ அரவணைத்து சென்றால்தான் என்ன? நம் குடும்பத்துக்குள் இப்படி சண்டை வேண்டுமா? என்று அவ்வப்போது உறவுகள் அவரிடம் கேள்விகளை எழுப்புவது உண்டு. ஆனால் அதற்கெல்லாம் சிரித்த முகத்துடன் பதில் எதுவும் சொல்லாமல் அழகிரி சென்று விடுவார். இப்படி மீண்டும் மீண்டும் கேள்விகள் எழுந்ததால் தான் அண்மையில் அழகிரி, தம்பி ஸ்டாலின் தனக்கு இழைத்த துரோகங்கள் பற்றி தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில் அடுக்கடுக்கான புகார்களை வாசித்தார் என்கிறார்கள்.

stalin-alagiri-updatenews360

தான் திமுக-வில் நீடிக்க விரும்பிய போதிலும் தன்னை ஸ்டாலின் எப்படி ஓட ஓட விரட்டி அடித்தார் என்பதையும் வெளிப்படையாக கூறி அதிர வைத்தார். இதை அவர் தனது குடும்பத்தினருக்காக சொன்ன பதில் என்றே கருத வேண்டி இருக்கிறது என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அந்த உணர்ச்சி வேகத்தின் வெளிப்பாடுதான் ஸ்டாலின் எப்போதுமே முதல்வராக முடியாது என்று அழகிரி சபதம் போட்டது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இதனால்தான் தனது நண்பரான ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்த பின்னரும். அழகிரி தனது எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பதில் மிகத் தீவிரமாக இருக்கிறார் என்ற பேச்சும் உள்ளது.

அண்மையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் சிலர் திமுகவில் இணைந்தனர். ரஜினி ரசிகர்களின் ஆதரவை அழகிரி திரட்டி வந்த நிலையில், திமுக இப்படி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு வலைவீசி கட்சியில் இணைத்து வருவது அவருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது, ரஜினி ரசிகர்களை தனது பக்கம் அழகிரி இழுத்து விடக்கூடாது என்பதற்காக ஸ்டாலின் இந்த விஷயத்தில் முந்திக் கொண்டார் என்கிறார்கள்.

மேலும் இப்படி திமுகவில் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு அக்கட்சி ஒரு புதியதொரு கட்டளையையும் பிறப்பித்திருக்கிறது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் 3 ஆயிரம் ரஜினி ரசிகர்களை திமுகவில் இணைக்க வேண்டுமாம். இந்தத் தகவலும் அழகிரியின் மறு அரசியல் பிரவேசத்திற்கான உத்வேகத்தை அதிகரிக்க வைத்திருக்கிறது.

இனியும் கட்சி தொடங்க தாமதித்தால் ரஜினி ரசிகர்களை திமுக தனது பண பலத்தால் அப்படியே ‘ஸ்வாகா’ செய்துவிடும் என்று அழகிரி கருதுகிறார். எனவேதான் அவர் அரசியல் கட்சி தொடங்குவதில் உறுதியாக இருக்கிறார். மேலும் மன்றத்தின் நிர்வாக பொறுப்பில் இருந்து விலகி எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் என ரஜினி அண்மையில் அறிவித்ததும் அழகிரிக்கு புதுத்தெம்பை தந்துள்ளது.

அதனால் தனது பிறந்த நாளான வருகிற 30-ம் தேதி அரசியல் கட்சி தொடங்குவது குறித்து மு.க.அழகிரி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக இந்திய குடியரசு கட்சி, புதிய தமிழகம், புரட்சிபாரதம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற சிறு சிறு கட்சிகளுடன் மு.க. அழகிரி ரகசிய பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த கட்சிகள் எல்லாம் தேர்தல் நேரத்தில் பிரதான கட்சிகளால் மறக்கப்படுபவை, ஒதுக்கப்படுபவை என்று சொல்லலாம். 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் சில ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை ஓட்டுகளை கொண்டுள்ள இந்த கட்சிகளை தனது அணிக்கு கொண்டு வருவதன் மூலம் திமுகவின் ஓட்டுகளை சிதைக்க முடியும் என்பது அழகிரியின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

rajini - alagiri - updatenews360

இவர்களுடன் ரஜினி ரசிகர்களின் வாக்கும் சேரும்போது, அது ஒவ்வொரு சட்டப் பேரவை தொகுதியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கணக்கு போடுகிறார். அதனால் தனது பிறந்த நாளான வருகிற 30-ம் தேதி அரசியல் கட்சி தொடங்குவது குறித்து மு.க.அழகிரி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைவிட திமுகவில் ஏற்படப்போகும் இன்னொரு பிரளயத்துக்காகவும் அழகிரி காத்திருக்கிறார். அக்கட்சிக்காக பலகாலம் பாடுபட்ட மூத்த தலைவர்கள் பலருக்கு தேர்தலில் சீட்டு கொடுக்காமல் திமுக நிச்சயம் ஓரங்கட்டும். மனம் நொந்து போகும் இவர்கள் தென்மண்டலத்தில் அழகிரியை நோக்கித்தான் செல்வார்கள். செல்வாக்கு மிக்க இந்த தலைவர்களையும் தேர்தலில் போட்டியிட வைக்க வேண்டும் என்பதுதான் அழகிரியின் விருப்பம்.

அப்போதுதானே அவர் எடுத்த சபதத்தை முடிக்க முடியும்!

Views: - 0

0

0