நான் இல்லாமல் 2021 சட்டப்பேரவை தேர்தல் கிடையாது : திமுகவிற்கு மறைமுக எச்சரிக்கை விடுத்த முக அழகிரி…!!

1 December 2020, 12:31 pm
MK Alagiri- Updatenews360
Quick Share

சென்னை : புதிய கட்சி தொடங்குவது குறித்த பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி பதிலளித்துள்ளார்.

திமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகன்களில் ஒருவருமான முக அழகிரியை, ஸ்டாலின் தலைவர் பொறுப்பிற்கு வந்த பிறகு, முழுவதுமாக விலக்கி வைக்கப்பட்டிருந்தார். திமுகவில் தன்னை இணைத்துக் கொள்வதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் தனது ஆதரவாளர்கள் மூலம் மேற்கொண்டார் முக அழகிரி. ஆனால், அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது.

இந்த சூழலில் தமிழக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முக அழகிரியை இழுக்க பாஜக முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகின. அதோடு, தனது நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த் புதிய கட்சியை ஆரம்பித்தால், அதில் அழகிரி இணையவுள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது.

திமுகவை தவிர்த்து பிற எந்த கட்சியிலும் முக அழகிரி இணைந்தால், அது ஸ்டாலினுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே, ஸ்டாலினும் அழகிரியை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மதுரை வில்லாபுரத்தில் முக அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், “வரும் சட்டப்பேரவை தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும். ஆதரவாளர்களுடன் ஆலோசித்து விரைவில் அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன். புதிய கட்சி துவங்குவேனா என்பது போகப் போக தெரியும்,” எனத் தெரிவித்தார்.

அப்போது, பாஜகவில் சேருவீர்களா என்ற கேள்விக்கு, வதந்திகளுக்கு பதில் அளிக்க முடியாது என்று கூறியதுடன், திமுகவில் துரை தயாநிதிக்கு பதவி வழங்கப்படுகிறதா என்னும் மற்றொரு கேள்விக்கு முதலில் அழைத்துப் பேசட்டும் என பதிலளித்தார்.

விரைவில் தன்னை அழைத்து பேசாவிட்டால், திமுகவிற்கு முதல் எதிரியாக தான் இருப்பேன் என்பதை சொல்லாமல் சொல்வதாக, இன்றைய அழகிரியின் பேட்டி அமைந்தள்ளது.

Views: - 0

0

0