மு.க. அழகிரியின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்! ஆட்டம் காணும் அண்ணா அறிவாலயம்..!!

Author: Babu
4 January 2021, 9:18 pm
alagiri - stalin - cover - updatenews360
Quick Share

மு.க. அழகிரி. இந்த பெயரைக் கேட்டாலே கொஞ்சம் அதிருதில்ல. இவர் யார்? என்பது உங்கள் நினைவுக்கு வந்திருக்கும்.
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுகவை சுமார் அரை நூற்றாண்டு காலம் கோலோச்சியவருமான மு.
கருணாநிதி – தயாளு அம்மாள் தம்பதியினரின் தலை மகன். கருணாநிதியின் இன்னொரு மைந்தரான மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரர். 69 வயதாகும் அழகிரி, ஸ்டாலினை விட இரண்டு வயது மூத்தவர். மத்திய மந்திரியாகவும் பதவி வகித்தவர்.

இருவரும் ஒரே தாயின் வயிற்றுப்பிள்ளைகள் என்றாலும் கடந்த 7 ஆண்டுகளாகவே அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் ஏழாம் பொருத்தம்தான். திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த அழகிரி 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு காரணம் யார் என்பது தமிழகம் அறிந்த ஒன்றுதான். இதன்பிறகே அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே நேரடி மோதல் உருவானது.

stalin -alagiri - updatenews360

முன்னதாக, 2009-ல் திருமங்கலம் சட்டப் பேரவை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா என்னும் புதிய பார்முலாவை உருவாக்கி இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்தவர் மு.க. அழகிரி என்பது நினைவு கூர்த்தக்கது. அதன்பிறகு அவருக்கு அரசியலில் ஏறுமுகம்தான். ஆனால், சொந்த தம்பி ஸ்டாலினால் அவருக்கு கட்சியில் கடும் நெருக்கடி உருவானது.

தென் மாவட்டங்களில் அழகிரிக்கு தன்னை விட அதிக செல்வாக்கு, ஆளுமை இருப்பதாக உணர்ந்த ஸ்டாலின் மெல்ல மெல்ல காய்களை நகர்த்த ஆரம்பித்தாக கூறப்பட்டது. அதன்பின், தந்தை கருணாநிதியிடம் தனக்கிருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி ஸ்டாலின், தன்னை திமுகவை விட்டு தூக்கி வீசினார் என்று அழகிரி நம்புகிறார். அதற்கு முன்புவரை இருவருக்கும் இடையே இருந்த பனிப்போர் இதன்பிறகுதான் வெளியுலகில் சகோதர யுத்தமாக உருவெடுத்தது.

stalin upset - updatenews360

கருணாநிதியின் மறைவுக்கு பின்பு திமுகவின் தலைவர் ஆகி விட்ட ஸ்டாலினை ஒரு போதும் தமிழக முதல்வராக விடமாட்டேன் என்று வரிந்துகட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறார், அழகிரி.

மே மாதம் நடைபெற இருக்கும் தமிழக சட்டபேரவைத் தேர்தல், தம்பி ஸ்டாலினை பகை தீர்க்க தனக்கு நல் வாய்ப்பாக அமைந்திருப்பதாக மு.க.அழகிரி கருதுகிறார். அதன் முன்னோட்டம்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடந்த அவரது ஆதரவாளர்களின் ஆலோசனை கூட்டம். உண்மையில், தனக்கு இப்படியொரு கூட்டம் திரளும் என்பதை அழகிரியே கூட எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த அளவிற்கு நிகழ்ச்சி நடந்த மண்டபத்திற்கு வெளியேயும் அவருடைய ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தனர்.

இதனால் உற்சாகமாகிப்போன அவர், மு.க. ஸ்டாலினை கடுமையாக தாக்கிப் பேசினார். நடந்த பழைய சம்பவங்களையெல்லாம் சுமார் 2 மணி நேரம் அடை மழைபோல் கொட்டித் தீர்த்தார். அதுவும் கையில் எந்த துண்டுசீட்டும் வைத்துக் கொள்ளாமல் பேசினார், என்பது குறிப்பிடத்தக்கது.

alagiri - stalin - updatenews360

தனது உரையின் முத்தாய்ப்பாய் அவர், “கருணாநிதியை மறந்த மு.க. ஸ்டாலின் என்றுமே தமிழக முதல்வர் ஆக முடியாது” என்று ஒரு போடு போட்டார். இன்னும் ஒரு படி மேலே போய் “என்னுடைய ஆதரவாளர்கள் ஒருபோதும் அவரை முதல்வராக விடமாட்டார்கள்” என்றும் சபதம் எடுத்ததுபோல் அடித்துக் கூறினார். அழகிரி ஆதரவாளர்களின் இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுகவில் உதயநிதியின் ஆதிக்கம் காரணமாக ஓரங்கட்டப்பட்ட சீனியர் தலைவர்களும், முன்னாள் நிர்வாகிகளும், அதிருப்தியாளர்களும் பெருமளவில் பங்கேற்றதை காண முடிந்தது.

ஆலோசனை கூட்டம் பற்றி அழகிரியின் ஆதரவாளர்கள் கூறுகையில், “திமுக இரண்டாக உடையப் போவதையே இது காட்டுகிறது. அண்ணன் அழகிரி சொன்னால் அது அப்படியே நடக்கும். அவருடைய வாக்கு என்றுமே பலிக்கும். இந்த ஆலோசனை கூட்டம் வெறும் டிரைலர்தான். மெயின் பிக்சர் அண்ணனின் பிறந்தநாளான வரும் 30ம் தேதி வெளியாகும்.
அன்று அண்ணன் தனது இறுதி முடிவை வெளியிடுவார். அது புதிய கட்சி பற்றிய அறிவிப்பாகத்தான் இருக்கும். பொறுத்திருந்து பாருங்கள்” என்று நம்பிக்கை தெரிவிகின்றனர்.

மு.க. அழகிரியின் அதிரடி ஆட்டம் ஆரம்பம் ஆகி விட்டதாகவே தோன்றுகிறது. ஸ்டாலின் ‘கிளீன் போல்டு’ ஆவாரா? என்பது தேர்தல் முடிவுகளில் தெரிய வரும்.

Views: - 55

0

0

1 thought on “மு.க. அழகிரியின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்! ஆட்டம் காணும் அண்ணா அறிவாலயம்..!!

Comments are closed.