மோடி பிறந்த நாளில் சாரட் வண்டியில் ஊர்வலம் வந்த விவகாரம் : பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு..!
19 September 2020, 11:45 amசென்னை : பிரதமர் மோடியின் பிறந்த நாளன்று சாரட்டு வண்டியில் ஊர்வலம் வந்த விவகாரத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 17ம் தேதி பிரதமர் மோடியின் 70வது பிறந்த நாளை நாடு முழுவதும் உள்ள பா.ஜ.க.வினர் உற்சாகமாகக் கொண்டாடினர். இதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள கமலாலயத்தில் பிரதமர் மோடியின் 70வது பிறந்த நாளை குறிக்கும் விதமாக, 70 அடி நீள கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பா.ஜ.க.வினர் ஆட்டம், பாட்டத்துடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் சாரட் வண்டியில் ஊர்வலமாக வந்து கலந்து கொண்டார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காலத்தில் கட்சி கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தடையை மீறி சாரட் வண்டியில் ஊர்வலமாக எல்.முருகன் வந்தது சட்டவிரோத செயலாக மாறியுள்ளது. எனவே, எல்.முருகன் மற்றும் அவருன் வந்த 100 பேர் மீது மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.